Thursday, October 2, 2008

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.

ள்களற்ற நகரத்திலிருந்த
ஒரே ஒரு தொலைபேசியில்
இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்
கூரை கழற்றப்பட்ட
மண்சுவரிலிருந்த
நாட்காட்டியும் கடிகாரமும்
புதைந்து கிடக்கிறது.

பூவரச மரத்தின் கீழ்
உனது கடைசி நம்பிக்கை
தீர்ந்து கொண்டிருக்கிறது.

எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்
கைவிடப்பட்ட படலைகளிலும்
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.

உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்
கேட்க முடியவில்லை
ஐ.நா.வில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்
உனது மொழி
நசிபட்டுக்கொண்டிருந்தது
அழுகையின் பல ஒலிகளும்
அலைச்சலின் பல நடைபாதைகளும்
சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட
தலைகள் அசைந்து கொண்டிருந்தன.

கைவிட்டுச்சென்ற
கோழியும் குஞ்சுகளும் இறந்து கிடக்க
வெறும் தடிகளில்
தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்
அழுதபடியிருந்தன.

நேற்றோடு எல்லோரும்
நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஐ.நா.வின் உணவு வண்டியை
துரத்திச் சென்ற சிறுவனின் பசி
ஓமந்தை சோதனைச்சாவடியில்
தடுத்து வைக்கப்படுகையில்
குண்டைபதுக்கிய அமெரிக்கன் மாப்பையில்
உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.

வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்று நள்ளிரவோடு
வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்
அறிவிக்கப்படுகையில்
மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
_______________________________
01.10.2008இரவு8.00
தீபச்செல்வன்

0 கருத்துக்கள்: