{புதினம்.கொம் இணையத்திலிருந்து}
(2 ஆம் இணைப்பு)காணாமல் போன உறவுகளை மீட்டுத்தர லூய்ஸ் ஆர்பரிடம் கதறிய உறவினர்கள்
[வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 18:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர்.
கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஐ.நா. அலுவலகத்திற்குள் போதிய இடவசதி இன்மையால் காணாமல் போனவர்களின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேர் இந்த சந்திப்பிற்காக ஐ.நா. அலுவலகத்திற்குள் வருமாறு அழைக்கப்பட்டனர்.
அதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரைச் சந்தித்து தமது கவலைகளை வெளியிட்டதுடன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனைவரினதும் சார்பிலான கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவித்தனர்.
காணாமல் போன உறவினர்களின் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளரிடம் மக்கள் கண்காணிப்புக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் மற்றும் காணாமல் போனவர்களின் சார்பில் சிலரும் உரையாற்றியதாக மக்கள் கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
காணாமல் போனவர்களின் கண்ணீர்க் கதைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடத்தல்கள் மற்றும் கப்பம் கறக்கும் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்தும் இந்த விடயத்தில் அரசின் மௌனம் குறித்தும் அவருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக தெரிகிறது.
கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகமானது வான் படையினரின் அலுவலகச் சுவரோடு ஒன்றித்து இருப்பதால் அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான வான் படையினர் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
முன்னதாக கொழும்பில் உள்ள மக்கள் கண்காணிப்புக்குழு அலுவலகம் முன்பாக இன்று முற்பகல் முதல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் குவியத்தொடங்கினர்.
அவர்களில் பலர் புதிய முறைப்பாடுகளைக் கொண்டிருந்ததால் அவர்களின் முறைப்பாடுகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரமாக அங்கு அவர்கள் காத்திருந்தனர்.
கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சுமார் 4 மணியளவில் இவர்கள் திரண்டனர்.
அந்த மக்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென அழுதுகொண்டே இருந்தனர்.
மக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரமுகர்களும் அந்தப் பகுதியில் பிரசன்னமாகி இருந்தனர். மக்கள் கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் முக்கிய பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் உட்பட மக்கள் கண்காணிப்புக் குழுவின் வேறு முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்திருந்தனர்.
மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த இவர்கள் அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிப்பதாக உறுதிமொழி வழங்கினர்.
தம்மையும் இந்த சந்திப்புக்கு உள்ளே அழைத்துச் செல்லுமாறு அங்கு நின்ற பலர் கோரிக்கை விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.இச்சந்திப்பில் திருகோணமலையைச் சேர்ந்த வாசுகி கூறியதாவது:
எனது கணவரின் பெயர் அன்னரன் போல் எல்றின் மத்தியூ கொழும்பில் உள்ள சிறிலங்கா துறைமுக அதிகார சபையில் வேலை செய்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது 7 வயது மகன் அடிக்கடி அப்பா வருவாரா வருவாரா என்று கேட்கிறான். நான் என்ன சொல்ல (கதறலுடன்....தொடர்ந்தார்)
எமக்கு இப்போது சரியான கஸ்டம். அவர்தான் எங்களது செலவுகளைப் பார்த்து வந்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது மகனை கல்வி கற்க அனுப்ப முடியவில்லை. அதற்குப் பணம் இல்லை. மதகுருமாரிடம்தான் எனது மகனின் கல்விக்கு உதவி கேட்டுள்ளளேன்.
நான் ஒரு கடைக்கு வேலைக்குச் சென்று உழைத்து எனது மகனுக்கு சாப்பாடு போடுகிறேன். கொழும்பிற்கு ஐந்து முறைக்கும் மேலாக வந்து கணவரை மீட்டுத்தருமாறு முறையிட்டு விட்டேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திருகோணமலையில் இருந்து வந்து போவதற்கே 3 ஆயிரம் ரூபா வேண்டும். என்ன செய்ய? எனது கணவர் எனக்கு வேண்டும். அதற்காக எந்தளவு கஸ்டத்தையும் நான் அனுபவிக்கத் தயார். தயவு செய்து கணவரை விட்டுவிடுங்கள் என்றார்.
கண்மணி என்ற பெண் கூறியதாவது:-
எனது சகோதரனை கடத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அனைத்து இடத்திலும் முறையிட்டு விட்டோம். எவருமே உரிய பதிலை தரவில்லை.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருடன் சந்திப்பு இடம்பெறுவதாக பத்திரிகையில்தான் பார்த்ததேன். அதனால் சிலாபத்தில் இருந்து வந்திருக்கிறேன்.
நாம், அழுது அழுது எங்களது கண்ணீர் வற்றிவிட்டது. இனியும் எம்மால் அழ முடியவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்த்த எனது சகோதரனை ஏன் கடத்த வேண்டும்?.
இராணுவத்தினர்தான் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். நான் இராணுவ முகாமுக்கு போய்க் கேட்க, தாங்கள் கடத்தவில்லை என்று கூறுகிறார்கள்.
சி.ஐ.டி கடத்தியதாக கூறுகிறார்கள். நான் எங்கு போய் சி.ஐ.டியினரைச் சந்திப்பது? ஐயா, தயவு செய்து ஒரு தப்பும் செய்யாத எனது சகோதரனை விட்டுவிடுங்கள். நான் யாருடைய காலிலும் வீழ்கின்றேன். எனக்கு எனது சகோதரன் வேண்டும் என்றார்.
(
Monday, October 15, 2007
கண்ணீர் வற்றிவிட்டது
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 9:30:00 AM 0 கருத்துக்கள்
Labels: ஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து
Subscribe to:
Posts (Atom)