Tuesday, March 13, 2007

knives & collapses iநான் இருக்கிறேன்
"குஞ்சு குஞ்சு மேகங்கள்
வானில் வட்டமான அம்புலியில்
அம்மா அனேக இரவுகள் சோறு ஊட்டியிருக்கிறாள்"
இந்த வரிகளில் வசந்தி அன்ரி இருப்பதுபோல..

நீ உயிர்த்தெழுந்த படுக்கையில்
நான் இல்லை
நான் இருக்கிறேன்

உனது உதடுகள் எனக்கு சொந்தமில்லையாதலால்
கால்களைத் தேடுகிறேன்
கால்சராயை விலக்கிப் பாதங்களில் முத்தமிடத் துடிக்கிறேன்

இப்படித்தான்--
சிறுமியாய் இருந்தபோது
வசந்தனைத் தேடிப் போனான் தகப்பன்
அவனுக்கு என்ன ஆனதெனக் கேட்டு

பிரசுரங்கள் ஒட்டியபடி நின்றிருந்தவனை
பிடித்துக் கொண்டுபோனவர்களை
அவனது கனவுகள் பிடுங்கும்
கொடும் வதைகளினூடு
அந்த மெல்லிய கறுவல்
இன்னும் உயிருடன் உள்ளானா?
கண்களில் கனவுடன் இருக்கும் அவளது நெஞ்சிற்கு
உம்மிடம் பதில்கள் உள்ளதா?

கேட்ட அவனை, அவனது தோழர்களை
அவர்கள்
ஆயுதங்களாலும் கற்களாலும் எதிர்கொண்டார்கள்
நிராயுதமாய்
கிடைத்த சிறிய ஜீவனை வதைக்கும் மகிழ்வு
சகோதரர்களே உங்களிடத்தில் எப்படி வந்தது?
- அது எங்கிருந்து வந்து சேர்ந்தது?
அமைதி இராணுவம் காவல்நின்றியக்க
மண்டையைப் பிளந்து
கத்தி செருகி
(இப்படித்தான் அவனது ஆன்மாவை ஆயுதங்கள் நெருங்கின
இப்படித்தான் எம்மது கனவுகளுள் சர்ப்பங்கள் நுழைந்தன)

முடிந்தான் என்றார் வைத்தியர்
உறவினர்க்கு அறிவித்து
'சவத்தை' ஏத்த
'வான்' பிடிக்கப் போனான் சகோதரன்
வழக்கத்துக்கு மாறாய் திருநீறு பூசாமல்
அப்பனின் அப்பன் நெஞ்சிரைய ஓடினான்:
"என்ர பிள்ளை என்ர பிள்ளை"
அவனது தோழர்கள் அவனை விடவேயில்லை
பிடிவாதமாய் ஒலிக்கிறது அவர்களது குரல்:
"யாழ்ப்பாணம் கொண்டு போவம்"
"அம்புலன்ஸ பிடி"
அந்த 'வான்' கரடுமுரடான கிராமத்துத் தெருவில்
உயிராபத்துடன் ஓடும்
(அது எந்த கிராமம்? அது உனது கிராமம்)

அவளிடம் யாரும் சொன்னார் இல்லை
வெடுக் வெடுக்கென நடக்கும் கோழிபோல
உள்ளுணர்வுகளில் அனர்த்தம் வெடுக்கென நீட்ட
கைப்பிள்ளையோடு
ஒரு விசரியாய் ஓடினாள் அவள்
(அந்தரா அப்போ உனக்கு வயது நான்கு)
உணர்வுகள் கணமும் காயம் பீரிட்டு வெளிப்பட நிக்கும்
அவளிடம் சொல்ல
யாரும் துணிந்தாரில்லை

வயிற்றலடித்து அழுதாள் அம்மையின் அம்மா
ஐயோ.. என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே
என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே

வன்னிக் காடே உனக்கு நினைவிருந்திருக்கும்
குடா நாட்டுக் கடல்களே உங்களுக்கு நினைவிருந்திருக்கும்
ஒரு கறிக்குதவா மரக்கறியாய்
உணர்ச்சியற்ற மரமாக
'வழங்காத' உடலாக ஏனும்..ஏனும்
'உயிருடன்' கடவுளே
அவனைத் திருப்பித் தா
திருப்பித் தா
- என அவள் கதறிய கதறலை

~~
ஒரு பெயர்ந்த நிலத்தில்
இராட்சத சாலையில்
வாகனங்கள் வீசி
தொலைவில் நான் போயறியாத நிலத்தில்
நீ துயிலுள் போனாய்;
உன்னுடன் நான் இருந்தேன்
நான் இல்லை

சுவையறியாத உதடுடன் உன் கால்களைத் தேடி வருகிறேன்
நீ என் தகப்பன்
)

பங்குனி 01.2007
photo

2 கருத்துக்கள்:

')) said...

வலியடர்ந்த பின்புலம் அறியமுடிந்ததால் மேலும் கிளர்கிறது சோகம். என்ன சொல்ல... என்பதன்றி என்னதான் சொல்ல...?

')) said...

நன்றி தமிழ்நதி..