Thursday, September 25, 2008

___________

அவன் கொல்லப்பட்ட நாள்
இவனது உள்ளுணர்வுகள் சொல்லின
அன்றைய நாள் வழமைக்கு எதிராய்

பிண எண் '1084 இன் அம்மா'
உயிரான ப்ருத்வீயின்
பிரசவ நாளில்
எப்படிப் புரண்டாளோ, அதுக்குக்
கிட்டவான தவிப்பு,
அவனது நிலைகொள்ளா மனதினில்.

தொலைபேசியில்
தழுவ உறவுகளற்ற எல்லைகளுக்கு அப்பாலே
'தகவல்' தரப்பட்ட போதில்
ஓரமாய்ப் போயிருந்து
- போரின் இடையீடு அற்றிருந்த
இனிய நினைவுகளை
சின்ன விளையாட்டுக்களை
வாஞ்சையான சின்னத் தம்பியின்
'குளப்படி' முகத்தை -
நினைவுகொண்டழுத
தன் சகோதரனை இழந்த(அ)வனது பெயரை
தரப் போவதில்லை நான்

பறிக்கப்பட்ட
மகவை-சகோதரரை-நேசகரை உடை
அது உங்களிலும் யாரோவினதுபெயர் !

பறிகொடுத்தவர்கள் தொடர்பில்
உம் வீடுகளில் கவிகிற மெளனத்தை
பிடித்துலுக்கிறது
படத்தறையில் அம்மாவின் விசும்பல்
தான் வாழும் ஒவ்வொரு புதிய நாளிடமும்
வாழாத தன் மகவின் இளமையை
சொல்லிச் சொல்லி அழுகிறாள்
நிலம் அதிர.

விழுகிற வெற்றிடத்தில்
எம் மதுக்குவளைகளை நிறைய - அதிலே
அன்புக்குரியவர் பெயர்கள் நிரம்புகின்றன
உயிர் கொல்லும் அமிலம்
அழிக்கப் போவது உடலையா ஞாபகங்களையா
யாரோ கேட்கையில்
மெழுகுவர்த்திகள் நூர்ந்து
இருள்.
இருள்.
~
2008

*
'1084 இன் அம்மா': மஹாஸ்வேதா தேவியின் நாவல், நக்சல்பாரி இயக்கத்தில் கொல்லப்பட்ட மகனது கனவுகளைத் தேடும் தாயினது கதை.


6 கருத்துக்கள்:

')) said...

வாசித்தேன் என்று சொல்லவே இதை எழுதுகிறேன். சில கவிதைகளைப் பற்றிப் பேசவே முடிவதில்லை யசோதர! எதைக் குறித்தும் பேசும் மனநிலையை ஏதோவொருநாள் இழந்து போவோம் என்று தோன்றுகிறது.

')) said...

யசோதர,
மற்றவர்களின் துயரத்தை பாடுவதென்பதே ஒரு புளங்காகித நிலை. போலியான உணர்வுகளில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். முதலில் மற்றவர்களுக்காக வாழப் பழகுங்கள். பின்னர் மற்றவர்களுக்காகப் பாடலாம்.

')) said...

ம்ம்?!

')) said...

அநாநிமஸ்:
ம்.. மற்றவர்களுக்காக யாரும் வாழ்வதென்பதும், 'மற்றவர்களுக்காக' எழுதுவதென்பதும் ஒரு உயர் இலட்சிய நிலைதான். ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளபோது மற்றவர்களுக்காக எழுதுவதாக சொல்லுகிறவர்கள் கூட உண்மையில் எழுதுவது தங்களுக்காகவாகவே இருக்கலாம் (விதிவிலக்குகள் உண்டு ஆகையால் அதை அவர்கள் அவர்களது தேர்வாக விட்டு விடுவோம்!).
இந்த வலைப்பதிவைப் பொறுத்தவரையில், "மற்றவர்கள்" அதன் நோக்கம் 'மற்றவர்கள் பேச' [ஒரு தளம்] என்றுதான் இருக்கிறது. அதை, பெரும்பான்மை பேசுகிற அரசியலுள் அடங்காதவர்களாக தங்களை உணருகிறவர்கள் பேச என்பதாக -ஒரு வசதிக்காக - வகைப்படுத்தலாம். அதை முழுமையாக இது செய்கிறது என்பதல்ல. அப்படி உணருகிறவர்களது 'சில' குரல்களை அடையாளங் காண முயல்கிறது. அதில் முரண்படுகிறவர்களை உரையாடலுக்கும் அழைககிறது.. அவ்வளவே!
மற்றவர்களுக்காகப் பேச என்று ஒரு இடத்திலும் குறிப்பிடப் படவில்லை. என்னையும் பாதிக்கிறவை தொடர்பாய் எழுதுகிற மிகச் சாதாரண ஒரு நபராய், அப்படியொரு நோக்கத்தின் கீழ் எழுதுவது (மற்றவர்களுக்காக வாழுதல், எழுதுதல்) மிகப் பெரிய பாரத்தை வைப்பதுபோல இருக்கிறது. மற்றவர்களுக்காக எழுதப்பட்டதில்லை எதுவும். எங்களது வலிகளையே நாங்கள் மற்றவர்களதாய் உணருகிறோம். அது எங்களை மற்றவர்களாய் உணருதலிலும், நாங்கள் 'மற்றவர்களாய' இருப்பதிலும் இருந்து வருவதே.

மற்றப்படி, இதில் இந்தக் குறிப்பினைக் குறித்த உங்களது விமர்சனங்கள் இருப்பின் அவை உங்களுக்கேயுரியவை. அவை குறித்து ஆட்சேபனைகள் இல்லை. மற்றவர்களுக்காக வாழப் பழகுமாறு கூறிய பரிந்துரைப்பிற்கான பதிலே இது.. உங்களது வருகைக்கு நன்றி.

')) said...

நன்றி கற்பகம் யசோதரா.

உங்களது வலிகள் மற்றவர்களாய் இருந்து உணரப்படுவதாய் சொல்கிறீர்கள். அவ்வாறே 'மற்றவர்களது' வலிகளை உங்களது வலிகளாக உணருவது உங்களது ஈகோவை திருபதிப்படுத்துவதே தவிர வேறொன்றும் இல்லை..... (நிற்க) எப்போதெனில், மறவர்களுக்காய் வாழ முயற்சிக்காதவரை. 'மற்றவர்களது' துன்பத்தை சாதாரண நிலையில் இருந்து நீங்கள் (உணர்வதிலும்) (பாடுவதிலும்) பார்க்க......

'உங்களது' வலிகளை 'மற்றவர்களது' வலிகளாய் உணர்ந்து பதிவு செய்வதையே ஆண்டாண்டுகாலமாக பலர் செய்தார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள். (சோ.. நாங்கள் அப்படி செய்ய கூடாது என்ற சொல்ல 'நீங்கள்' யார்? என்ற குரல் எனக்கு கேட்கிறது.)

திரும்பவும் நான் சொல்வது எனவெனில், உங்களை மற்றவர்களாய் உணர்வதும், நீங்கள் மற்றவர்களாய் இருப்பதாக நினைப்பதும் 'கட்டமைகப்பட்ட ஈகோ' வினது திருப்தி தொடர்பானதே...... (கட்டமைக்கப்பட்ட ஈகோ !?!?)- (நாம் 'மற்றமை' தொடர்பான கரிசனை உள்ளவர்கள் என அடிக்கடி நம்பும் ?சுயம்.? )

இந்த சுயம் 'உணரும்' போதும் 'பாடும்' போதும் திருத் அடைந்துவிடும்----- சாரப்பட்டதே'''' எனது கருத்து.....

ஆம்.
'மற்றவர்களாய் உணர்வதிலும்', 'மற்றவர்களாய் இருப்பதிலும்' - குறித்த எனது விமர்சனங்களை - எனக்கு விமர்சனங்கள் இருப்பின்,, அவை எனக்கானவை எனக்கூறுகிறீர்கள்.... <-> அது குறித்து உங்களுக்காக ஆட்சேபணை இல்லை என்றும் கூறிச் செல்கிறீர்கள் -- உங்களுக்கு ஆட்சேபணை 'இருக்காது' என்பது தெரிவதுதான் நமது பிரச்சனை..... (எங்கு செல்கிறீர்கள்) 'மற்றவர்களாய்' உணரவும், 'மற்றவர்களாய்' இருக்கவும்...... :( (இருக்கிறீர்களா?)

'மற்றமை' குறித்த உங்களது நிலைப்பாடு எனக்கு புளங்காகிதம் தருவதாய் இருக்கிறது. 'மற்றவர்கள்' பேச தளம் உருவாக்கிக் கொடுத்த கற்பகம் யசோதரா நீண்டகாலம் நீங்கள் வாழ வேண்டும். :)

முரண்படுபவர்களை உரையாடலுக்கு அழைப்பதாகச் சொல்லும் நீங்கள் உடனடியாகவே அடுத்த பத்தியில் உங்களது விமர்சனங்கள் உங்களுக்கேயானவை. அவை குறித்து எனக்கு ஆட்சேபணை இல்லை எனவும் கூறுகிறீர்கள். :( ஆயினும் உடனடியாகவே வருகைக்கு நன்றி எனவும் கூறுகிறீர்கள். :)

3 விடயங்கள்.
1. முரண்படுபவர்களை உரையாடலுக்கு அழைப்பதாகக் கூறுவது முற்போக்கானவர்களாக, நாம் உரையாடலுக்கு தயாரானவர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளும்????--- வெளிப்பாடு......
2. உங்கள் விமர்சனம் உங்களுக்கேயானது. அதுகுறித்து ஆட்சேபணை இல்லை என்கிற உரையாடல் மறுப்புத் தன்மை 'கற்பகம் யசோதராவுக்கானது.' உங்களது ஆழ்மன வெளிப்பாடு.....
3. வருகைக்கு நன்றி கூறுவது வந்தோரை வரவேற்கும் 'பண்பாடு'???

ஆக 3 விடயங்களிலும் 'கட்டமைக்கப்பட்டவை' மாத்திரமே--- பர்வாயில்லாமல் இருக்கின்றது...... :))))

மிகப்பெரிய பாரத்தை வைப்பது போல் இருக்கிறது எனக் கூறுகிறீர்கள். 'மற்றவர்கள்' பேச தளம் அமைத்து தந்த நீங்கள் பாரம் சுமக்க மட்டும் பஞ்சிப்படுவது ஏனோ??? 'மற்றமை', 'மற்றவர்கள்' என்பது பாரத்துடன் தொடர்புடையதே.... அதனைப் பாடுவது புளங்காகிதத்துடன் தொடர்புடையது.... :) 'மற்றமை' அல்லாத விடயங்களால் அமுக்கப்படும் 'மற்றமை' வலிகளுடன் கூடியது..... 'அங்கே' (எங்கே என நீங்கள் கேட்பது புரிகிறது) பாரங்கள் பொருட்டல்ல.... ('அங்கே' தான்....)

(வாசிக்கும் போது கோபப்பட வேண்டாம்..... சிரிக்கவும்.... :))))

உங்கள் அன்பின்,
அநாநிமஸ்.

')) said...

அநாநிமிஸ்:
உங்களது கருத்து தொடர்பான எனது கருத்தை சில நாட்களில் எழுதுகிறேன். நன்றி.