Wednesday, May 2, 2007

நீத்தார் பாடல்

'...காடுகள், கட்டிடங்கள் நாடுகளின் சிறு சிறு நகரங்கள் கடந்து அதை அடைந்தேன். அந்த உனதென்ற நிலத்தில் தாய்க் கிராமத்தை கிராமத்துக் கிழவிகளை முதிய பாடல்களில் தாலாட்டின் கருவறைச் சூடு தேடி... காடுகள் கழனிகள் நீர்ப் பாசனங்கள் ஊடே வரலாற்றைத் தேடி... மனித சஞ்சாரமற்ற முடிவுறாத வெளிகளிலோ எலும்புகள் துருத்திற சமாதிகளும் ஒப்பாரி ஓலங்களையும் தவிர வேறெதுவுமில்லை; ஒப்பாரியில் தம் தாலாட்டின் வசைமாரி பொழிகிற கிழவிகள் கண்களின் ஆழ் குழிகளுள் இருந்தோ வன்மம் கொலைவெறி கொண்டு துளைக்க.. தலைதெறிக்க ஓடினேன் - முடிவற்ற பாதையில்'
--மகள்களில் ஒருத்தி கூறியது

i.
*அந்தரா, ரூபி, மித்தாலியா
தூரத்தில் என் பிள்ளைகள் கதறின

தூக்கிக் குறிபார்த்து, கல்லை
எறிய - கூடிருந்து சிதறி -
பறவைகள், கலைந்து.
(ஓ.. ஒரு நாயைப் போல கிடந்தாய்)

சேர்ட் பட்டன்கள்
அறுந்து விழுந்த
திறந்த நெஞ்ச மயிர்களில்
சிதறி இரத்த்தம்-
இன்னும் பிளந்தால்
நெஞ்சு வெடித்துக் கதறும்
என் பிள்ளைகள்
இருப்பார்கள்

ஏய், தூக்கிப் போடு ஓரமாய்
செத்த எலியைப் போடுவது போல

ஓலம் வலுக் கின்ற
துணைப் பெண்ணின்
தலை
மயிர் எங்கும் நோய் விரி-ந்து
-0-

மாசி 07, 2006

ii.
உன்னுடைய தசையின் சிறு துண்டு
ஆம்
உன்னுடைய தசையின் ஒரு சிறு துண்டு
இயக்க நாட்களில் 'ஓ.. அந்த முன்பொருபோது'
சமூகம் சொல்லிக் கொண்டிருந்த
இலட்சியங்களின் பொருட்டு,
ஆதிகால மனத்துடன்
சேர்ந்திருந்த நம்
இருப்பிடங்கள் வேண்டும்
என் தொடையிடையே புதைந்துள்ள
தொலை வனங்கள் வேண்டும் - பதறி
எப் புறமும் வீசுகின்ற
தலை மயிர்கள் வேண்டும்
எம் கால்களை நடத்திச் சென்ற
நம்பிக்கைகள் வேண்டும்:
தலையணையின் ஓரத்தே
நெருடலின்றிப் படுத்துறங்கும்
அருகாமை சுவாசத்தில்
தன் இருப்பிருத்தி,
இருதயத்தைப் போல
நொடி நொடியாய்த் துடித் திருக் க
உன் வாசநிறை துண்டொன்று..
உன் தசையின் சிறு துண்டம்;
துவக்குகளின் எசமான்களே
என் இணையின் சிறு தசைத் துண்டை
நாய்க்குப் போடும் எலும்பொன்றாக
சேர்ந்து கண்ட எம் கனவுகளின்
எச்சத்தை
அ-இயக்க நாட்களின் உலை பொசுக்க
கனவழிந்த வெறியோடு உலவும்
அவன் தசைக்கோள சிறு பகுதியை,
~உயிருடன்| எறியுங்கள்
எத்தனையோ நாளாக(ப்)
பவளமல்லிப் பந்தலின் கீழ்
நான் வெறி பிடித்து
முத்தமிட்ட
அவனினது சுந்தர உதடுகளோ
ஆலிங்கித்துக் களைத்திராச் சிறு தோளுகளோ
பிரிய மகளின் ஸ்பரிசம் தருகிற வாஞ்சைகொண்ட
- விழுந்த
என் இணையின்-
சின்னஞ் சிறு துண்டொன்றை...
0


iii.
வரலாற்றின் நெடிய வெளிகளில்
ஒரு பெயரற்று நான் கிடக்கிறேன்
கவிஞன்கள் தலைவன்கள்
யாருமா யில்லாமல்
அணிவகுப்பில் சீருடையின் கீழ் இணைகிற
'வீரனின்' தனித்துவமின்மையாய்
வெற்றுக் கடதாசிகளது ஆயுளாய்
காக்கி உடைகளுள்
போராளிகளுள் போராளியாய்... நகருகிற முகங்களி லொரு முகம்:
ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?
ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் என்னை அறிவீர்களா?

iv.
போர்க் காலம்
நாம் மறைந்திருந்த காடுகள் பாடின
எம்மைப் பக்குவப்படுத்தும்
செம் புத்தகங்களும்
இந்தா.. வந்துவிடும் எனும் புரட்சியும்!
அந்த இனிய.. இனிய நாளுகள்!

காலத்தின் புண்ணிய காலம்
வஞ்சிக்கப்பட்ட தொரு
தாயின் தொடைகளுக்கிடையே
வாழ்வின் ஜீவன்-
வேண்டப்படாதவனாக-
மலைநாட்டின்
சவுந்தரியப் பரப்பில்
பாட்டனும் பாட்டனின் பாட்டனும்
வாழ்ந்தவென் மண்ணில்
பிறப்பைப் பாடுவார் அற்றுப்
பிறந்தேன்
தலைமுறைகளாய் உறிஞ்சப்பட்ட
எனது வேர்கள்;
லயன்களில் தாலாட்டும்
அம்மைகளின்
வீரமும் உரமும்...
என் கனவுகளின்
அடிப்படைப் புள்ளி
அந்த வாழ்விலிருந்து வந்தது--
கூடையைத்
தலையிலே சுமக்குமெம் பெண்களின்
சுமையில் இருந்து.
எம் அருவிகளும் வனப்பும்
வாழ்விற்கு முரணாக
சௌந்தர்யத்தோடு மின்ன-
ஊடறுத்து ஓடும் நதிகளின் ஊடே
தலைவர்களாலும் அதிகாரிகளாலும்
வஞ்சிக்கப்பட்ட நிலத்திலிருந்து,
வஞ்சிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து,
எல்லாவற்றையும் மாற்றிடும் வெறியோடு
நடந்தேன் நான்


v.
1980-களில் பிறந்ததந்த சமத்துவக் கனவு;
ஆலமந்தா..
நம்முடைய இணைபு நிகழ்பெற

போர்க் காலத்தின் நெருக்குதல்களுள்ளும்
நம் சந்திப்பு நிகழ்ந்தது;
பெண்கள் அணியின் தலைவியாய் நீ

வால்கா நதியோரம் ஆரம்பித்த காலடி
பின் தொடர -
உன்னைத் தொடருதல் என்பது அர்த்தமிக்கதாய்-
இனிய, இனிய காலம்

உனதான கருவறையுள்
பாதுகாப்புடன்
நீந்தி வ(ளர்)ந்தன குழந்தைகள், ஓ..
கனவுகள் நொறுங்கிய பிந்தைய இரவில்
அறையுள் நிறைகிறது புலம்பல்:
காலத்தின் அங்கதமாய் 'துரோகி' ஆகிப்போன
- அப்பாவை நினைவு கொள்வீர்களா?
காலத்தின் அங்கதமாய் 'குடும்பத்து அணிகலன்' ஆன
- அம்மாவை அறிவீர்களா?


vi.
கனவழிந்த அவளின் வன்ம விழிகள்
கொலையுண்ட இணையின்
சதைத் துண்டைத் தேடி,
வெள்ளையன்கள் எரித்த கறுப்பனின் தாய்போல..
தலை மயிர்கள் தனியொன்றும்
கொலை செய்ய அலை-ந்து


கொடிய தொரு நாளில்
தேசத்தின் தெருக்கள் எங்கும்
புத்தகங்களைப் போட்டு எரித்தவர்கள்
'இதுகளப் படிச்சிற்றுத் தானியடா
கதைச்செண்டு திரிஞ்சிங்க' என்றவர்
- பற்றிய கதைகளைச் சொல்ல
அவரைக்; காணவில்லை;
அவளோ பேசுவதே யில்லை.
கருகும் புத்தகங்களுடைய செங் குருதியோ
கருஞ் சாம்பலாய்க் காற்றில்
புரட்சிக் கனவின் மீதாக
ஓ..
பேரிச்சம் பழங்கள் உங்கள் வீடு திரும்புதலை நினைவுகூருகின்றன
சீனத்துக் கதைகளோ பிறந்தநாள் பரிசுகளாய்த் தொடுகின்றன
வெருகலில் படுவான்கரையில் தேசத்து
வெப்ப நகரங்களில் சூட்டுக்குச் சாபவர்களை
நினைவுகூர நினைவு
கூர
திக்கின்றி வெறிக்கும்
அவளின் கண்ணீர்க் கறையால்
அழிந்தண்டே போகிறதோ
-பீரிடும் இரத்தத்தினை ஒத்த-
அன்போட மணம் ?


vii.
நான்
வரலாற்றின் முன்
தலை குனிந்துள்ளேன்;
**அவள் சென்ற அதே வழிகளே
எனக்கு முன்னாலும்
சிலரோ பெயர்களாகவே தங்கிவிடுகின்றனர்;
வரலாறோ
மழுங் கடித் தடித்து
காயடித்த மிருகம்
என் சார்ந்த
எல்லாவற்றிலும் அத்துமீறி
நிர்வாணப்படுத்தி
மகிழும் சமூகம்

இங்கே-
இப்படித்தான் கதவுகளை மூடினேன் (இப்படித்தான்)
மனிதர்களை வாசலோடு நிறுத்திச்
சாத்தி (இப்படித்தான்)
குந்தியிருக்கிற தனித்த அறையுள்
அலாவுதினீன் போத்தலுக்குள் அவன்
காற்றாக நுழைவது போல
என்னுடலினுள், வாயூடாக நுழைந்து
உள்ளறைகளுள்
கதவுகள் திற பட திற பட
சென்று கொண்டிருந்தேன் -
இறுதியில் எனதிடம்
ஓர் இடம் இருக்குமென்று.
கதவுகள் திறந்து திறந்து
வழி விட
போய்க் கொண்டே இருந்தேன்;
புறம்வலம் திரும்பிற போதெல்லாம்
சுவர்கள் தன்னிச்சையில்
அப்பரின்
மலை நாட்டுப் பாடல்களைப் பாடி
அழுகின்றன,
மதிப்பற்ற பொருள் ஒவ்வொன்றும்
அம்மாவின் ஆதி இயல்பை
இறைஞ்சுகின்றன

புலனடக்கி உறங்கிப் போய்
அறுத்த மண்டையை
கையில் பிடித்தபடி ஓடும்
இராக் காலக் கனவுகளில்
திடுக்குற்றுப் முழித்து
சாமத்தை வெறிக்கிறேன்;
அதுவோ
தொலைந்த அப்பாவைத் தேடி அலைகிறது
துர்நினைவுகளுடன் நித்திரையற்று அலைந்து
நனவற்று நடந்து, அறைக் கதவு திறந்து,
தொடர்மாடிகளின் ஹோல் வே-க்களில்
நடை நடந்து நடந்து (முடிந்து)
படியிறங்கித் தெரு விறங்கி
நித்திரை குலைந்த அப்பா
வரலாற்றுள்த் தொலைகிறார்
நான் தேடித் தேடி நடக்கிறேன்
ஒவ்வொரு வீடாய், தட்டித் தட்டி
அப்பா எங்கே, அப்பா எங்கே
மீண்டும் மீண்டும்
கதவுகள் திறந்து திறந்து
மூட-
அவரைத்
தேடி ஓடி நனவிற்கு மீட்க முன்னே-
தோட்டாக்கள் பாய
தெருவில் நாயைப் போல
அவர் விழுகிறார்
***.....................................
உச்சஸ்தாயிக்கு
மலை நாட்டுப் பாடல்கள்
எழுகின்றன
கால்கள் பின் நகர
உள்ளுடல் சுவரில் மோதி
நிலத்தில் விழுகிறேன்; சூழவும் இருள்.
அச் சூனியத்துள்
உருவங்களற்று இருந்து
'துரோகிகள்' பேசுகிறார்கள்
-கேள், கேள்.
மனநல விடுதியில்
சன்னல்கள்
திறந்து திறந்து மூட
பேச்சு வலுக்கிறது-
சிங்களக் கிராமங்களில்
ரயர்களுடன் கருகிய
இளைஞர்களின் நிணம் கருகும் மணம்
இரத்தத்தின் நெடி
அவர்களி லிருந்து வீசுகிறது
(எல்லோருடைய இரத்தமும்
கருமை அடரும் சிவப்புத்தானே?)
சகலத்தையும் மறக்க
இறுக்க மூடி
பிணம் நாறும் அறையுள்
உறங்கும் என்னுள்:
பதின்மங்களில்
சொகுசான குழந்தைகள்
கட்டிலில் தம் துணைகளைப் புணர்கிறபோது
தட்டி எழுப்பி எழுப்பி,
இரத்தம் பீரிட தெருவில் விழுந்த
உருவத்தின் இன்மை - அலறுகின்றது
பட்சத்துடன் வாழ்வதற்குரிய தேகத்தின் அணுக்கள்
உடைந்து கொட்-டுண்-ணு-கின்றன
மன அவசங்களுடன்
அங்கஹீனங்களுடன்
கால்களற்ற உடலுறவுகள்,
கொலையுண்டவர்களின் நாவுகளற்ற
இணைகளின் மொழியற்றுப் போன அந்நியம்,
நோய் முற்றிப் போய்
என் நா வறுக்க நிற்கிறது

பிறழ் குரல்களிடமிருந்து தப்ப
நாய்கள் கொல்லப்பட்டுக் கிடக்கிற
உட் தெருக்களெங்கும்-
உடலின் துணி களைப்
பிய்த்தெறிந் தெறிந்து
பழியின் குற்றவுணர்ச்சியூட்டற்
பிடிகளைத் தள்ளி,
நான் -
கனவுகளாலும் நினைவுகளாலும் ஓடுகிறேன்
என் சிறுவத்தைப் பாதுகாக்க

viii.
விதி:
போரிட்ட கைகளோ ஓய்வதில்லை;
ஆயுத விசைகளும் சளைத்ததில்லை
அன்பே, இப்படித்தான் பிந்தைய காலம்
மாறிற்று
எம் அற்புதக் கனவுகளை
நாமே சாகடித்தோம்

'அவனுடன்' நிற்கமுடியாதபோது
வாழ்வை ஓட்ட
லோகாயத சிறைப் பிடிப்புள்
நீ 'எவனுடன்' நிற்கப் போனாய்
உன் சமரசத்தைத் தூண்டியவன் எவன்;
அவன் செய்ததில்லையா சமரசம்? எச் சமரசமும்?

ஓ..
வென்றவனின் வரலாற்றில்
நிலத்தில் எண்களே கூடிக் கொண்டிருக்கிற
'துயிலும் இல்லங்களுள்' இருந்து
இளங் குறிகள் யோனிகள்
போர் செய்ய மறுக் கின்ற
பெரு மோலம் எழுகிறது
கணணி யுகத்துள்
அதைக் கண்டிராத
குக்கிராமங்களில்
தலைமுறைகளின் ஓலம்
வதைகளால் இறுகிய
இராணுவ முகாம்களுள் இருந்தோ
மனம் பிறழும் ஓலம்

ix.
நான் கேட்கிறேன் அதன் ஓலத்தை.
சுடலையின் அமைதியை இடித்து
என் பிள்ளைகள் கதறுகின்றன
*அந்தரா, ரூபி, மித்தாலியா
இந்தப் பேரண்டத்தில் உங்களுக்கென
மரணத்தை விட்டுச் செல்கிறேன்;
மரணத்தின் வெறுப்பை,
துரோகத்தை,
அசமத்தை..
உங்களிடத்தே
ஒரு வடுவாக விட்டுச் செல்கிறேன்

என்றேனும்
துயிலுமில்லங்களில் அனுமதியற்ற
உமது தாயின்/தகப்பனின் வரலாற்றை-த்
தெருவிலே
இயக்குவோன் அற்ற பல
நாடோடிப் பாடல்களில் தேடுவீர்களா? (தேடக் கூடுமா?)

பக்கங்களைத் திருப்பித் திருப்பி
பாடத்திற்காய்ச் சப்பும் புத்தகக் கட்டுக்களுள்
இல்லாத எம் பெயர்களைத் தேடுவீர்களா?
புத்தகங்களைக் கிழித்த்து
தெருவெங்கும் இறைத்த்து
தீயிட்டுக் கொளுத்திய
சந்தர்ப்பவாதங்களின் வெற்றிக் குதியாடலில்
வலுவற்றதொரு பக்கத்தை
நீங்கள் ம(ற/)றுக்காதிருப்பீர்களா..

ஓ.. ஒரு வரலாற்று மாணவியே நீ என்னை அறிவாயா?
ஓ.. எனது இனிய மகள்களே நீங்கள் எம்மை அறிவீர்களா?
~(தேசத்தின் தெருக்களிற் கொல்லப்பட்டுக் கிடக்கிற 'முன்னாள்' (ஆண்/பெண்) போராளிகளின் பிள்ளைகள்/குடும்பங்கள் நினைவுகளிற்கு..)

*இப் பிள்ளைகளது பெயர்கள் வேறு படலாம்...
**சிவரமணி
***கேட்ட எந்ததொரு ஒப்பாரியையும் இவ்விடத்தில் நெஞ்சிலடித்துப் பாடலாம்
----------------------------------------------------
மார்கழி 2005 - சித்தரை 2006

நன்றி: மூன்றாவது மனிதன், 2006 டிசம்பர்?2006?
-யசோதர-

0 கருத்துக்கள்: