Thursday, June 5, 2008

சுவர்கள். . . . . . .


இடி அல்லது இடிப்போம்..

ஆதவன் தீட்சண்யா


நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’


(புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
நன்றி: கீற்று இணையம்

1 கருத்துக்கள்:

')) said...

http://dystocia.weblogs.us/archives/280
http://kalachuvadu.com/issue-103/page75.asp