Thursday, September 25, 2008

___________

அவன் கொல்லப்பட்ட நாள்
இவனது உள்ளுணர்வுகள் சொல்லின
அன்றைய நாள் வழமைக்கு எதிராய்

பிண எண் '1084 இன் அம்மா'
உயிரான ப்ருத்வீயின்
பிரசவ நாளில்
எப்படிப் புரண்டாளோ, அதுக்குக்
கிட்டவான தவிப்பு,
அவனது நிலைகொள்ளா மனதினில்.

தொலைபேசியில்
தழுவ உறவுகளற்ற எல்லைகளுக்கு அப்பாலே
'தகவல்' தரப்பட்ட போதில்
ஓரமாய்ப் போயிருந்து
- போரின் இடையீடு அற்றிருந்த
இனிய நினைவுகளை
சின்ன விளையாட்டுக்களை
வாஞ்சையான சின்னத் தம்பியின்
'குளப்படி' முகத்தை -
நினைவுகொண்டழுத
தன் சகோதரனை இழந்த(அ)வனது பெயரை
தரப் போவதில்லை நான்

பறிக்கப்பட்ட
மகவை-சகோதரரை-நேசகரை உடை
அது உங்களிலும் யாரோவினதுபெயர் !

பறிகொடுத்தவர்கள் தொடர்பில்
உம் வீடுகளில் கவிகிற மெளனத்தை
பிடித்துலுக்கிறது
படத்தறையில் அம்மாவின் விசும்பல்
தான் வாழும் ஒவ்வொரு புதிய நாளிடமும்
வாழாத தன் மகவின் இளமையை
சொல்லிச் சொல்லி அழுகிறாள்
நிலம் அதிர.

விழுகிற வெற்றிடத்தில்
எம் மதுக்குவளைகளை நிறைய - அதிலே
அன்புக்குரியவர் பெயர்கள் நிரம்புகின்றன
உயிர் கொல்லும் அமிலம்
அழிக்கப் போவது உடலையா ஞாபகங்களையா
யாரோ கேட்கையில்
மெழுகுவர்த்திகள் நூர்ந்து
இருள்.
இருள்.
~
2008

*
'1084 இன் அம்மா': மஹாஸ்வேதா தேவியின் நாவல், நக்சல்பாரி இயக்கத்தில் கொல்லப்பட்ட மகனது கனவுகளைத் தேடும் தாயினது கதை.


Tuesday, September 23, 2008

என்றென்றைக்குமாக


ரலாறு நெடுகிலும்
நிமிர்ந்து பார்க்க 'ஒரு தலைவன்':
கைவிலங்கிற் கூட்டிச் சென்றனர்
தந்திரமாய்ப் பிடித்துக் கொன்றனர்
ஓங்கிய கைகளுடன் பயங்கர தீரமிகு தலைவன்
Deniz Gezmis, செகு-வா...றா,
இயேசுவில் ஆரம்பித்து,
எழுதிய குறிப்புகள் காற்றிற் படபடக்க
கால்களில் விலங்குடன்
சித்திரைவதைப்படுகிற ஜீலிஸ் பூஸிக்...
என் மகனே நான் புத்திரசோகத்தில் மூழ்கித் தாண்டேன்
என் கணவனே நான் துணையற்று மாண்டேன்
என் நண்பனே நானுன் வோர்ம்த்-தை இழந்தேன்
நீ: பெருங் கூட்டத்தை கைவிரலுள் வைத்திருந்தாய்
நிமிர்ந்து பார்தகு உயரத்தில் இருந்தாய்
சதியில்
பனிக் கோடரி பதம் பார்த்ததோ வுன் கழுத்தை!
...
லியோன் ட்ரோட்ஸ்கி
சல்வடொர் அலண்டே
Ho Chí Minh
அவரவர் சார்புகளி லிருந்து தலைவர்கள்
எழுந்தீர். எழுந்து கொண்டே யிருந்தீர்...
தன்னிடத்தில்
"யுத்தத்தைத் எதிர்த்தேன் பேசிறாய் -
பெண்ணியம் மட்டும் பேசேன்!" என்றுரைக்கும்
ஆண் அதிகாரிகளுள்
அபூர்வமாய் வந்தாள் றோசா லுக்சம்பேர்க்.
அவளை,
"கிழட்டு வேசை"யென முகத்திற் துப்பி
என்றோ ஒருநாள் நதியிற் போடுவர்; பிறகோ,
பூமியை உங்கள் தலைவர்கள் நிறைத்தனர்
கடல்களை அவர்கள் குருதியால் நிரப்பினர்


)
2006


வோர்ம்த்/warmth - (ஆங்.) கதகதப்பு?
...
- எழுந்தமானமாக சில ஆண் தலைமைகளினது பெயர்கள்.
Hasta siempre, comandante ["என்றென்றைக்குமே கொமாண்டர்"(?)]: இப் பாடல், சே பதவி துறந்து கியூபாவை பிரிந்து சென்ற போது, மிகுந்த காதலுடனும் நம்பிக்கையுடனும் செகுவேராவுக்காக -அவரது பாதையை தாம் தொடர்வோம் என்று - Carlos Puebla எழுதியது; இதைப் பிறகும் பல பாடகர்கள் மீள்-பாடியிருந்தாலும், Nathalie Cardone என்கிற ஸ்பானிய தாயாரை உடைய பிரெஞ்சு நடிகை பாடி நடித்த பாடலே இக் குறிப்புக்கான உந்துதலானது. அதில், புரட்சியின் குறியீடான "சே" மீதான ஆராதனை, இயேசுவுக்கு நிகரான அவரது சித்தரிப்பு, மற்றும் அத் தியாகத்தின் மீதான பெண்களது பாலியற் கவர்ச்சி - என்பன சிறப்பாக வெளிப்பட்டிருந்தன.
(இறுதி வரிகள்: சண்முகம் சிவலிங்கத்தின் மொழிக்கு)

Monday, September 22, 2008

----- மச்சாங்போர் நடக்குது.
நீ இப்ப இந்தியாவில.
'இந்திரஞ் சித்தப்பாட மகனுக்கும்
வயசு வந்திற்று. இனி விட மாட்டாங்கள்'
எண்டுறாய்.
'அவங்களுக்கு' வேலை செய்யிறாய்
(எண்டு கேள்வி!)
பெயர்கள சேகரிச்சு
கனடாக்கு ஃபக்ஸ் அடிக்க
அங்க இருந்து
ஃபக்ஸ் 'அவங்களுக்கு'ப் போக
தலைகள் மறைவதாய்
உன்ர தகவல்கள் புண்ணியத்தில்
******* பொலிஸ்காரர் 3 பேரையும்
விசயம் வெளிய தெரிய வராமப் 'போட்ட'தாய்
ஊர்ச்சனம் கதைக்குது.
(இப்பிடிக் கன பெடியள
இதுக்கண்டே பிடிச்சு அனுப்பீருக்கிறாங்களாம்)
"வந்த வேலை முடிஞ்சுது.. வரச் சொல்லுறாங்கள்
இனியென்ன, போக வேண்டியதுதான்"
என்கிறாய்.
முதற்காதலையும் பேரன்பையும்
எதிர்காலமற்ற
என்றென்றைக்குமான பிரியங்களையும்
அள்ளியள்ளிப் பரிசளித்த
பிரத்தியேக மச்சாங்களில் ஒருத்தனில்ல நீ.
நம் பருவங்களைக் கிளர்த்திய பாடல்களை
தணிக்கையற்றும் மின் தடையற்றும்
றேடியோக்கள் அலறிய
அமைதியைப் பிரகடனப்படுத்திய அவ் ஆண்டு
விட்டேத்தியாய்
ஊரில் வந்திறங்கிய என்னை
'மற்றப் பெண்கள் போலில்லாமல் இருப்பதாய்'
முறையிட்டு
'எங்கட ரவுண் சந்தியில நிண்டு பார்
என்ன ஸ்டைலில பெட்டையள் வருவாளள்'
எண்டு ஒப்பிட்டு
உன்னில ஒரு 'ஐடியா' 'போர்ம்' ஆகாத என்ன
நேரங் கிடைக்கேக்க சுத்தி வந்த.
ஊர விட்டுப் போகேக்க
பஸ்ஸில 'ஏறினாப் பிறவு' படிக்கச் சொல்லி
கடிதம் தந்த.
போற இடத்தில 'றேடியோ' கேக்கச் சொல்லி,
அதில சோகப் பாடல் 'கேட்டாலும் கேப்பன்' எண்ட.
அதுக்கடுத்-தடுத்-த வருசம்
வந்த
என்ர சகோதரியைப் பிடிச்சுப் போக
என்னிலும்
ஒரு வயது மூத்தவனான நீ - படவா,
இப்ப என்னை "அக்கா" என்கிறாய்!
இதெல்லாம் விசரக் கிழப்புது தான்;
நீ பிரத்தியேகமான மச்சானில்லை எனிலும்!
அத்தோட,
அறுவானே!
12-13(?) வயதில கையால அடிச்சிற்று
உன்ர விந்துக்கள
அங்கால வந்த இன்னொரு மச்சாளில
விசிறி சிரிச்ச பரதேசிப் பயல் வேற.
போனில லண்டன் மாமா
'அவன பிரான்சுக்கு எடுத்து விடுவமா?'
எனும் போதோ............
"ஐய்யோ.. அது நடந்திரோணும்,
அவன் லூசன் - எண்டாலும்
கடல்லையோ எங்கையோ
காணாமப் போகாம
சந்தோசமா இருக்கோணும்" என்கிறது மனசு.
மச்சாங்,
நீ பிரான்ஸிலையோ எங்கையோ
உயிரோட இருக்கணும்டா..september 2008
photos: oshan fernando
(மட்டக்களப்பு பேச்சுவழக்கில் எழுதப்பட்ட
சக்கரவர்த்தியின் "எங்க மேனே போயிரிக்காய்"
கவிதையின் மனப்பதிவுகளோடு)