Sunday, May 18, 2008

புத்தனோடு உரையாடல்

[Conversation(s) With Buddha]


(1
பிரகாசமான வானத்தில்
எழுதுவதற்கு எதுவும் இல்லை.
எத் துளிர்ப்புமில்லை.
"இறந்த" "நிகழும்"
பன்னூறு காலங்களில்
காத்திருப்பையும் கைவிடப்படுதலையும்
எழுதி எழுதி -
அதன் முடிவிலியில் -
நூலகம் ஓய்வறுந்து...
அப் பழப் புத்தகத் தட்டுகளில்
தூசிகளைத் தட்டி
இனியொரு நூலைத் தொடுகிற போதில்
வேகமான காலடிகளென
என்
இருதயத்தின் சத்தமே கேட்கும்.
உயிர்ப்பை கவர்ந்து செல்லும்
கடல் அலைகளிடம் இருந்த
அன்றைய நாளின் அமானுஸ்யவுணர்வை,
அள்ளிக் கொண்டே(க்)
கடலுள் அமிழ்த்திவிடும் கொடுங் கனவை,
பருமனான மூதாட்டியொருத்தியின்
பெரும் மூச்சிழுப்புடனும்
அமைதியின்மையோடும்
கொண்டு போய்க் கொண்டு போய்த்
தெருவெல்லாம் பதட்டம்,

என்னிடம் அவை கூறின:
இனியொரு போது இவ் வழியால் வராதே
இன்னும்
பல் ஆயிரம் ஆண்டுகள்
இங்கிருக்க வேண்டும் நாம்
உன்னால்
எம் பொறுமையின் தூண்கள் இடிகின்றன
மிக அலைச்சலொடு
அபூர்வமாய்த் தூங்கி விழுகையில்
இளந் தென்றலின் நடமாட்டமும்
தூக்கந் தடுக்க வந்த ஒன்றாய்
எரிச்சலாக ஆகிப் போய்!
...
ஆகவே, தொற்றும் உனதரற்றலோடு
போக்கற்று ஊன்றப்பட்ட
எம் தொடர்ச்சியைச் சீண்டவாய்
இனியோரு போதும்
இவ்விடம் வராதே
இவ்விடம் வராதே


2)
என்னாற் கேட்க முடியவில்லை
எப்படி அவர்களிடம் எனக்கான பதில் இல்லையோ
அப்படியே அவர்களுக்கான பதிலும்
என்னிடம் இருக்க முடியாது.
சிறிய தீவுகளில்
(சிறிய தீவுகளை நீர் சிறிது சிறிதாக(க்) குறுக்கிக் கொண்டும்)
மூடிய அறைகளுள்
(மூடிய அறைகளைச் சுவர்கள் தந்திரமாய் நெருக்கிக் கொண்டும்)
சிறைகளுள்
(திட்டமிட்டு நிதானமாக ஆன்மா அழிபட்டுக் கொண்டும்)
விழுகின்ற
சாவுகளது முந்தைய நொடி
எனக்குள் நடக்கிறது.
கடிகாரத்தினதும், இறுக்கிப் பூட்ட முடியா
மலக்கூட நீர்க் குழாயிருந்து ஒழுகும் நீரின் ஒலியுடனும்,
உறங்கவியலாத 'ராக்களில்
அத் தெருக்களைக் நான் கடக்க வேண்டியிருக்கிறது

அனர்த்தங்கள் நடந்த தெருவாக
என் மேல்
*'இட-நினைவின்' யுத்தங்களிலிருந்து
ரத்தம் வடிய, சதைத் துண்டுகள் சிதறுண்டு
கைகளிடம் சேர்கின்றன
தம் ஆன்மாவை உணர்ந்தறியுமாறா
நாவற்ற ஆவிகள்
பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன ?

தனிமையான இரவுகளில்
அனுபவிக்கவியலாத கேளிக்கைகளதும்
அச்சமிகு கொலைகளதும்
கதைகளைக் கேட்கும் நூலகம்
பெயர முடியாத் தன் கல்லுடலால்
சாபங்களை எறியும்
- அது -
இதுகாலும் பிரக்ஞையற்றிருந்த
தெருக்களிலிருந்து
ஒவ்வொரு
மரங்களுக்கும் பற்ற -
இன்னமும்
என் நெஞ்சம் கனத்துப் போகவாய்
இறுதி சந்திப்பில் - அவள்
தன் காதலனிடம் சொன்னதை
தொலைவிலிருந்து
தம் மொழியின் கணக்கற்ற சொற்களைத் திரத்தி
அவர்கள் கேட்கிறார்கள்;
பக்திமானான தகப்பன்
தன் பிள்ளைகளை இழந்து
வானை நோக்கி
'அந்தக் கடவுளை'க் கேட்கிறான்;
சொற்களற்ற சூனியத்துள்
வெப்பம் பரவி எரிக்க
தெருக்களும் - தாம்
நிலையுண்ட நிலமிருந்து
ஓடித் தப்ப வியலா
மரங்களும் தான் கூறின -

துடிப்படங்கி
இந் நாள் நீலமாக மாறு முன்
என்னுடன் பேசு


Place memory: (இட நினைவு?): Extrasensory perception (ESP) இல்; விஞ்ஞானத்தால் நிரூபிக்கபடாத ஒரு நம்பிக்கை. உ-ம்: பல காலம் முன்னர் நிகழ்ந்தவை (போர்; மனித அழிவு) என்பனவற்றின் நினைவுகளை "இடங்கள்" தக்க வைத்திருக்கின்றன என்பதாயும்; பல காலம் பின்னர், அவ்விடத்தைக் கடக்கிற மனிதர்களில் அதன் கண்காணாத அதிர்வுகள் ஏற்படுவதென்பதாயும்.

0 கருத்துக்கள்: