|பாதுகாப்பாய் சுருண்டிருந்த இடத்தினுள்ளும் நுழைந்து நான் கொல்லப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லுங்கள், இந்த வாய்ப்பு உங்களுக்கு வருமா? கடக்கின்ற தெருக்களில் கொல்லப்பட்டுக் கிடப்பவர்களைக் கண்டிருந்தால் தெரிந்திருக்கலாம்; நாளை உங்களுக்கும் அது நடக்க இயலும் நிச்சயத்துடன் அதே தெருக்களில் மீளவும் மீளவும் நடக்க நேர்ந்திருந்தால் தெரிந்திருக்கலாம். அல்லாதபோது, வேடிக்கையாய்த்தான் இருக்கும். நான் கொல்லப்பட்டிருந்தேன். ஆனால் அதிர்ஸ்டவசமாய் சில வரிகளை விட்டுச் சென்றிருந்தேன், அதனாலாய் இருக்கலாம்; என்னையறிந்திராத நீங்கள்: சில கவிஞர்கள் சில எழுத்தாளர்கள் சில --- சில --- சில --- குறிப்புகளை எழுதினீர்கள். அந்தக் குறிப்புகளிலிருந்து எழுந்த இறுக்கம் என்னை அடைத்தது. அதற்குப் பிறகு இங்கு நான் ஒன்றுமேயில்லை என்பது, அதிலும், அந்தச் சொற்கள் என்னைத் திருப்பித் தருமா என்பது, நான் நேசித்தவர்களுடைய காதினில் போய் அன்றைக்குக் கொடிய சிவப்புள் கறுப்புக் கண்ணீர் சிதறுண்ண விழுந்து கிடந்தது நானில்லை என்றவை சொல்லுமா என்பது, என்னைக் கொன்று விட்டது. நான் உண்மைக்கும் செத்துத் தான் விட்டேன்.
பிறகு,
பிறகு,
பிறகு,
பிறகு
ஓ.. மிகவும் பிறகே
இந்த நினைவுகூறல்களின் சம்பிரதாயங்களைக் கடந்து
கனவிலிருந்து
-தனது நினைவுகள் - விழித்தெழுந்த என் பிள்ளை
தன் நரம்பொன்றை அறுத்து
"நீ செத்துப் போனாய்
ஆனால்
நீ செத்ததை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் - பிறகு
ஒவ்வொரு நாளும்..." என்றெழுதத் தொடங்க
அதிருந்து சிதறுண்டு
கறுப்பாய் உருமாறிய ரத்தத்தில்
நீங்கள் எழுதியதெல்லாம் கழுவுண்டு போயிற்று;
இப்போது
இந்த ஓலங்கள் மிகுந்த ஆஸ்பத்திரியில்
நிரம்பி வழியும் பிணவறைக்கு வெளியே
உயிருடன் எனைத் தேடி
நரம்புகள் அறுக்க ஆயத்தமாய்
என்னும் எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?
சொல்லுங்கள். எழுதுவதற்கு இலக்கங்கள் முக்கியம்|
KAYA
ஏப்ரல் 1?, 2007
சந்திரபோஸ் சுதாகருக்கு; தகப்பன் துர்கனவில் மூச்சையடங்கியபோது விழித்த அவரது மகனிற்கு, வலி மிகுந்த பிரியங்களுடன்
Wednesday, May 2, 2007
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 5:17:00 PM 0 கருத்துக்கள்
Subscribe to:
Posts (Atom)