Friday, March 14, 2008

மீளத் தலைதூக்கும் பயங்கரம்:

இலங்கையில் 'காணாமல்போதல்கள்'
மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு


[human rights watch]
சாராம்சம்

லங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 2006 நடுப்பகுதியிலிருந்து மீண்டும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கும் நிலைமையானது, இலங்கையில் கடந்த காலத்தில் மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் "காணாமல் போதல்கள்" நடந்தேறிய மறக்க முடியாததும் அச்சம் மிகுந்ததுமான சூழ்நிலைமையையே மீளவும் நினைவுக்கு கொண்டு வருகின்றது. 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட மோதல் தவிர்ப்பானது ஏற்கனவே உத்தியோகப் பற்றற்ற விதத்தில் முறிவடைந்திருந்த நிலையில், 2008 ஜனவரியில் அது உத்தியோக பூர்வமாக செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையில் எதிர்வரும் காலங்களில் ஆயுத மோதல்கள் மிகவும் மோசமடைவதற்கான வாய்புக்களே அதிகமுண்டு. இதுவரை காணாமற் போய் எந்தவித தகவலும் தெரியாதிருக்கும் நபர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன என்பதைக் கண்டறிவது தொடர்பாகவும் அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கமானது மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காவிட்டால் மீண்டும் 2008ம் ஆண்டிலும் பாரிய அளவிலான "காணாமல் போதல்கள்" நிகழ்வதையே காணக்கூடியதாக இருக்கும்.
பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கில் நடைபெற்றுள்ளமையானது உலகில் ஆட்கடத்தல் சம்பவங்கள் மிக அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பெயர்பட்டியலில் இலங்கையையும் இட்டுள்ளது. இத்தகைய "காணமால் போதல்களினால்" முக்கியமாக பாதிக்ககப்பட்டிருப்பவர்கள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே. இவர்களில் அநேகர் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த மோதல்கள் நிகழும் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலிருந்து மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலிருந்தும் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்கள் முறையான சட்ட நடவடிக்கைக் கூடாக கொண்டு செல்லப்படாமல் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்படுவதை நியாயப்படுத்திவிட முடியாது. இவர்களில் அநேகமானோர் இறந்து விட்டதாகவே அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது அதன் மோசமான இயலாமையையே வெளிக்காட்டி இருக்கின்றது. கடத்தப்பட்ட அல்லது "காணாமல் போன" தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம் கடமையைச் செய்வதில் தவறியுள்ளனர் என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் நேர் காணப்பட்ட பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தவறின் விலை மிக அதிகமானதாகும். இதனை மிகக் கொடூரமாக பறிக்கப்பட்ட உயிர்களினால் மட்டுமன்றி "காணாமல் போன" தமது அன்பிற்குரியவர்களுக்கு நேர்ந்த கதியென்ன? என என்றுமே அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் தவித்தபடி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் மனைவிமார்கள் படும் மன அவலத்தினாலும் கூட அளவிட முடியாததாகும். எந்த விதத்திலும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத வகையில் இத்தகைய கொடூர சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதால், அச்சமும் நிட்சயமற்ற சூழ்நிலைகளுமே இச் சமூகங்களினால் பெரிதும் உணரப்படுகின்றன.
2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. "காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவதுடன், நடைமுறையில் உண்மையான குற்றவாளிகள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு இச்சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் திரட்டும் பணியில் மிக சொற்ப அளவிலேயே அது செயற்படுகிறது. இந்த நிலைமை தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்கள் எவ்வாறு பயனுறுதிமிக்க வகையில் இவ்விடயத்தில் தமது பிரதிபலிப்பைக் காட்ட வேண்டுமென்பது தொடர்பான விசேட பரிந்துரைகளையும் இந்த அறிக்கை அதன் முடிவில் கொண்டுள்ளது. இவ்வறிக்கையின் பின்னிணைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் ஆவணப்படுத்தப்பட்ட 99 சம்பவங்களின் விரிவான தகவல்களை கொண்டுள்ளது. இலங்கை மனித உரிமை அமைப்புக்களால் ஆவணப்படுத்தப்பட்ட 498 சம்பவங்கள் தொடர்பான தகவல்களை http://hrw.org/reports/2008/srilanka0308/srilanka0308cases.pdf
என்னும் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளமுடியும்.
0 0 0
சர்வதேச சட்டத்தின் கீழ் அரச சக்திகள் ஒரு நபரை தடுத்து வைத்து சட்டத்தின் பாதுகாப்பு அவருக்கு கிட்டாத வகையில் அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதை அல்லது அவர் எங்குள்ளார் என்பதை ஏற்க மறுக்கும் சூழ்நிலையிலேயே பலவந்தமான முறையில் காணமல் போதல்கள் நடைபெறுகின்றன.
இலங்கையில் "காணாமல் போதல்கள்" என்பது மிக நீண்டகாலமாக ஆயுத மோதல் செயற்பாட்டுடன் இணைந்தே நடைபெற்று வந்துள்ளது. 1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இடதுசாரி சிங்கள தேசியவாத அமைப்பான ஜனதா விமுத்தி பெரமுன மேற்கொண்ட குறுகியகால ஆனால் மிக வன்முறையான எழுச்சியின்போதும், தமிழ் தேசியவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்@ர் யுத்தத்தின் போதும் ஏற்;பட்ட ஆயிரக்கணக்கான "காணாமல் போதல்களுக்கு" அரசாங்கப் படைகளே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது.
பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பது மோதலின் முக்கியமானதொரு குணாம்சமாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட எண்ணிக்கைகளின்படி 2005 டிசம்பர் மாதத்திற்கும் 2007 டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 1500 பேர்வரை "காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்படுகின்றது. இவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலருக்கு என்ன நடந்தது என்பது அறியப்படாமலேயே இருக்கிறது. இவர்களில் அநேகமானோர் "காணாமல் போயுள்ளனர்" அல்லது கடத்தப்பட்டுள்ளனர் என்பதாகவே சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) "காணாமல் போனவர்கள்" தொடர்பான தனது புள்ளிவிபரங்களை இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் 2006ம் ஆண்டில் 1000 சம்பவங்களும், 2007ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 300 சம்பவங்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்கு அறியக் கிடைத்துள்ளது.
மோதல்கள் நிகழும் பிரதேசமான வடக்கு கிழக்கிலேயே, குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலேயே "காணாமல் போதல்கள்" மிகக் கூடுதலாக நிகழ்ந்துள்ளன. கொழும்பிலும் பெருமளவிலான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக முறையிடப்பட்டுள்ளன.

யார் பொறுப்பு?

இலங்கையில் உள்ள அமைப்புக்களினாலும் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் பெருந்தொகையானவற்றில் அரசாங்க பாதுகாப்பு படைகளான இராணுவம், கடற்படை அல்லது பொலீசாருக்கே தொடர்புகள் இருப்பதாக சாட்சியங்கள் காண்பிக்கின்றன. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை நாட்டில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் அவர்களின் கரங்களை பலப்படுத்தியிருப்பதோடு, நீண்டகாலமாகவே ஜே.வி.பி. மற்றும் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளின்போது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளான காணமல் போதல்கள் மற்றும் மொத்தமாகப் படுகொலை செய்வது போன்றவற்றிலுமே இராணுவம் தங்கியிருக்கின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆவணப்படுத்திய பல சம்பவங்களில், "காணாமல் போன" தமது உறவினர்கள் எந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள், எந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என அக்குடும்பத்தினர் மிகச் சரியாகவே அறிந்திருந்தார்கள். சில வேளைகளில் அவர்களை கூட்டிச் சென்ற இராணுவ வாகனங்களின் இலக்கத் தகடுகளைக்கூட குடும்பத்தினர் அறிந்திருந்தார்கள்.
ஏனைய பல சம்பவங்களில், ஆயுதம் தரித்த பத்துப் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள இராணுவ காவலரண்களில் இருந்தும் இராணுவ வீதிச் சோதனைச் சாவடியிலிருந்தும் அல்லது வேறு இராணுவ முகாம்களிலிருந்தும் வந்தே நபர்களைக் கூட்டிச் சென்றுள்ளனர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இக்குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சிகளால் அடையாளம் காண முடியாவிட்டாலும் பெருந் தொகையான ஆயுததாரிகள் இராணுவத்தினருக்குத் தெரியாமல் ஊரடங்குச் சட்ட நேரங்களில் இப்படி சுதந்திரமாக உலாவ முடியாது என்பதால் இக்கடத்தல்களில் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருக்கின்றது என்றே அவர்கள் நம்புகின்றனர்.
நபர்கள் காணாமல் போவதற்கு முன்பாக சீருடை தரித்த பொலீசார், அதிலும் குறிப்பாக குற்றவியல் விசாரணைப் பிரிவைச் (CID) சேர்ந்தவர்களே தமது உறவினர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றே அநேகமான சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அந்த நபர்களை விசாரணைக்கு உட்படுத்தவே தாம் கொண்டு சென்றதாக பொலீசார் கூறுகின்றனர். ஆனால் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள் என்பதையோ அல்லது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்வதற்கு தேவையான ‘ரசீதையோ’ அவர்கள் கொடுப்பதில்லை. இந்த கைதுகளின் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய எந்த விபரங்களையும் உறவினர்களால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
பாதுகாப்பு படையினர் இத்தகைய “காணாமல் போதல்” சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இலங்கையின் அவசரகாலச் சட்டமானது மிகவும் வாய்பாக இருப்பதோடு அவர்களுக்கு ஒட்டுமொத்தமான அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவதிலிருந்து தப்புவதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்குகின்றது. தற்போது அமுலில் இருக்கும் இரண்டு அவசரகாலச் சட்டங்களினதும் பல பிரிவுகள் ‘காணாமல் போதல்களுக்கு” மிகவும் ஊக்கமளிப்பனவாக அமைந்துள்ளன. ஒரு உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டின் பேரில்கூட ஒருவர் பிடியாணை (Arrest Warrant) இல்லாமல் கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம். உத்தியோகபூர்வமாக நபர்களைத் தடுத்து வைக்கும் இடங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களின் உடல்களை எந்தவித மரண விசாரணையோ அதன் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படாமலோ பாதுகாப்புப் படையினரே அழித்து விடலாம். இத்தகைய விடயங்கள் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடைபெறுவதை தடை செய்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அரசாங்கப் பாதுகாப்பு படையினருடன் இணைந்தோ அல்லது தனியாகவோ இந்த கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்களில்” ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா குழுவினர் பிரதானமாக கிழக்கிலும், கொழும்பிலும் இயங்கி வருவதாகவே “காணாமல் போனவர்களின்” உறவினர்கள் பெரும்பாலும் தெரிவிக்கின்றனர். கண்ணால் கண்ட சாட்சிகளின்படி யாழ்ப்பாணத்தில் நடந்த பல கடத்தல்களில், நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்விரண்டு குழுக்களும் இலங்கை அரசாங்கப் படையினருக்கு மிக நெருக்கமாக ஒத்தாசை வழங்கி வருகின்றன. புலிகள் இயக்கத்தினரின் ஆதரவாளாகள் என சந்தேகிக்கப்படுபவர்களை இனம் காணுவதற்கும் சிலவேளைகளில் கைது செய்வதற்கும் இலங்கை இராணுவத்தினரும் பொலீசாரும் அநேகமான சந்தர்பங்களில் தமிழ் பேசும் நபர்களையே பயன்படுத்துகின்றனர். அநேகமாக கருணா குழுவின் அல்லது ஈ.பி.டி.பி. யின் அங்கத்தவர்கள் பாவிக்கப்படுவதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம் முறையிடப்பட்டுள்ள பல சம்பவங்களின்போது, முதலில் இராணுவத்தினர் தமது வீடுகளுக்கு வந்து விசாரணைகளை நடத்திவிட்டுச் செல்லுகின்றனர். அதன் பின் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் தமிழ் பேசும் ஆயுததாரிகள் தமது வீடுகளுக்கு வந்து தமது உறவினர்களைக் கொண்டு சென்றதாகவே கூறப்பட்டுள்ளன. ஏனைய பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் புலிகள் இயக்கத்துடன் பழி தீர்க்கும் பாணியில் தாமே சுதந்திரமாக செயற்படுவதுடன், பணம் பறிப்பதற்காக நபர்களைக் கடத்துவதிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பாராமுகமாகவே இருக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடத்தல்களில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக மனித உரிமை குழுக்களிடமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைச் சபையிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். ஆனால் இது புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் ஏனைய அமைப்புக்களும் வெளியிட்ட அறிக்கைகளுடன் ஒப்பிட்டு திருப்திப்படக்கூடிய நிலைமையல்ல. குறிப்பாக புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தும் குண்டுத் தாக்குதல்கள், பெருமளவிலான படுகொலைகள், சித்திரவதைகள், அரசியல் படுகொலைகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் அடிப்படை சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறை மற்றும் ஏனைய மோசமான அத்துமீறல்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். புலிகளினால் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் அது அவர்களின் பிரதான உத்தியாக இல்லாதிருப்பதே. அவர்கள் தமக்கு எதிரானவர்களை பகிரங்கமாகக் கொல்லுவதையே விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் அது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனாலாகும். அது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல்கள் பற்றி முறையிடுவதனால் தமக்கு புலிகளினால் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதாலும், கண்ணால் கண்ட சாட்சிகள் முறையிடுவதற்கு அஞ்சுவதாலும் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் பற்றி மிகக் குறைவாகவே அறிக்கையிடப்படுகின்றன.

குறி வைக்கப்படுபவர்கள் யார்?

இந்த “காணாமல் போதல்களுக்கு” யார் காரணமாயிருந்தாலும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் கூட குறி வைக்கப்பட்டனர். பெரும்பாலும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக, குறிப்பாக புலிகள் இயக்கத்தில் அங்கத்துவம் வகித்தோ அல்லது அதனுடன் தொடர்பு வைத்தோ இருக்கும் தனி நபர்களையே பாதுகாப்புப் படையினர் பிரதானமாக குறிவைக்கின்றனர். கணிசமான அளவு உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும்; பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட தமிழ் இளைஞர்களே பெரும்பாலும் குறிவைக்கப்படுகின்றனர். ஏனைய “காணாமல் போதல்” சம்பவங்களில் மதகுருமார்கள், ஆசிரியர்கள், மனிதநேய உதவிப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்போர் கடத்தப்படுவதென்பது அவர்களை சாதாரண வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவது மட்டுமன்றி சமூகத்தில் ஏனையவர்களுக்கும் இதுவொரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது நடத்தப்பட்ட கைதுகளே பின்னர் பெரும்பாலான “காணாமல் போதல்களுக்கு” வழிவகுத்துள்ளன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளின்போது, ஒன்றில் இராணுவத்தினர் நபர்களைத் தடுத்துவைக்கின்றனர் அல்லது அவரது அடையாள ஆவணங்களைப் பறிமுதல் செய்து பின்னர் அவற்றை மீளப்பெறுவதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரும்படி கூறுகின்றனர். இந்த இரண்டு விதமான நிலைமைகளிலும் சில நபர்கள் திரும்பி வருதில்லை. அவ்வாறானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றவையாகவே இருந்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இராணுவ சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் அல்லது சிலசமயம் ஒரு கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் அல்லது அது போன்ற பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பான வேறொரு சம்பவத்திற்குப் பின்னர் நபர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போதான பல சந்தர்ப்பங்களிலேயே தனி நபர்கள் “காணாமல் போயுள்ளனர்”. யாழ்ப்பாணத்தில் நடந்த பல சம்பவங்களில், இக் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தமிழ் உரையாடல், அவர்களின் தோற்றம், மற்றும் அவர்களின் வாகனங்கள் ஈ.பி.டி.பி முகாமிருக்கும் திசையை நோக்கிச் சென்றமை என்பவற்றை வைத்து ஈ.பி.டி.பி அங்கத்தவர்களே தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர்.
2006ம் ஆண்டு பிற்பகுதியிலும் 2007 முற்பகுதியிலும் கடும் மோதல்கள் காரணமாக புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு பெருந்தொகையான மக்கள் வெளியேறியபோது நடந்த “காணாமல் போதல்கள்”; தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிச் சேவையாளர்கள் ஆகியோரிடமிருந்து மிக நம்பத்தகுந்த அறிக்கைகள் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்குக் கிடைத்துள்ளன. புலிகள் இயக்க அங்கத்தவர்கள் என சந்தேகிப்போரை இனங் காணுவதற்காக இடம்பெயர்ந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுளையும் ஒவ்வொருவரையும், இராணுவத்தினரும் கருணா குழுவினரும் கடுமையாக பரிசோதனை செய்தே அனுமதித்தார்கள். அவ்வாறான பரிசோதனையின் போது தடுத்து வைக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் பின்னர் “காணாமல் போன” பல சம்பவங்கள் நடந்துள்ளன.
தண்டனைகளில் இருந்து தப்பக் கூடியதாக இருக்கும் வாய்ப்பான சூழ்நிலையைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்தி பல குழுக்களும் பணயமாக பணம் பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதன் காரணமாக, 2006 பிற்பகுதியிலிருந்து பணயமாகப் பணம் பறிப்பதற்கான கடத்தல்களுக்கும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ‘காணாமல் போதல்களுக்கும்”; இடையேயான வேறுபாடானது மிக அருகி வந்ததையே காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக கொழும்பு, மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை. திருகோணமலை மாவட்டங்களில் இந்த நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. சில கிரிமினல் குழுக்களும் இக் கடத்தல்கள் சிலவற்றின் பின்னால் இருப்பது தெரிய வந்தாலும், பொலீசார் பாராமுகமாக இருக்கையில், கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் தமது இயக்கத்துக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமைக்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன.
தமது படையணிக்கு ஆள் சேர்ப்பதற்கென்று சிறார்கள் உட்பட பலரை கருணா குழுவினர் கடத்தியமை தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு முன்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அவ்வாறான சம்பவங்கள் பலவற்றின் போதும் தமது கணவன்மார்கள் அல்லது பிள்ளைகள் படையில் சேர்க்கப்படுவதற்காகத்தான் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை குடும்பத்தினர் தெரிந்திருந்தும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை.
தண்டிக்கப்படாத குற்றச் செயல்கள்

பாதிக்கப்பட்ட நபர் எங்கிருக்கிறார் அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்று அறியப்படும்வரை, “பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள்” என்னும் குற்றச் செயலானது தொடர்ந்து நடைபெறுகிறதென்றே கருதப்படல் வேண்டும். தமது அன்பிற்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, அல்லது இறந்து போனார்களா என்பது பற்றி அறிய முடியாமல் மாதக் கணக்கில், சிலவேளை வருடக் கணக்கில்கூட குடும்பத்தினர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையானது இக்குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. “காணாமல் போனவர்களில்” சிலர் சித்திரவதை செய்யப்பட்டு அல்லது படுகொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிணமாகக் மீளக் கண்டெடுக்கப்படுகின்றனர். இன்னும் சிலர் பொலீஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் அல்லது வேறு வகையான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு சிலரோ எப்போதுமே காணாமல் போகாதவர்கள் போல் திரும்பி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு காலமும் திரும்பி வராமலே இருப்பதோடு அவர்கள் அனைவரும் நீதிக்கு புறம்பான வகையில் கொல்லப்பட்டு விட்டதாக அல்லது பாதுகாப்பில் இருக்கையில் வேறு வகைகளில் இறந்து விட்டதாகவே கருதப்படுகின்றனர்.
இலங்கையில் இத்தகைய “காணாமல் போதல்களுக்கு” பேருதவியாக இருக்கும் மிக முக்கியமான காரணியாதெனில், பாதுகாப்புப் படையினரும் அரசாங்க ஆதரவு ஆயுதக் குழுக்களும், அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்காக தண்டனை பெறுவதிலிருந்து தப்புவதற்கு திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புக்களாகும்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பொலீசார் சரியான விசாரணைகளை இன்னமும் மேற்கொள்ளாதிருப்பதோடு அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் பற்றி குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக அறியத் தருவதுமில்லை. கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உகந்த சரியான தகவல்கள் தமக்கு கிடைக்காமல் இருப்பதே இதற்குக் காரணமென பொலீசார் கூறுகின்றனர். ஆனால் இந்த அறிக்கையில் விபரமாக கூறப்பட்டிருப்பதைப்போல, சில வேளைகளில் தாங்கள் தகவல்களை பொலீசாருக்கு வழங்கும் போது ஆகக் குறைந்தது விசாரணைகளை அதிலிருந்தாவது அவர்கள் ஆரம்பிக்கலாம். குறிப்பாக கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குடும்பங்களினால் நம்பப்படும் வாகனங்களின் இலக்கத் தகட்டு விபரங்கள், கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள், இராணுவப் பிரிவின் விபரங்கள் என்பவற்றை அவர்கள் கொடுத்தாலும் பொலீசார் அவற்றிலிருந்து விசாரணைகளை ஆரம்பிப்பதில்லை.

நடந்த சம்பவங்களுக்கு பொறுப்புச் சொல்லுவது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலுள்ள எண்ணிக்கையைப் பார்க்கையில், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் எவ்வளவு குறைவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரிகின்றது. 2007 அக்டோபரில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிற்கு வழங்கிய அறிக்கையில் 2005 – 2006ல் நிகழ்ததாகக் கூறப்படும், சரியாக சுட்டிக் காட்டப்படாத மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு வழக்குள் மாத்திரமே இன்னமும் பூர்த்தியாகாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் 2007ல் வவுனியாவில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்படாத எண்ணிக்கையான இராணுவத்தினருக்கு எதிராக அண்மையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பாகவோ அல்லது கடத்தல்கள், “சட்டவிரோத தடுத்து வைப்புக்கள்” தொடர்பாகவோ வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகைகள் பற்றிய விபரங்கள் எதுவுமே அவ்வறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அண்மையில் நடந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 2007ம் யூன் மாதத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரி நிஷாந்த கஜநாயக்காவும் இன்னும் இரு பொலீசாரும் கைது செய்யப்பட்டது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இக்கைதுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகப் பரவலாக பிரச்சாரம் செய்ததோடு கடத்தல்கள் பற்றி தாம் சரியான நடவடிக்கை எடுப்பதாக நிரூபிக்க முனைந்ததுடன், கடத்தல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தது. ஆனால் 2008 பெப்ரவரி மாதத்தில் இச்சந்தேக நபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளனவா என்பது தெளிவற்றதாக உள்ளது.

அரசாங்கத்தின் பிரதிபலிப்பு

பலவந்தமான முறையில் “காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடும் முயற்சிகளை மேற்கொள்ளுவதை விடுத்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது தொடர்ச்சியாக பிரச்சினையின் தாற்பரியத்தை மிக குறைவாகவே மதிப்பிட்டு செயற்படுகின்றது. அது வெளியிட்ட பல அறிக்கைள், “காணாமல் போதல்”; என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும் அல்லது அவ்வாறு ஓரிரண்டு நடந்திருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பாளிகள் புலிகள் இயக்கப் போராளிகள் அல்லது சாதாரண கிரிமினல்கள் என்றே கூறுகின்றன. கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” தொடர்பான பிரச்சினையைக் கையாளுவதற்கென அரசாங்கம் பல செயலணிகளை ஆரம்பித்திருந்தாலும், அவை இச்சம்பவங்கள் தொடர்பாக பயனுறுதிமிக்க விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவசியமான சுதந்திரம், அதிகாரம், வளங்கள் ஆகிய திறன்களின்றியே காணப்படுகின்றன.
“காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள செயலணிகளை அமைத்தல் மற்றும் அவை முறையாக செயற்படாமலிருத்தல் என்னும் விடயத்தில் இலங்கைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. 1980 களிலும் 1990களிலும் நடந்த ஆயுத மோதல்களின்போது காணாமல் போனதாக நிரூபிக்கப்பட்ட 20,000 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென 1990களில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கமானது நான்கு உத்தியோகபூர்வ ஆணைக்குழுக்களை அமைத்தது. மனித உரிமை அமைப்புக்களின் கணிப்பின்படி காணாமல் போனவர்களின் உண்மையான தொகை இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்காகும். இவ்வாணைக் குழுக்களின் விசாரணைகள் மூலம் 2000க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பான குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் அவர்களில் மிகச் சிலரே குற்றம் சாட்டப்பட்டனர். அதிலும் மிகச் சில கீழ் மட்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் மாத்திரமே தண்டிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் “காணாமல் போதல்கள்”; நிகழாமல் தடுக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டியவை எனக் கருதி இவ்வாணைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான மீள்சீரமைப்புக்கள் எதுவுமே தொடர்ச்சியாக பதவிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கத்தாலும் அர்த்தபுஷ்டியுடன் அமுல் நடத்தப்படவில்லை.
2006 நடுப்பகுதியிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய “காணாமல் போதல்கள்”; தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் அனைத்தும் கீழ் காணப்படும் பாணியிலேயே அமைந்திருந்தன. முதலாவதாக, ஏற்கனவே இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலீஸ் கமிஷன் என்பவற்றின் சுயாதீனத் தன்மை பற்றியது. இவற்றுக்கு ஆணையாளர்களை நியமிப்பது தொடர்பாக இருக்கும் அரசியலமைப்பு ரீதியிலான ஒழுங்குகளை மீறுகின்ற வகையில் ஜனாதிபதி அவற்றிற்கு நபர்களை நியமிப்பதற்கு தீர்மானித்ததன் மூலம் அவ்வாணைக்குழுக்களின் தராதரம் கணிசமானளவு கீழ்மைப்படுத்தப்பட்டது.
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான “காணாமல் போதல்கள”; நிகழ்ந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கையில், அது இதுவரை காலமும் எந்தவொரு பகிரங்க அறிக்கையையும் வெளியிடாதது மாத்திரமல்ல, தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புள்ளிவிபரங்களைக் கூட வழங்க மறுத்ததுடன் பிரச்சினையின் தாற்பரியத்தையும் மிகக் குறைவாகவே கருதி வந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இடையூறு செய்யும் நடத்தைகள், அரசாங்கம் போதிய ஒத்தாசை வழங்காமை என்பன நிலைமைகளைக் கண்காணித்து அவற்றைப் புலன் விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரங்களைக் கூட மிக மோசமாக செயலிழக்கச் செய்துவிட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டுத் திறனின்மையும் அதற்குள் அரசாங்கத்தின் தலையீடு அதிகரித்தமை காரணமாகவும், மனித உரிமை ஆணைக்குழுக்கள் மீது கட்டுப்படுத்தல்களைக் கொண்டுள்ள சர்வதேச அமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வெறும் “அவதானிப்பாளர்;” என்ற நிலைக்கு கீழ் நோக்கித் தரப்படுத்தியது.
இரண்டாவதாக, “காணாமல் போதல்கள்” மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒன்பது செயலணிகளை அமைத்திருந்தாலும், அவை அனைத்தையும் பற்றி தனது அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தாலும், இதுவரை காத்திரமான பெறுபேறுகள் எதையுமே அவை வழங்கவில்லை.
இச்செயலணிகள் அமைக்கப்பட்டமை தொடர்பாக அவ்வப்போது அரசாங்கம் அறிவிப்புக்களைச் செய்ததேயன்றி, அச்செயலணிகள் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணைகள் என்ன, அவை நடத்திய விசாரணைகளின் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் எதையுமே வெளியிடவில்லை. தற்போதுள்ள செயலணிகளில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவது பற்றியோ அல்லது அவை இப்பிரச்சினையைக் கையாள தகுதியற்றவை என்பதால் தொடர்ந்து புதிய செயலணிகளை உருவாக்கப் போகின்றதா என்பது பற்றியோ அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை.
பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் “காணாமல் போதல்கள்” தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய அதிகாரிகள் மிகவும் உதாசீனமாக நடந்து கொள்கையில், இச்சம்பவங்கள் தொடர்பாக தாங்கள் மிக அக்கறையுடன் இருப்பதாக காண்பிப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான பல செயலணிகளை உருவாக்கும் வேலையைச் செய்வதாக பல அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தின் தொடர்ச்சியான மந்தமான செயற்பாடே அரசாங்கம் பற்றிய இத்தகைய கருத்துக்கள் நிலவுவதற்கு வழிவகுத்துள்ளன.
புதிதாக எந்த விதமான “காணாமல் போதல்களும்” நிகழவில்லை எனவும் அத்தகைய அத்துமீறல்களில் பாதுகாப்புப் படையினரின் பங்கு சிறிதளவுகூட இல்லையெனவும் அரசாங்கத்தின் அதியுயர் மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருவதை பார்க்கும்போது, இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஏன் எந்த விதமான முன்னேற்றங்களுமின்றி தோல்வியடைந்துள்ளன என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காணாமல் போனவர்களில் அநேகமானோர் திரும்பி வந்து விட்டாhகள் என்றும், பெரும்பாலான காணாமல் போதல்கள் “தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் நிகழுபவை” என்றும் நீதிபதி மஹாநாம திலகரத்தின வெளியட்ட கருத்தை மேற்சொன்ன விடயத்திற்கு மிகப் பொருத்தமானதாக காண்பிக்கலாம். ஆனால் இந்தக் கூற்றுக்களை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை.
“காணாமல் போதல்கள்;” என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும், அது அரசாங்கத்தின் நற்பெயருக்கு சேறு பூசுவதற்காக புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரமே என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகம் ((SCOPP) என்பன தொடர்ச்சியாக கூறிவருகின்றன. இவர்களின் கருத்துப்படி காணாமல் போன அநேகமானோர் ஒன்றில் மீளத் திரும்பி வந்துவிட்டனர், நாட்டை விட்டுச் சென்றுவிட்டனர், தம் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என அஞ்சி தலைமறைவாகி விட்டனர் அல்லது வெறுமனே தமது வீடுகளை விட்டுச் சென்றுவிட்டு, தாங்கள் எங்கிருக்கிறோமென தமது குடும்பங்களோடு தொடர்புகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் தமது இந்த வாதத்தை நியாயப்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆதாரங்களையும் இவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.
ஆனால் இலங்கையில் சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரிகளான பொலீஸ் மா அதிபரும் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும் மற்றும் பல மட்டுப்படுத்தல்களுடன் கூடியதாக அரசாங்க கமிஷன்கள் வெளியிட்ட பல அறிக்கைகளும் மேற்சொன்ன வாதங்களுடன் முரண்படுகின்றன. உண்மையில் “காணாமல் போதல்” என்று ஒரு பிரச்சினை இல்லாவிட்டால், அரசாங்கம் ஏன் இத்தனை விதமான செயலணிகளை நியமித்தது? என்கின்ற கேள்வியும் மேற்சொன்ன வாதத்திலிருந்து எழுகின்றது. “காணாமல் போதல்கள்” தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்திலிருந்து வரும் இத்தகைய மறுப்புக்களின் மூலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் பாகாப்புப் படையினருக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பாரதூரமாக எடுத்துக் கொள்ளாது என்னும் சமிக்ஞையையே பாதுகாப்பு படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.

