Saturday, December 13, 2008

மரங்கள்

கொலை செய்யப்பட்ட
உன்னுடைய ரத்தம்
என் முலைகளில் வடிய
நான் கொலை நடந்த இடத்தை
மறந்து செல்வேன்
ஓர் நாயென
- தாரில் காய்ந்திருக்குமுன் குருதியை -
முகர திரியும் ஆழ் மனத்துடன்

கைகள் நிர்க்கதியில் பிறழ்வினைக் கடக்கிற
வழிகளைத் தேடி அலைய
யன்னலுக்கு வெளியில்
நடந்துபோற தூரத்தே, வீழ்ச்சி

வீடு
தன்னுள் ஒடுங்குதலை பழக்கவும்;
குடும்பம்
பழக்கத்தை நீட்சிப்பதையும் போல்
மரணத்தை பழக்கும் சூழல்;
உணர்ச்சி மரக்குது ஒவ்வொன்றாய்

கண்ணே
தார் நிலத்தில் உனது குருதி
தன் மணத்தினை இழந்தவாறு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நாளும்
பழகிப் போதலை
மனுச மறதியை
அறிவித்தவாறு.

என் ஜோனி அடைத்துக் கொண்டது
அதனுதடுகள்
பிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன

உணர்ச்சிகள் செத்து
நாங்கள் எழுவோம்,
மரங்களாக
எங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல்
(
(
செப் 2008

0 கருத்துக்கள்: