Monday, November 12, 2007

இரணைமடு 2007













நா
ன் இறந்தபோது
எனது தகப்பன் மரங்களுடன் பேசத் தொடங்கினான்
அவன் பேசியதோ
அம் மண்ணெல்லாம் அடியுண்டு, 'வீரம்' பேசிப் பொங்கித்
திரிந்த ஓர்நாளில்
தன் கண்முன்
விழுந்த உயிருகளின் ரத்தத்தால் அழிக்கப்பட்ட
தன் இளமை பற்றியதாயோ; அக் காலங்களைப் பிதற்றிய
'கவிதை'களைப் பற்றியதாயோ இல்லை

கொலைவெறியுடன் சுற்றும் கிபீர்கள் குறிகளில்
விழுந்த உடல்களது குருதிபட்டும், துளைபட்டும்
சேதமிருந்த
மரங்களின் தேகத்தை தடவியபடி
அவர் நெடும்நேரம் பேசினார்...
சிலவேளை:
கேசவன் குட்டி, நீ, முன்பொருபோது
செத்தவீடொன்றில் ஓரமாயிருந்து
சிறு குழந்தையொன்றை உறங்குமாறு
முதுகிற் தட்டி
தாலாட்டுகையில் உதிர்த்த சொற்களின் சாந்தம்
அது கொண்டிருந்தது;
ராவுகள் பகலுகள் அம் மரங்களை நாள்வைத்து
கட்டிக்கொண்டு கிடந்து முத்தமிட்டு, பசிக்கையில்
வானத்தை நோக்கி ஏசிக்கொண்டு
அவர் நடக்கும்வரை...
பேரனைத் தடவும் பாட்டனின் கதைகளின்
பவித்திரமென, அது
அவ்விடமிருந்து கொண்டிருக்கும்

அவர் போன பிறகு, கடவுளே...
மரங்கள் அழுதன
ராவுகள் பகலுகள் யாரும் அருகிலிர முடியாத
பயங்கர அழுகை
அப்போதுதான் பாதியும் உண்ணாதவனாய்
எனது தகப்பன் திரும்பி ஓடி வந்தான்
யாருமே காணாதபடி
'ஒரு பயித்தியத்தைப் போல' கத்தியபடி
அதைச் சடங்கென்று சொல்வார்களானால்
அவையே நடுங்குவன போல
ஒவ்வொரு மரங்களாய்
சுற்றி சுற்றி
ஐய்யோ எனது பெயரைத்தான்
சொல்லிக்கொண்டிருந்தான்....
\
4:17 விடிகிறது?
நவம்பர் 12, 2007