Thursday, December 28, 2006

எங்களின் எசமான்களே...

ன்று இவனைக் கொல்லலாமென
உமக்குத் தோன்றியது
இவன் XX அல்ல
இவன் XXXX-உம் அல்ல
இவன் இன்ன பிறன் அல்ல.
ஓர் அரசூழியன் என்ற வகையிலும்
உங்களுக்கு "பிரச்சினை"யாய்
இருக்கக் கூடியவனும் அல்ல
அரசியலேதுமற்று
"அநியாயத்துக்கு" அப்பாவியாய்

இருந்தும்
ஓர் தோட்டாவை
போட்டுவிட்டால்
அவன் "கதைப்பதை"

கேட்கவேண்டியதில்லை என்று நினைத்திருப்பீர்களோ.
2006-ஆம் வருடம்
தோராயமாய் 27 ஆண்டுகளிற்குப் பிறகு
ஒரு விரல் சொடுக்குள்
ஒருவனைக் கொல்லும் கலையை மட்டும்
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே
வளர்த்து வைத்து நிற்கிறீர்களே










KAYA

Sunday, December 24, 2006

ஆரம்பித்தல் ---



ழம்:
இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் ஆரோக்கியமானன விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.

இத் தளத்தின் பதிவுகளின் அடியில் பதியப்பட்டுள்ள கைச்சுவடு எடுக்கப்பபட்ட இப் புகைப்படத்தை படம்பிடித்த புகைப்படப்பிடிப்பாளர் பெயர்:ஹேற் Bபுறூக்ஸ்
~~

Tuesday, December 19, 2006

யுத்தத்தை நிறுத்தியிருந்த போது

1
இன்னுமொரு கொலை நாள்!
படுவான்கரைகளில் எக்ஸ் - எக்ஸ் அம்மான்
தன் அண்ணரைத் தேடி அலைகிறார்
அண்ணன் பொம்மானை…

அங்குமிங்குமென
அண்ணனும் தம்பியும்
தம் எதிரியரைத் தேடித் திரிகிறார்
நான் என்னைத் தேடுகிறேன்
கொலைகள் எனது கனவை அழித்தன
கொலைகள் எனது இரவை அழித்தன

என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
அவர்கள் என்னை அழிக்கு முன்
புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும்
எனது வீட்டில் தீக்கிரையாகின
என் கைகளின் இரத்தக் கறை
தீ மூட்டிய
உன் கண்ணீரால் கரைந்து அழிய
அதை உன்னிடம் தந்திருந்தேன்
ஏனோ அது அழியவில்லை
அதிகாரத்தைப் பழி சொல்லி
வெறித்தவுன் நேரிய பார்வை
வீழ்த்தப்பட்ட என்னிடம் வருத்தம் தருகிறது

நம்பு!
நான் எதுவும் அறியேன்,
வீடு திரும்பிய ஓர் அதிகாலையில்
படலையில்
என்னைச் சுட்டுச் சென்றது கூட
"அவரா" "இவரா" தெரியாது
என் இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
உடலிற் பொட்டுத் துணியோ
என்றோ முத்தமிடப்பட்டதான அதிர்வுகளோ இன்றி
--யாரும் ஏன் முத்தமிடவில்லை?--
அதன் வலி பகர
முகம் அற்ற
ராணுவம் வெட்டிப் போட்ட
முண்டங்களில்
தெகியோவிற்ற, தெரணியகலை
இறப்பர்த் தோட்டங்களில்
அல்லைப்பிட்டியில்
பத்திரிகை அலுவலகங்கள் வரை
வீழும் உடல்கள் முன்
நீ தலையிலடித்-தடித்-தழுவது
பிரயோகிக்கப்படாத குறிகளுக்காக

நீலம் பாரித்து வரண்டிரா
சாவுக்கு முந்தைய காலத்து
அழகிய உதடுகளால்
என்றுமே அறியப்படா ஆசை முத்தத்திற்காக..

ஓர் இனிய முத்தம் - அது இவ்
உதட்டுத் தசைகளில் எப்படி உணரும்?

நம்பு
வாளால் வெட்டப்பட்டபோது
துவக்கால் சுடப்பட்டபோது
கொட்டான்களால் தாக்கப்பட்டபோது
எனது இதயம் அழுததும் அதற்காகவே!
எவருமே கண்டிரா
எனது நிர்வாணப்பட்ட உடல்
ஓர் பிரச்சாரக் கருவியாகி
பிரசுரிக்கப்பட்ட போதிலும்
நான் அழுதது அதற்கே…
போகும் திசையறியாப் போரின் கண்ணிகளுள்
எதையும் சொல்ல வாய்ப்பின்றிப் போய்
கழுகு தின்னத் தீனியாக
இந்தத் தெருவில் கிடப்பவன்
எப்படி நானாக முடியும்?

சைக்கிளை மிதித்துக் கொண்டு
பிரதேசத்தின் வயல் வெளிகளில்
இன்னுமொரு கொலைநாளில்
ஓர் இன்னுமொரு கொலைநாளில்
உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி
வதைமுகாம்கள்
இராணுவ முகாம்கள்
சோதனைச் சாவடிகள் ஊடு
முகமூடி"யாரோ"
எதிர்ப்படும் நொடி வரையில்
இரண்டு சகாப்தங்களாய்
யாராலோ கொல்லப்படுவதற்காகவே
காலங்கள் சுழலும்
இத் தெருக்களில்
போய்க் கொண்டிருக்கிறேன்

வைகாசி 2006

2

ஒவ்வொரு இரவும் பகலும் தனிமையை வாழ்தல்;
பெரும்பான்மை கூக்குரல்கள் ஒலிக்க ஒலிக்க
தொண்டையிருந்து வரும் சிறிய ஒலி
ஆற்றாமையோடு அடங்க
பேசுகிறவர்களாக நீங்களே இருப்பீர்கள்
சகல அதிகாரங்களும் உரியவர் நீங்கள்
உங்களை மீறிப் பேசுதல்
எங்கோ
ஒளித்துக் கொண்டும்
உள்ளே சுருங்கிக் கொண்டுமே சாத்தியம்
வெளி விரும்பும்
எல்லைகள் கொண்டாடாத ஒன்று
சுருங்கிச் சுருங்கி
எழுப்பும் தன் ஒலி
அதை மறுக்கும் உம் ஒலி
இக் குறிப்பில்
தன்னை நுழைக்க விரும்பும் நான் போல
எம்மைக் குறித்த எல்லாவற்றிலும்
ஓட்டை இருக்கென்பதால்
வரவேற்கிறோம் என்ற விச்ராந்தியுடன்
அதிகாரத்தை நுழைத்து
கொலைகளாயும்
ஒரு வயதுக் குழந்தையின்
மூத்திரப் போக்கியுள் நுழைவதாயும்
நெஞ்சுள் வலி பிளக்கும்
ஒரு காட்சி மாற
மறு காட்சி
கைகளில் ஒடுக்கப்பட்டவனி/ ளின் மண்டையுடன்
பற்கள் ஒளிரத் தெய்வங்கள் எழுந்தருளுகிறீர்கள்

சிலவேளை
அது அந்த ஒடுக்கப்பட்டவனின் கரத்தில்
நீங்களாக அல்லது நானாக
உருமாறுகையிலோ
உடைப்பெடுக்கத் தயாராகும்
கேள்விகளுடன்
மூளை சிதறுகிறது:
அவனா இவனா
எந்தப் பக்கம்
நிகழ்பெறும் அநீதியை
ஏற்பதா விடுவதா
உடன்படுவதா எதிர்ப்பதா

அப்பால்
தேசத்தில் தலைவர்களோ
தமது சுந்தரமான சிரிப்புடன்
மொழுமொழுக்கும்
தம் குறும்புமிகு குழந்தையை
கொஞ்சுகிறார்கள்;
அவர்கள் கட்டளைக்கு ஆயத்தமாய்
வரிசையில் நிற்கின்றனர்
ஆயுதங்கள் தாங்கி சிறிய, மிகவும் சிறிய
தேசத்தின் பிள்ளைகள்.

ஒடுக்கியவனையும் ஒடுக்கப்பட்டவனையும்
அடையாளம் தெரியாத தெருக்களில்
நாங்களும் நீங்களும் திரிகிறோம்;
சனங்களாக
அங்கிருந்துதித்த
அறிவுஜீவிகளாக
சந்தர்ப்பவாதிகளாக
"துரோகி"களாக
மேலும்
வரலாற்றிற் பதியப் பெயர்கள் அற்ற
உயிர்களாக…
எமது கைகளில் "இழந்த" "கொன்ற"
எல்லாவற்றினதும் கதை கூறும்
இறைச்ச்சித் துண்டு
பிரியமானவர்களின் ஒரே ஓர் எச்சமாய்,
பதுக்கப்பட்டு,
கடந்த வதைகளின் தடங் காட்ட
வன்மங் கொண்டு நிற்கிறது

யுத்த காலம்
இப்படித்தான் தன் துணையிழந்து
இங்கே ஒரு பெட்டை நாய்
தனது குட்டிகளை வளர்க்க
உங்கள் விசர் தீர்க்க
தனது குறியை
"இருக்கிறதும் கிழிய" விட்டபோது
அத்
தீராக் கிடங்கில் விழுந்து
எழுந்த
ஒருத்தன் சுட்டான்
எக்களிப்புடன்
வெட்கங் கெட்டவன்கள்
ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்
தம் பத்திரிக்கைகளில் அடித்த்தார்கள்:
"தெரு நாய் கொலை!"
ஆனால் அருகிருந்து கதறிய பிள்ளைகள் அழுதது
திசையறியா ஓர் எதிர்காலத்தின் மீதாக.
அவை அழுதன,அழுதன, தொடர்ந்து அழுதன...
தெரு நாய்கள் கூடி
இரவுகளில் உங்கள் கனவுகளில்
தொலை தூரத்தில்
ஒரு பெண் படு துக்கத்தில் விசும்பி விசும்பிப் பின் அது
வெடித்து அழுகையானது போன்ற சங்கிலிக் குரைப்பு
நிம்மதி குலைத்து
கிராமங்களில் ஒலிக்க
இராவில் பெருகும் தெரு நாய்கள்
துரத்தி
நிம்மதி குலைந்து ஓடும் உங்களைக் கவ்வ,
சிதறும் விச விந்துக்கள் போல
குருதிச் சொட்டுக்கள் சிதறச் சிதற
விழுந் தெழும்பி ஓடும்
உங்கள் சதை குதறித் தின்ன
வேட்டைப் பற்கள்
தேச மெங்கும்
கூர் மின்னி

ஆனி 2006

3

கருணையின் திருவுருவாய்ப் பெரும்பான்மை இருப்பதாலேயே
"நான் X நீ" ஐக் கடக்க முடியாது
பிரதிகளில் உன்னைச் சுட்டி
-என்னால் முடிந்தது!-
எக்காளமிடுகிறேன்
எனினும் நீயே கருணை
உன் பெரும்பான்மை நிம்மதியை
என் தரவுகள் குலைக்குமென
சராசரியிலிருந்து விலக்கி
மேய்ப்பனின் ஆடுகளுள் நொண்டிச் செல்லுகிற ஒன்றாய்
என்னைத் தனிமைப்படுத்தி முறியடிக்கிறாய்
நீ அறிய விரும்பிற 'உண்மை'யின்
அளவை மீறும் தரவுகள்
உன் சகிப்பெல்லையைத் தாண்டுகிறபோது
பதறி
சந்தர்ப்பம் தகுந்து வார்த்தை ஆடும் "நீ" சொல்லுகிறாய்!
உணர்வுகள் கொப்பளிக்காத
குளிர்ந்த இதயம்
கொம்புகள் முளைத்த அறிவுஜீவிதத் தலை
குலத்தை அழிக்கும் கோடரிக் காம்பு!
கருணையின் திரு உருவே!
சிந்திப்பது எப்படித் தவறாகும்?
மண்டைகள்
உனக்கு ஆட்டுவதற்காய் உருவானவையா?
மூளையுள் முளைவிடும்
தனித்துவ எண்ணங்கள்
உணர்வுகள் மரத்து
உறைந்த குறிகளாய்
பழகிப் போய்
கேட்பாரற்று வரண்டு போன
உயிரின் ஆதாரங்களா?
புத்தி நேர்மையும்
உலகத்து ஒடுக்குதல்களை
எதிர்க்க முனை பார்வையும்
முற்றிலும் நஞ்சு என்று
என்/நீர் குறித்துப் புரளி நீ கிளப்பிவிட்டாலும்
தன்னை மீறி ஆவியாகி
சித்ரவதைக் கூடங்களில்
கொடும் வதைகளில்
தற்கொலை செய்யக் கதறும்
கைதியின் ஆன்மாவுள்
வீதியில்
தாக்கப்பட்ட ஒரு மூன்றாமுலகப் பிள்ளையின்
கண்களில்
பொழியலாகும் அது…
உனது கருணை உனக்கே சொந்தம்
அது
உனது கண்களில் மட்டுமே வழியும்

^
ஆனி 2006
கற்பகம் யசோதர
நன்றி: சத்தியக்கடதாசி