சர்வதேச பிரதிபலிப்புகள்

2006 நடுப்பகுதியிலிருந்தே, பலவந்தமான முறையில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழ்வதாக இலங்கை அரசாங்கத்தின பல முக்கிய சர்வதேச பங்காளர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் பல செயலணிகளும் தமது அக்கறையை வெளியிட்டிருந்தன. இலங்கைக்கு தமது விஜயங்களை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளான, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், ஆயுத மோதல்களில் அகப்பட்டுள்ள சிறார்கள் நலன் தொடர்பான விசேட பிரதிநிதி மற்றும் சட்டவிரோதப் படுகொலைகள், கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான விசேட பிரிதிநிதி போன்ற அனைவருமே, இலங்கையில் தண்டனை வழங்கப்படாத விதத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவது பற்றியும், சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்த வேண்டிய அமைப்புக்களும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலணிகள் என்பன தமது கடமையில் தவறியுள்ள நிலைமைகள் நிலவுவது தொடர்பாகவும் எச்சரித்திருந்தன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களும் இந்நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்திருந்தன.
படிப்படியாக அதிகரித்து வந்த சர்வதேச அக்கறை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது இரண்டு வகையாக அமைந்திருந்தது. ஒருபுறம், தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடனும் மனித உரிமை வல்லுனர்களுடனும் ஒத்துழைப்பதற்கான தமது விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை முன்னேற்றுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தமது பங்காளர்களிடம் கடும் பரப்புரைகளில் ஈடுபட்டது. ஆனால் மறுபுறமாக, ஐ.நா. அதிகாரிகள் உட்பட தம்மை விமர்சிப்பவர்கள் மீது அரசாங்கம் கடும் தாக்குதலையும் மேற்கொண்டது.; அவர்கள் நாட்டின் நிலைமை தொடர்பாக அக்கறையின்றி இருப்பதாகவும் அவர்கள் புலிகளின் அனுதாபிகள் எனவும் மோசமாக தனது தாக்குதலை மேற்கொண்டது.
மனித உரிமை மீறல்கள் பரவலாக நிகழும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் நிலைமையானது, நாடு முழுவதும் பரந்தளவில் அரசாங்கப் படைகளினாலும் புலிகள் இயக்கத்தினாலும் நடத்தப்பட்டுவரும் மோசமான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு செயலணியொன்றை நிறுவுவதற்கான சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றை அமைக்கும்படி ஐரோப்பிய யூனியன் மற்றும் மிக அண்மையில் அமெரிக்கா அரசாங்கம் என்பன உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. அவ்வாறான ஒரு செயலணி ஒன்றை நிறுவுவது தொடர்பாக தமது காரியாலயமானது இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்றத் தயாராக இருப்பதற்கான விருப்பத்தை ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) 2007 டிசம்பரில் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது தெரிவித்திருந்தார்.

சர்வதேச கண்காணிப்பு செயலணிகள் அமைக்கும் சகல விதமான முன்மொழிதல்களையும் இலங்கை அரசாங்கமானது முற்றுமுழுதாக நிராகரித்து விட்டது. அதன் இத்தகைய பிரதிபலிப்பானது, சகல குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற வகையில் தாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியிட்ட அதன் கூற்றையே பொய்யாக்குகின்றது.

முக்கியமான பரிந்துரைகள்

 • நாட்டில் நடந்துகொண்டிருக்கும் “காணாமல் போதல்” சம்பவங்களின் அளவையும் அவற்றில் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கு இருக்கும் பங்கையும் இலங்கை அரசாங்கமானது பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
“காணாமல் போதல்கள்” தொடர்பான நிலைமையை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுப்பது மட்டுமன்றி அதன் அக்கறையை தெளிவாக வெளிக்காட்டும்வரை, இத்தகைய செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை முன்னேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் செய்துவிட முடியாது. எவ்வாறாயினும் அரசாங்கம் எத்தனை விதமான செயலணிகளை நியமித்தாலும், சிரேஷ்ட அதிகாரிகள் இத்தகைய பாரதூரமான சம்பவங்கள் எதுவுமே நடக்கவில்லையென நிராகரிக்கும் வரை அச்செயலணிகளின் பணிகள் வெற்றியளிக்கப் போவதில்லை. பாதுகாப்புப் படையினரும், அரசாங்கத்துக்கு சார்பான ஆயுதக் குழுக்களும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன என்பதையும், இத்தகைய பிரச்சினையொன்று உண்மையிலே இருக்கின்றது என்பதையும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி ஏற்றுக்கொள்வதே இதனைத் தீர்ப்பதற்கு மிக அவசியமான ஆரம்பப் புள்ளியாகும்.
 • இலங்கை அரசாங்கமானது நபர்களைத் தடுத்து வைக்கும் தமது நடைமுறைகளை மீள்சீராக்கம் செய்வதுடன், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன், சர்வதேச செயல்முறை தராதரங்களுக்கேற்ப ஒழுகி நடந்து கொள்ளல் வேண்டும்.
தொடர்ந்தும் புதிதாக பரவலான “காணாமல் போதல்கள்” நடைபெறுவதைத் தடுப்பதற்காக, கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்து வைக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர்கள் தமது குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதோடு எந்தவித இடையூறுமின்றி தமது சட்டதரணியைச் சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டுவரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன்வைக்கப்படல் வேண்டும்.

 • “காணாமல் போதல்கள்” பொறுப்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கமானது தீவிரமாக விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்தல் எனனும் நடைமுறை மிகக் குறைவாக இருக்கும் சூழ்நிலையும் “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினை அதிகரிக்க வழிசமைக்கும் ஒரு பிரதான காரணியாகும். இந்த அறிக்கையில் ஆவணப் படுத்தப்பட்டிருப்பவை உட்பட சகல சட்டவிரோத கைதுகள் மற்றும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பவை தொடர்பாக, ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாகவும் பகிரங்கமாகவும் உறுதிப்படுத்தப்படும்வரை அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். “காணாமல் போதல்” சம்பவங்களுக்கு பொறுப்பான பாதுகாப்புப் படை அதிகாரிகளோ அல்லது அரசோடு தொடர்பில்லாத ஆயுதக் குழுக்களோ, எவராயிருப்பினும் அவர்கள் மீது தகுந்த வகையில் சட்ட நடவடிக்கை அல்லது ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
 • மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்படும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அனைத்தையும் கண்காணித்து அறிக்கையிடுவதற்காக, சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயத்தில் அரசாங்கமும் புலிகள் இயக்கமும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் காரியாலயத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அனுபவமுள்ள சர்வதேச ரீதியான கண்காணிப்பு குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உயிர்கள் பாதுகாக்கப்படுவது மற்றும் உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படுவது என்பதுடன் பொறுப்புக் கூறும் நடைமுறையையும் முன்னேற்ற முடியும். இந்தப் பொறுப்பானது தனியே இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் மாத்திரமன்றி இது தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்களிடமும் தங்கி இருக்கின்றது. இத்தகைய கண்காணிப்பு குழுவொன்றை நிறுவுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாடானது தொடர்ச்சியாக நிகழும் பிரச்சினைக்கு பொய்யாக அல்லாமல் உண்மையாகவே நடவடிக்கை எடுப்பதற்கான அதன் விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பாக அதன் அக்கறையையுமே எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சோதனையாக அமையும் என்பதை இச்சர்வதேச செயற்பாட்டாளர்கள் தெளிவாக அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தல் வேண்டும். சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது உட்பட, “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பும் நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம் என்னும் நிபந்தனையின் அடிப்படையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பக்காளிகள், குறிப்பாக இந்தியாவும் ஜப்பானும் தமது இராணுவ மற்றும் மனிதாபிமான நோக்கல்லாத (non-humanitarian) உதவிகளைச் தொடர்ந்து செய்வதற்கு முன்வருதல் வேண்டும்.

பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினையைக் கையாளுகின்ற விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு என்பது குறிப்பாக பயனுறுதிமிக்கதாக இருந்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. போதிய வளங்களும் தகுந்த ஆணையும் வழங்கப்பட்டால், அரசாங்கமும் ஏனைய பல்வேறு தேசிய செயலணிகளும் நிறைவேற்றத் தவறிய பணியை சர்வதேச கண்காணிப்பு செயலணியால் நிறைவேற்ற முடியும். எந்தவித இடையூறுமின்றி தடுப்புக் காவல் நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களை உறுதிப்படுத்தல், குறிப்பான ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரிடமிருந்தும் கோருதல், சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் உதவியாக இருக்கும் வகையில் தேசிய ரீதியிலான மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புக்களுக்கு உதவுதல், முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த ஆவணப்படுத்தலை மேற்கொள்ளல்; என்பன அப்பணிகளில் சிலவாம்.

பரிந்துரைகள்
இலங்கை அரசாங்கத்திற்கு:

 1. பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” நடந்துள்ளமை தொடர்பாக அரசென்ற வகையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு அதனை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும். இராணுவத்தினரும் பொலீசாரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு அமைவாக முழுமையாக ஒழுகி நடந்து கொள்வதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
 2. மனித உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளை சிறுமைப்படுத்துகின்ற வகையிலான சட்டங்களை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.
 3. நிட்சயமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுகளை மேற்கொள்ள வகை செய்கின்றதும், குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் தண்டனையின்றி தப்புவதற்கு வகை செய்வதும், மரண விசாரணைகளின் விபரங்கள் அறிவிக்கப்படாமலும், பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தாமலும் இறந்தவர்களின் உடல்களை அழிப்பதற்கு வகை செய்வதுமான அவசரகால சட்ட விதிகளை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.
 4. தடுத்து வைத்தல் தொடர்பாக வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்:
  • பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்துவைக்கப்படல் வேண்டும். அதேவேளை கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தம்மை சரியாக அடையாளம் காண்பிப்பதோடு, உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை காண்பிக்கவும் வேண்டும்.
  • • தடுத்துவைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். கைது செய்யப்பட்ட திகதி, நேரம், கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயர், கைதுக்கான காரணம் மற்றும் அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு பொறுப்பான பாதுகாப்புப் படை பிரிவு போன்ற விபரங்கள் அவ்வாவணங்களில் இருப்பதற்கு வகை செய்தல் வேண்;டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் குடும்பத்தினர், சட்டதரணி மற்றும் அந்நபர் தொடர்பாக சட்ட ரீதியாக அக்கறை கொண்ட நபர்கள் அனைவரும் அவ்வாவணங்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும். தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படும்போது அவ்விபரங்கள் அனைத்தும் அவ்வாவணங்களில் பதியப்பட்டிருத்தல் வேண்டும்.
  • • தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன் வைக்கப்படுவதோடு அவர் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதும் முன்வைக்கப்படல் வேண்டும். கைது செய்யப்பட்டவுடன் அவரது கைதுக்கான காரணமும் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்களும் அவரது குடும்பத்தினருக்கு அறியத் தரப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் எந்தவொரு நபரும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கும் அவரது சட்டதரணியை எவ்வித இடையூறுமின்றி சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும்.
  5. ஐ.நா.வின் ஆதரவுடன் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றின் வருகையை ஏற்றுக் கொள்வதோடு அதனுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஏற்றுக்கொள்ளல் வெண்டும்
  6. சட்டவிரோதமான கைதுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தியவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதொடு அது தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைப்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • “காணாமல் போதல்கள்” என்பது ஒரு குற்றவியல் குற்றச் செயலாகும் என அறிவிப்பதோடு அக்குற்றச் செயலின் தாற்பரியத்திற்கேற்ப பொருத்தமான வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
  • இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சம்வங்கள் உட்பட, சகலவிதமான சட்விரோத கைதுகள் தொடர்பாகவும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார், அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்பது அறியப்பட்டு, அவை தெளிவாக பகிரங்கப்படுத்தப்படும் வரையில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
 • துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பொருத்தமான வகையில் சர்வதேச நடைமுறை தராதரங்களுக்கேற்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் அல்லது ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
 • இராணுவ உயர்மட்ட அதிகாரிகளோ அல்லது சிவில் உயர் அதிகாரிகளோ எவராயிருந்தாலும், அவர்கள், தமது ஆணையின் கீழ் உள்ள படையணிகள் அல்லது சக்திகள் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லது ஈடுபட்டிருக்கக் கூடும் எனத் தெரிந்திருந்தும் அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமை தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைத்தல் வேண்டும்.
 • கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” என்பவற்றுக்கு பொறுப்பான அரச தரப்பல்லாத கருணா குழுவினரையும் ஈ.பி.டி.பி அமைப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருப்பின் அது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

7. கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயனுறுதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட தேசிய ரீதியான செயலணிகளை வலுப்படுத்துதல் வேண்டும்.
 • கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தல் வேண்டும்;. (திலகரத்ன கமிஷன் அறிக்கை)
 • இலங்கை அரசியலமைப்பின்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு சுயாதீனத்தை மீள நிலை நிறுத்துதல் வேண்டும். பொலீஸ், இராணுவம் உட்பட சகல அரச நிறுவனங்களும், விசாரணைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, அதனுடன் ஒத்துழைக்காவிடின் அதற்கு பொறுப்புக்;கூற வைத்தலையும் உறுதி செய்தல் வேண்டும்.
8. பலவந்தமான முறையில் மற்றும் தன்னிச்சையின்றிய காணாமல் போதல்கள் தொடர்பாக ஐ.நா. செயலணியொன்றின் வருகைக்காக தாமாகவே முன்வந்து அழைப்பு விடுப்பதுடன் அதற்கான கால அட்டவனையையும் நியமித்தல் வேண்டும்.
9. பலவந்தமான முறையில் காணாமல் போதல்களில் இருந்து சகல நபர்களும்; பாதுகாக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சர்வதேச சட்டத்தை ஏற்று சட்டவலு அளிப்பதுடன் அதற்கு வலுச் சேர்க்கின்ற வகையில் உள்ளுர் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டு வருதல் வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ((LTTE):
1. கடத்தல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் அனைத்தையும் நிறுத்துதல் வேண்டும். சிறார்களையும் வயது வந்தவர்களையும் பலவந்தமாகக் கடத்தி படையில் சேர்த்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற அங்கத்தவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
2. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்கும், சிறார்களை படையணிகளில் இருந்து விடுவிப்பதற்குமாக, யுனிசெப் உட்பட சர்வதேச அமைப்புக்களை புலிகள் இயக்கத்தின் முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
3. ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை நிறுவுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நிதியுதவி செய்யும் அரசாங்கங்களுக்கு:
1. இலங்கையில் “காணாமல் போதல்கள்” என்னும் விடயம் தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட கடுமையான பிரதிபலிப்பொன்றை காட்டுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினராலும் செய்யப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பகிரங்க கண்டனங்களைத் தொடர்சியாக தெரிவிக்க வேண்டும்.
2. பரந்த அளவில் நிகழும் “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும்படியும், விசாரிக்கப்படாமல் இருக்கும் சம்பவங்களை தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தும்படியும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கையோ அல்லது ஒழுக்க நடவடிக்கையோ எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறத்த வேண்டும்.
3. இதுவரை இதனை வலியுறுத்தாத நாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கையில் மிகவும் சீரழிந்து வரும் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக தமது அக்கறையை வெளியிடுவதுடன் அப்பிரச்சினையைக் கையாளுகின்ற சர்வதேச முயற்சியுடன் இணைந்து கொள்ளல் வேண்டும்.
4. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் செயலணியொன்றை ஏற்றுக் கொண்டு, “காணாமல் போதல்கள்” தொடர்பாக நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகின்ற நாடுகள் தமது மேலதிக உதவிகளை வழங்க முன்வருதல்; வேண்டும்.
5. ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை உருவாக்குவதற்கான பூரணமான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். அத்தகைய அமைப்பொன்றின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தையும் வலியுறுத்தல் வேண்டும்.
''''''''''''''''''''''''''''''''''''
pdf கோப்பில் பார்க்க
HRW - வீடியோ விபரணம்
புகைப்படம்