Tuesday, March 17, 2009

போரோடு ஓடி வாழ்தல்

போரோடு ஓடி வாழ்தல்

(பெப்ரவரி 19, 2009)

-தர்மினி

முகமூடி அணிந்த மனிதர்கள்

கிணற்றில் உண்மையைத் தூக்கி எறிவதைக் கண்டேன்

நான் அதற்காக அழத்தொடங்குகையில்

அதை எங்கெங்கும் கண்டேன்

- கவிஞர் Claudia Lars

லங்கை இராணுவம் இந்திய இராணுவமெனத் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் நுழைந்த போதெல்லாம் பயங்கரவாத அழிப்பென மக்களின் உயிர்களும் உடமைகளும் அழிக்கப்பட்டன. இடையிடையே யுத்த நிறுத்தங்கள் என்ற பாசாங்குகளில் ஆயுதங்களும் ஆட்களும் உளவுகளும் சேகரிக்கப்பட்டு மீளவொரு யுத்தத்திற்கான ஆயத்தம் மேற்கொள்ளப்படும்.யுத்தம் மக்கள் வாழ்வின் மேல் திணிக்கப்படும் ஒன்றாகிவிடும்.அவ்வாறான நேரங்களில் ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவம் முன்னேறும் புலிகள் அதைத் தடுத்து நிறுத்திச் சண்டையிடுவார்கள். இராணுவத்தினர் பின்வாங்குவர் அல்லது புலிகள் பின்வாங்கிச் செல்வர். இறுதியில் இரு பகுதியினரும் தமது பாதுகாப்பான நிலைகளையடைவார்கள். ஆனால் நடுவே அகப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்கும் மக்கள் கேட்பர்; இந்தச் சண்டை ஏன்? விதைத்து விட்டோம் புதைத்து விட்டோம் நாளை வளரும் காசு மரம் என்ற கதையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு காலங்களாகத் தான் உயிரழிவுகளையும் சொத்துக்களின் இழப்புகளையும் உளவியற்சிக்கல்களையும் எதிர் கொண்டு வாழ்வதென்ற கேள்வி அவர்களிடமுண்டு. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறும். எல்லா விதமான ஆயுதங்களையும் ஆயத்தங்களையும் அது பிரயோகிக்கும்.அங்கு வாழும் மக்கள் வேறு பகுதிகளுக்கு அகதிகளாகப் போவார்கள். போரில் அகப்பட்ட பொது மக்களின் இழப்புகள் வெறும் எண்ணிக்கையாகச் சொல்லப்படுவதுடன் முடிந்து விடும். மீண்டும் வீடு வேலை சொத்துக்கள் எனப் பாடுபட்டுத் தேடுவர். மேலும் மேலும் வறுமையை எட்டிப் பிடித்தபடியே வாழ்வு நகரும். பல வருடங்களாக யுத்தப் பிரதேசங்களில் இராணுவமும் புலிகளும் ஓடுவது பிடிப்பது விடுவது என்பதாக விளையாடும் விளையாட்டாகியிருந்தது. இதன் விபரித விளைவுகளை இன்று கிளிநொச்சி முல்லைத்தீவு மக்கள் அனுபவிக்கின்றனர். இம் மாவட்டங்களில் பொருளாதார ஆதாரங்களாக விவசாயம் வீட்டுமிருகங்களின் வளர்ப்புகள் உள்ளன. அன்றாட மனித உழைப்பின்றி உணவருந்த முடியாத வாழ்க்கை அவர்களது. 2008ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நெருக்கிய யுத்தம் 2009இன் ஆரம்ப காலமாகிய இப்போது அவர்களை விழுங்கித் தீர்க்கிறது. சிறீலங்கா அரசாங்கம் உலக உதவி நிறுவனங்களை அங்கிருந்து வெளியேறச் சொன்னது. பின்னர் அங்கு பணிபுரிந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரை வெளியேற்றியது.தற்போது சிறிலங்காவின் சுகாதார அமைச்சினால் அங்கிருந்து வைத்தியர்களையும் சுகாதார ஊழியர்களையும் வெளியேறும்படி கட்டளையிடப்பட்டது. பலர் தமது அத்தியாவசியப் பொருட்களுடன் வீடுகளை விட்டு ஓடும் போது குடிசையமைக்கத் தேவையானவற்றையும் எடுத்துச் செல்கின்றனர். மறுபடியும் மறுபடியுமாகக் காவி நகர்வுகள் ஆங்காங்கு உறங்குதல் என வாழ்கின்றனர். படங்குகள் பாய்கள் துணிகள் என மூடிக்கட்டித் தூங்குகின்றனர். மோனிகாவின் ஓவியம்

எங்கும் துரத்திவரும் எறிகணைகள் குண்டுகளென எதிர்பாராத நேரங்களில் விழும் போது தூக்கி வந்த சிறு சிறு உடமைகளைக் கூட கைவிட்டுவிட்டு உடுத்த உடையும் கையிற் தூக்கிய குழந்தைகளுமாகத் தான் ஓடுகின்றனர். மருத்துவ நிலையங்கள் மேல் குண்டுவீச்சுகள் போதிய மருந்துகளில்லை. மற்றும் அங்கு பணிபுரிபவர்களே தம்மைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. குறுகிய நிலப்பரப்புக்குள்ளே ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் கொண்டு போய்த் தள்ளப் பட்டுள்ளனர் எனச் சொல்லப் படுகின்றது. ஓடித்தப்பிக்க வழியற்ற நிலையில் விழுகின்ற குண்டுகளைத் தங்கள் மேல் வாங்கிச் சாகின்றார்கள். காயம் பட்டவர்களின் நிலைமை மிக மோசமானது. காயங்களிலிருந்து இரத்தம் வடிய வேதனைகளுடன் தொடரும் எறிகணை வீச்சுகளிலிருந்தும் விமானத்திலிருந்து போடப்படும் குண்டுகளிலிருந்தும் தப்பிப்பது எப்படி?

சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறிலங்கா அரசு வீசுகின்றது. இது உறுதிப்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படும் நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்களைக் கண்டித்த போதிலும் புலிகளை அழிப்பதாகச் சொன்னவாறும் இராணுவத்துடன் போரிடுவதாகச் சொன்னவாறும் நடுவில் அகப்பட்டுத் தவிக்கும் மக்களின் சடலங்கள் மீதேறி நின்றவாறு போர் தொடர்கிறது. இவ்வாறான போர்ச் சூழலில் அகப்பட்டுள்ள குழந்தைகளின் மனநிலை எவ்வாறிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்ய முடியாது. பசியிற் தவித்து பயத்தில் அலறிக் காயம் பட்டுத்துடிக்கும் குழந்தைகளைப் பெற்றவர்களின் துயரம் சொல்ல முடியாதது. தூக்கமற்ற இரவுகளும் புற்றுகளிலிருந்து வெளிப்பட்ட பாம்புகளும் எந்நேரமும் விழும் எறிகணைகள் எப்பக்கமிருந்து இராணுவம் ஊடுருவி என்ன செய்வான் என்ற பயக்கெடுதி. இவ்வாறான சூழலில் அகப்படாதவர்களால் இப்பயங்கரச் சத்தங்களையும் வேதனைகளையும் உணரமுடியாதிருக்கும். பல்வேறு முனைகளிலிருந்து படையெடுப்புக்களுடன் நவீன ஆயுதங்களின் பிரயோகமுமாக வெற்றிக்களிப்பில் வெறி கொண்ட இராணுவம் முன்னோக்கி நகரும் போது இவ்வாறிருந்தால் அது கைப்பற்றிய இடங்களிலுள்ள மக்களின் நிலை என்ன? இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் நிலை கொண்டு அங்கிருக்கும் மக்களைத் துன்புறுத்த ஆரம்பிக்கும். புலி என்ற சந்தேகத்தில் பிடித்துச் சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள். ஊரடங்குச் சட்டம் சுற்றிவளைப்புகள் தேடுதல்கள் காவலரண்கள் மிதிவெடிகள் மற்றும் மறைந்திருந்து தாக்கிவிட்டுத் தப்பியோடல் என்பன தொடரும் போரின் விளைவுகளில் அடங்கிடும். சிறீலங்கா அரசோ வன்னி மக்களை வவுனியாவுக்கு வரச் சொல்கிறது. இந்த யுத்த வளையத்திலிருந்து தப்பித்தால் அங்கும் நிம்மதியான சுதந்திர வாழ்வில்லை. முகாம்களில் வைக்கப்பட்டு விசாரணைகளும் கைதுகளும் நடைபெறுகின்றன. உயிருக்கு உத்தரவாதமுண்டா? இதுவும் யுத்த நடவடிக்கையின் வேறொரு வடிவமாகத் துன்புறுத்தும் செயலாகிவிடுகிறது. கிளிநொச்சியின் உருத்திரபுரத்தில் வாழ்ந்த சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து கடைசியாக முல்லைத்தீவின் உடையார்கட்டுக்கு வந்தனர். பொழிந்த எறிகணைகளால் திக்குத் திசை தெரியாமல் ஓடி உடன் வந்தவர்களையும் பிரிந்து எஞ்சிய சிலர் நான்கு நாட்களாக உணவின்றித் தவித்து ஒரு பதுங்கு குழியில் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் “இந்தச் சத்தங்கள் கேட்காத இடத்துக்குக் கூட்டிப் போய்விடுங்கள்”என்பதை மட்டுமே கேட்டு அழுதார்களாம். பின்னர் அவர்களைச் சுற்றிவளைத்த இராணுவம் உடனடியாக வவுனியாவுக்கு ஏற்றி அனுப்பியது. உடுத்த உடையுடன் போரால் ஓடிய களைப்பும் பட்டினியுமாகவே போய்ச்சேர்ந்தனர். முகாமில் வெளியே நடமாடக் கட்டுப்பாடு. தம் உறவினர் எவராவது முகாமிலிருக்கின்றனரா என்று தேடிப் போகும் வவுனியாவில் வாழும் மக்களைப் பின்தொடர்ந்து இராணுவப்புலனாய்வினர் சென்று விசாரணை நடத்துகின்றனர். இதனால் அம்மக்களின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களுக்குப் பொருளுதவியோ உடுப்புகளோ வழங்குவது கூடச் சிரமமாயுள்ளது. வன்னிப் பிரதேசம் இவ்வளவு காலமாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது வீட்டுக்கொருவர் கட்டாயமாக இணைக்கப்பட்டனர். இது இரண்டுக்கும் மேற்பட்ட வருடங்களாக மிகக் கண்டிப்பான நடைமுறையாக இருந்தது. ஆகவே அங்கிருக்கும்பல குடும்பங்களில் யுத்த முனையில் நிற்கும் ஒரு மகனோ மகளோ இருப்பார்கள். கட்டாயப் பயிற்சியில் ஆயுதந் தூக்கிய அவர்களை விட்டுப் போவதற்கும் பெற்றோர் தயங்குவார்கள். காயம் பட்டு வரும் தன் பிள்ளைகளின் நிலையையும் போரில் இறந்து போவதையும் யோசிக்க வேண்டிய நிலையிலிருப்பார்கள். இதன் பின்னர் கைப்பற்றப்பட்ட இடங்களில் அவர்கள் வாழத் தொடங்கும் போது புலிக் குடும்பமாகப் பார்க்கப்படும் பேரபாயமும் இல்லாமலில்லை. எப்பக்கம் நோக்கினாலும் பொதுவில் மக்கள் நெருப்பு வளையத்துக்கள் சிக்கியவர்களாகவே இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முத்துக்குமார் அவரைத் தொடர்ந்து இருவர் மலேசியாவில் ஒருவர் மற்றும் ஐக்கியநாடுகள் சபையின் முன் ஒருவரென தீயில் எரிந்து இறந்து போனவர்களின் மரணங்கள் இலங்கை இந்திய அரசுகளை அசைக்கவில்லை.நிலைமை முல்லைத்தீவில் மோசமாகியபடியே போகின்றது.கடந்த பதினான்காம் திகதி பிரித்தானியப் பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தின் முன் தமிழ் இளைஞரொருவர் பெற்றோல் ஊற்றித் தன்னை எரித்துக் கொள்ள முயன்ற போது பொலிசாரால் தடுத்துக் காப்பாற்றப் பட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளும் துன்பங்களும் எவரையும் அசைக்காத போது உள்நாட்டுப் பிரச்சனையைத் தான் தீர்த்து விடும் எல்லையை நெருங்கிக் கொண்டிப்பதாக மகிந்த ராஐபக்சே இறுமாந்துள்ளார். இந்தியாவிலிருந்து கொண்டு வந்த வெள்ளரசுக் கிளையையும் பௌத்தத்தையும் நாட்டிவளர்த்த மகிந்தவின் மறுபிறவி அவரேயெனச் சிங்களம் புகழ்கிறது. தம்மைத் தாமே அழித்துக் கொண்டு உச்சபட்ச வேதனையை அனுபவித்தவாகளின் மரணங்கள் அநியாய இழப்புகளே. தமிழினத் தலைவர்கள் காவலர்கள் என மேடைகளில் முழங்குபவர்கள் எவராவது தீயில் எரிந்து புரட்சியை அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை என்பதைக் கவனிக்க மறந்து விட்டார்கள். முத்துக்குமாரை மாவீரன் எனப் புகழ்ந்து கவிதைகள் எழுதி இன்னும் சிலரையும் உணர்ச்சி வசப்படுத்தி அநியாய உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறோம். அதிர்வலைகளையும் புரட்சியலைகளையும் ஏற்படுத்த ஒரு மனித உயிர் நெருப்பில் எரிந்து வேதனையை அனுபவிக்க வேண்டுமா? புலிகளால் பல வருடங்களாகக் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வாகம் செய்த வன்னிப்பிரதேசங்கள் இழக்கப்பட்டு விட்டன. போரில் கையோங்கிய நிலையிலிருக்கும் சிறீலங்கா அரசு யுத்தநிறுத்தம் பேச்சுவார்த்தையென இறங்கி வருமா? போர்நிறுத்தங்கள் பேச்ச வார்த்தைகள் யுத்தமீறல்களென இரு தரப்பும் காலத்துக்குக் காலம்நகர்த்திச் சென்றனர். என்றுமில்லாத அளவுக்குக் கும்பலாக கொல்லப்படும் வதைபடும் உயிர்கள் இன்றைய தீர்வை வேண்டி நிற்கின்றன. ஆனால் சிறீலங்கா அரசோ தன் வெற்றிக்களிப்பை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு எவரது கண்டனத்துக்கும் செவிகொடுக்காது சிங்கக்கொடி ஏற்றுவதை மட்டுமே இலக்கெனப் படை நடத்திச் செல்கின்றது.

ஓவியம்: மோனிகா
-----------------------------
நன்றி: தூமை இணையத்தளம்

Saturday, March 7, 2009

வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!

சர்வதேச மகளிர் தினம் 08.03.2009

வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!

இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் அமைப்பின் சார்பில்

போரைப் பற்றிய பெண்களின் நோக்கு


இலங்கையின் இனப்பிரச்சினை, மிகப் பயங்கரமான துன்பியல் பின்னணியை எதிர்நோக்கியுள்ள ஒரு காலகட்டத்திலேயே, நாம் 2009 சர்வதேச மாதர் தினத்தை (08.03.2009) நினைவு கூருகின்றோம்.

லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, போரையே இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் மத்தியில் பெண்களும் சிறுவர்களும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், என்பதையே எமக்குக் கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைகளில் கைவிடப்பட்ட நிலையில், தனிமைப்பட்டுள்ள சிறுவர்கள், தமது பெற்றோர்களைத் தேடி அழுதுபுலம்புவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. வானத்திலிருந்து விழும் எறிகணைகள் காரணமாகவும், போர் புரியும் தரப்பினரின் மோதல் காரணமாகவும், நிராயுதபாணிகளான சிவில் மக்களில் பெரும்பாலான எண்ணிக்கையினர் படுமோசமான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கை-கால்களை இழந்த நிலையில், கர்ப்பிணித் தாய்மார், பாரிய எண்ணிக்கையில் திருகோணமலை-வவுனியா மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க அறிக்கைகளுக்கமைய, கர்ப்பிணித் தாய்மார் சுமார் 600 பேர் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும், என்பதையே கடந்த 3 தசாப்தங்களாக, இலங்கையின் அன்னையரும், புதல்வியரும் அமைப்பு, இரு தரப்பினரையும் வலியுறுத்தி வந்துள்ளது. அதேசமயம், சகல தேசிய இனங்களும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு உகந்த அரசியல் சட்டகத்தை உருவாக்க வேண்டும், என்பதையும் நாம் வலியுறுத்தி வந்தோம். இன்று எதிர்நோக்கியுள்ள அரசியல் துன்பியல் சம்பவங்களைத் தடுப்பதற்கே, நாம் தொடர்ச்சியாக சமாதானத்திற்கு எம்மை அர்ப்பணித்திருந்தோம்.

போரும் சுனாமியும், இம்சையையும், இடப்பெயர்வையும் மாத்திரமே இன்று பெண்களுக்கு உரித்தாக்கியுள்ளது. போரின் இறுதிப் பெறுபேறுகள் எவ்வாறு அமைந்தாலும், அதன் கொடூரமான விளைவுகளை தாய்மாரும் மனைவியருமே அனுபவிக்கின்றனர். ஓட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களே துயரங்களை அனுபவிக்கின்றனர். போரில் மாண்ட ஆயுதப்படையினரின் பிரேதங்கள், பாரிய எண்ணிக்கையில் வந்து குவிவதாக எமது உறுப்பினர் அமைப்புக்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஹசலக்க, ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய போன்ற கிராமங்களுக்கு பிரேதங்கள் வந்த வண்ணமுள்ளன. தமிழ் விதவைகள் மாத்திரமன்றி, சிங்கள சமூகத்திலும் விதவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் அரசியல் தீர்வுகள் காரணமாக சிங்களக் கிராமங்களும் விதவைக் கிராமங்களாக மாறிவருகின்றன.

பொருளாதார நெருக்கடி பெண்களைப் பாதிக்கும் முறை

இலங்கை மாத்திரமல்லாது முழு உலகமும் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நெருக்கடி குறிப்பாக முதலீட்டு வலயங்களிலும் புலம்பெயர் உழைப்பாளர் மத்தியிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. வேலைவாய்ப்பற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்திலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேலைவாய்ப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

தேயிலைத் தொழிலிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழ்ப் பெண்களின் சம்பளம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், 47% ஆடை ஏற்றுமதியிலேயே கிடைக்கிறது. சுதந்திர வர்த்தக வலயத்திற்கு புளுP 10 சலுகை கிடைப்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. எனவே, தொழிற்சங்கங்களை அமைப்பது இங்கு தடைசெய்யப்பட்டு வருகின்றது. இந்த அச்சுறுத்தல்களின் மத்தியில் ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுத்தெருவில் கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் முயன்று வருகின்றது. இத்தகைய நிலைமை உருவானால், இளம் பெண்களே பாரிய அநீதிக்குள்ளாவார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புலம்பெயரும் உழைப்பாளர்களாகிய பெண்களே, எமது பொருளாதாரத்தை வளப்படுத்தி வருகின்றனர். மிகப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?.....

கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. எமது வலைப்பின்னல் உட்பட பல பெண்கள் அமைப்புக்கள், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 30% வீதத்தால் அதிகரிப்பதற்கு, பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னே 2006இல் தமது யோசனைகளை முன்வைத்தன. எமது கோரிக்கையை, மேற்படி தெரிவுக்குழு பொருட்படுத்தவில்லை. அதேசமயம், அரசியற் கட்சிகளும் தாமாகவே முன்வந்து, 30% வீதமான பிரதிநிதித்துவத்தைப் பெண்களுக்கு ஒதுக்க, மறுத்து வருகின்றன. இந்நிலைமைகளின் கீழ், அரசியல் கட்சிகளில் செயற்படும் பெண்கள், தைரியமிழந்துள்ளனர். ஒருபுறம் தேர்தலில் ஈடுபடும் பெண்களும், குடும்ப ஆதிக்கம் - பணப்பலம் என்பவை முன்னே, பாரிய போராட்டத்தில் ஈடுபட நேர்ந்துள்ளது. மறுபுறம் சுதந்திரமான – நீதியான தேர்தல் நடவடிக்கைகளை மீறிச் செயற்படும் தேர்தல்களை, பெண்கள் எதிர்நோக்க முடியாத ஒரு நிலைமையும் நிலவுகின்றது.

ஜனநாயகமே எமது கோரிக்கை

ஒட்டுமொத்தமாக ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திர ஊடகம் என்பவற்றிற்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். போருக்கான கூக்குரலிடையே மறைந்திருந்த வண்ணம் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள சமூகம் அரசியலில் செயற்பட முன்வருதல் செயலிழக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளையும் இம்சையையும் புறக்கணிப்போம்

அம்பாறை – மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்படுகின்றன. குறிப்பாக, சர்வதேச மாதர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மார்ச் 1ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 14 வயது தமிழ்ச் சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறிப்பிட்ட சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டமையால், மறுநாள் ஆயுதப்படையினர் அங்கு வந்து மேற்படி தாயாரை அடித்து உதைத்து கொன்றுள்ளனர், என அறிக்கைகள் கூறுகின்றன. இது பெண்கள் அனைவருக்கும் எதிரான பாரிய அவமானமாகும். [திருத்தம்: இறந்தது சிறுமியின் தாயார் அல்ல என்பது பின்னர் வெளியானனது. கொல்லப்பட்ட பின்னவர் சமூக சேவகி ஒருவர் ஆவர்]

வன்முறையையும் இம்சைகளையும் இல்லாதொழிக்க, பெண்களாகிய நாம் முன்வருதல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள, பெண்களுக்கெதிரான இம்சைகள் பற்றிய விசேட பிரகடனத்திற்கு அமைய (48-140) பெண்களுக்கெதிரான இம்சை, சமாதானம் - அபிவிருத்தி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான முக்கிய தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இம்சை, அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும். பெண்களுக்கெதிரான வன்முறை ஆண்-பெண் இருபாலாருக்கிடையில் நிலவும் அசமத்துவ அதிகார உறவையே வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறையை புறக்கணிப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். ஏனெனில், இம்சைக்கு உள்ளாகும் பெண் - உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள், காதலி அல்லது பாட்டியாக - இருக்கலாம். இவ்வுறவுகளைப் பயன்படுத்தி பெண்களைத் தாக்குவதற்கு, எரிப்பதற்கு, துஷ்பிரயோகம் செய்வதற்கு அல்லது கொல்வதற்கு ஆண்களுக்கு எதுவித உரிமையும் கிடையாது, என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

• பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டங்களை அங்கீகரிக்கவும்.

• பெண்களுக்கெதிரான வன்முறை மனித உரிமை மீறலாகும்.

• வீட்டு வன்முறைக்கெதிரான சட்டத்தை அர்த்தபுஷ்டியுள்ளதாக்குவோம்!

• பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சியை புறக்கணிப்போம்! பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சியாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குக!

• சுதந்திர வர்த்தக வலயத்தில் சமிளா திசாநாயக்க சகோதரியை கொலை செய்த பாதகனுக்கு உரிய தண்டனை வழங்குக!

• புலம்பெயர் தேசிய நியதிச் சட்டத்தை உடனடியாக செயற்படுத்துக!

• போரை நிறுத்தி இயல்பு வாழ்க்கையை அமுலாக்க இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்க!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமத்தில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்புணர்ச்சி தொடர்பாக முறைசார் விசாரணைகளை நடத்தி குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு அவர்களின் அந்தஸ்தைப் பாராமல் தண்டனை வழங்குக!

March 2009/ thanx: Udaru oodaru.com

Tuesday, January 27, 2009

தோற்கிற பக்கம்

பிரசித்திவாய்ந்த 7 சாமுராய்கள் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், தலைமை சாமுராய் தமது வெற்றியைக் கொண்டாடும் விவசாயிகளைப் பார்த்தவாறு கூறுவான் "ஆக, நாங்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டோம்." சக வீரன் புதிருடன் பார்க்க, நீத்தார் கல்லறைகளை நோக்கி அவர் தொடர்ந்து சொல்லுவார்: "இந்த வெற்றி எங்களுடையது அல்ல, அவர்கள் {விவசாயிகள்} வென்றிருக்கிறார்கள். நாங்கள் மீண்டும் தோற்றுவிட்டோம்."
யுததங்களைப் பொறுத்தவரை -வீரர்கள் உள்ளடங்கலாக - தோற்கடிக்கப்படுவது என்றும் மக்களே . ஆம், ஏலவே சொல்லப்பட்டு வந்ததே போல, அதிகாரமைய்யங்களின் பசிக்கு இரையாகுவதுஅவர்களே .
---

Thursday, January 22, 2009

அப்பா, மகன்



புகைப்படம்