Saturday, March 7, 2009

வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!

சர்வதேச மகளிர் தினம் 08.03.2009

வன்முறையைப் புறக்கணிப்போம்! வாழ்வைப் பேணுவோம்!

இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் அமைப்பின் சார்பில்

போரைப் பற்றிய பெண்களின் நோக்கு


இலங்கையின் இனப்பிரச்சினை, மிகப் பயங்கரமான துன்பியல் பின்னணியை எதிர்நோக்கியுள்ள ஒரு காலகட்டத்திலேயே, நாம் 2009 சர்வதேச மாதர் தினத்தை (08.03.2009) நினைவு கூருகின்றோம்.

லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக, போரையே இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் மத்தியில் பெண்களும் சிறுவர்களும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், என்பதையே எமக்குக் கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன. வைத்தியசாலைகளில் கைவிடப்பட்ட நிலையில், தனிமைப்பட்டுள்ள சிறுவர்கள், தமது பெற்றோர்களைத் தேடி அழுதுபுலம்புவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. வானத்திலிருந்து விழும் எறிகணைகள் காரணமாகவும், போர் புரியும் தரப்பினரின் மோதல் காரணமாகவும், நிராயுதபாணிகளான சிவில் மக்களில் பெரும்பாலான எண்ணிக்கையினர் படுமோசமான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கை-கால்களை இழந்த நிலையில், கர்ப்பிணித் தாய்மார், பாரிய எண்ணிக்கையில் திருகோணமலை-வவுனியா மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க அறிக்கைகளுக்கமைய, கர்ப்பிணித் தாய்மார் சுமார் 600 பேர் வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும், என்பதையே கடந்த 3 தசாப்தங்களாக, இலங்கையின் அன்னையரும், புதல்வியரும் அமைப்பு, இரு தரப்பினரையும் வலியுறுத்தி வந்துள்ளது. அதேசமயம், சகல தேசிய இனங்களும் சமத்துவத்துடன் வாழ்வதற்கு உகந்த அரசியல் சட்டகத்தை உருவாக்க வேண்டும், என்பதையும் நாம் வலியுறுத்தி வந்தோம். இன்று எதிர்நோக்கியுள்ள அரசியல் துன்பியல் சம்பவங்களைத் தடுப்பதற்கே, நாம் தொடர்ச்சியாக சமாதானத்திற்கு எம்மை அர்ப்பணித்திருந்தோம்.

போரும் சுனாமியும், இம்சையையும், இடப்பெயர்வையும் மாத்திரமே இன்று பெண்களுக்கு உரித்தாக்கியுள்ளது. போரின் இறுதிப் பெறுபேறுகள் எவ்வாறு அமைந்தாலும், அதன் கொடூரமான விளைவுகளை தாய்மாரும் மனைவியருமே அனுபவிக்கின்றனர். ஓட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், முஸ்லீம் பெண்களே துயரங்களை அனுபவிக்கின்றனர். போரில் மாண்ட ஆயுதப்படையினரின் பிரேதங்கள், பாரிய எண்ணிக்கையில் வந்து குவிவதாக எமது உறுப்பினர் அமைப்புக்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஹசலக்க, ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய போன்ற கிராமங்களுக்கு பிரேதங்கள் வந்த வண்ணமுள்ளன. தமிழ் விதவைகள் மாத்திரமன்றி, சிங்கள சமூகத்திலும் விதவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆட்சியாளர்களின் அரசியல் தீர்வுகள் காரணமாக சிங்களக் கிராமங்களும் விதவைக் கிராமங்களாக மாறிவருகின்றன.

பொருளாதார நெருக்கடி பெண்களைப் பாதிக்கும் முறை

இலங்கை மாத்திரமல்லாது முழு உலகமும் இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நெருக்கடி குறிப்பாக முதலீட்டு வலயங்களிலும் புலம்பெயர் உழைப்பாளர் மத்தியிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. வேலைவாய்ப்பற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்திலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேலைவாய்ப்பற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

தேயிலைத் தொழிலிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழ்ப் பெண்களின் சம்பளம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில், 47% ஆடை ஏற்றுமதியிலேயே கிடைக்கிறது. சுதந்திர வர்த்தக வலயத்திற்கு புளுP 10 சலுகை கிடைப்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது. எனவே, தொழிற்சங்கங்களை அமைப்பது இங்கு தடைசெய்யப்பட்டு வருகின்றது. இந்த அச்சுறுத்தல்களின் மத்தியில் ஆடைத் தொழிற்சாலைகளை இழுத்து மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுத்தெருவில் கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் முயன்று வருகின்றது. இத்தகைய நிலைமை உருவானால், இளம் பெண்களே பாரிய அநீதிக்குள்ளாவார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புலம்பெயரும் உழைப்பாளர்களாகிய பெண்களே, எமது பொருளாதாரத்தை வளப்படுத்தி வருகின்றனர். மிகப் பாதுகாப்பற்ற நிலையிலேயே இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?.....

கடந்த மூன்று ஆண்டுகளாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு பெண்கள் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. எமது வலைப்பின்னல் உட்பட பல பெண்கள் அமைப்புக்கள், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 30% வீதத்தால் அதிகரிப்பதற்கு, பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னே 2006இல் தமது யோசனைகளை முன்வைத்தன. எமது கோரிக்கையை, மேற்படி தெரிவுக்குழு பொருட்படுத்தவில்லை. அதேசமயம், அரசியற் கட்சிகளும் தாமாகவே முன்வந்து, 30% வீதமான பிரதிநிதித்துவத்தைப் பெண்களுக்கு ஒதுக்க, மறுத்து வருகின்றன. இந்நிலைமைகளின் கீழ், அரசியல் கட்சிகளில் செயற்படும் பெண்கள், தைரியமிழந்துள்ளனர். ஒருபுறம் தேர்தலில் ஈடுபடும் பெண்களும், குடும்ப ஆதிக்கம் - பணப்பலம் என்பவை முன்னே, பாரிய போராட்டத்தில் ஈடுபட நேர்ந்துள்ளது. மறுபுறம் சுதந்திரமான – நீதியான தேர்தல் நடவடிக்கைகளை மீறிச் செயற்படும் தேர்தல்களை, பெண்கள் எதிர்நோக்க முடியாத ஒரு நிலைமையும் நிலவுகின்றது.

ஜனநாயகமே எமது கோரிக்கை

ஒட்டுமொத்தமாக ஜனநாயகம், மனித உரிமைகள், சுதந்திர ஊடகம் என்பவற்றிற்குப் பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பயங்கரவாதத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். போருக்கான கூக்குரலிடையே மறைந்திருந்த வண்ணம் இவ்வொடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதன் காரணமாக சிங்கள சமூகம் அரசியலில் செயற்பட முன்வருதல் செயலிழக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளையும் இம்சையையும் புறக்கணிப்போம்

அம்பாறை – மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அறிக்கையிடப்படுகின்றன. குறிப்பாக, சர்வதேச மாதர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மார்ச் 1ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது 14 வயது தமிழ்ச் சிறுமி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறிப்பிட்ட சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டமையால், மறுநாள் ஆயுதப்படையினர் அங்கு வந்து மேற்படி தாயாரை அடித்து உதைத்து கொன்றுள்ளனர், என அறிக்கைகள் கூறுகின்றன. இது பெண்கள் அனைவருக்கும் எதிரான பாரிய அவமானமாகும். [திருத்தம்: இறந்தது சிறுமியின் தாயார் அல்ல என்பது பின்னர் வெளியானனது. கொல்லப்பட்ட பின்னவர் சமூக சேவகி ஒருவர் ஆவர்]

வன்முறையையும் இம்சைகளையும் இல்லாதொழிக்க, பெண்களாகிய நாம் முன்வருதல் வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள, பெண்களுக்கெதிரான இம்சைகள் பற்றிய விசேட பிரகடனத்திற்கு அமைய (48-140) பெண்களுக்கெதிரான இம்சை, சமாதானம் - அபிவிருத்தி மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான முக்கிய தடையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இம்சை, அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீறும் செயலாகும். பெண்களுக்கெதிரான வன்முறை ஆண்-பெண் இருபாலாருக்கிடையில் நிலவும் அசமத்துவ அதிகார உறவையே வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறையை புறக்கணிப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும். ஏனெனில், இம்சைக்கு உள்ளாகும் பெண் - உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள், காதலி அல்லது பாட்டியாக - இருக்கலாம். இவ்வுறவுகளைப் பயன்படுத்தி பெண்களைத் தாக்குவதற்கு, எரிப்பதற்கு, துஷ்பிரயோகம் செய்வதற்கு அல்லது கொல்வதற்கு ஆண்களுக்கு எதுவித உரிமையும் கிடையாது, என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

• பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சட்டங்களை அங்கீகரிக்கவும்.

• பெண்களுக்கெதிரான வன்முறை மனித உரிமை மீறலாகும்.

• வீட்டு வன்முறைக்கெதிரான சட்டத்தை அர்த்தபுஷ்டியுள்ளதாக்குவோம்!

• பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சியை புறக்கணிப்போம்! பெண்களுக்கெதிரான வன்புணர்ச்சியாளர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குக!

• சுதந்திர வர்த்தக வலயத்தில் சமிளா திசாநாயக்க சகோதரியை கொலை செய்த பாதகனுக்கு உரிய தண்டனை வழங்குக!

• புலம்பெயர் தேசிய நியதிச் சட்டத்தை உடனடியாக செயற்படுத்துக!

• போரை நிறுத்தி இயல்பு வாழ்க்கையை அமுலாக்க இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொள்க!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளாவெளிக் கிராமத்தில் இடம்பெற்றுள்ள பாலியல் வன்புணர்ச்சி தொடர்பாக முறைசார் விசாரணைகளை நடத்தி குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு அவர்களின் அந்தஸ்தைப் பாராமல் தண்டனை வழங்குக!

March 2009/ thanx: Udaru oodaru.com

0 கருத்துக்கள்: