எழுதியவர்: - கருணாகரன். | |
| |
Monday, 30 April 2007 'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார். அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய கவிதைகள் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது. அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும். இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே. 'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது. அதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம் இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது. ஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் தான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார். அன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது. விவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார். எஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில் அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார். எஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன. 'சிறகுகள், குருதியொழுகும்; சிறகுகள் ஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் … எனது அடையாளம் நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …' ' அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச் சிலுவையிலறைவதா ' எஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக் குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது. எஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம். அவர் எழுதினார,; ' உன்னை அவர்கள் கொல்வார்கள் நிச்சயமாக நீயே அதை உணர்வாய் அப்பரிசு நிச்சயமற்ற உனது காலத்தில் எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. ' இதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது. அன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக. சிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன். அந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள். ) அப்பால் தமிழ் |
Monday, April 30, 2007
அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 8:35:00 PM 1 கருத்துக்கள்
Thursday, April 26, 2007
சுயம்
1
என்னைப் பேச விடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.
எனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைகிறது.
வேண்டாம்,
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.
வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்.
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அநுமதியளியுங்கள்,
அவர்களின் தொண்டைக் குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்
2
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை
எஸ்.போஸ்
காலச்சுவடு, இதழ் 27, அக்.-டிசம்பர் 99
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:19:00 AM 0 கருத்துக்கள்
Labels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், கவிதை
Wednesday, April 25, 2007
கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு
மழைக்காலம் தொடங்கிவிட்டது;
ஈசல்கள் பறக்கின்றன.
நண்பர்களே!
இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,
இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்
எமது கண்களை நோக்கி வருகின்றன.
ஈசல்கள்
இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.
காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:
தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?
ஒளியற்ற இந்த இரவினுள்
சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்
மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்
ஈசல்கள் ஊர்கின்றன.
நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்
தேவாலயங்களில்
கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;
அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,
எவ்வளவு சந்தோசமானது
கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!
எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.
நண்பர்களே!
சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
மழைக்காலம் தொடங்கிவிட்டது
கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
நாம் என்ன செய்ய!
அவர்களே எம்மைப் பணித்தனர்
இரத்தத்தைக் குடிக்குமாறும்
சரீரத்தைப் புசிக்குமாறும்.
இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்
சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்
அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு
நீங்களே உணர்வீர்கள்,
அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத
உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென
முன்வினைச் செயலும்
கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்
உங்களைக் காப்பாற்றிவிட்டதென.
அதன் நிமித்தம்,
குருதிச் சிதறல்களும்
கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்
காதல்களையும்
பெற்றோர்களையும்
மனைவியரையும்
பிள்ளைகளையும்
எழுதிய சொற்களால் நிறைந்த
உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய
ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்
நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
எனினும் நாம் காண்கிறோம்,
இரவை அள்ளிச் செல்லும்
எமது ஓலத்தின் அடியிலிருந்து
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை.
ஈசல்கள் எமது விழிகளை முறித்து
தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.
எனினும் நாம் காண்கின்றோம்,
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.
* * *
எஸ்போஸ்
http://tamil.sify.com/kalachuva
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 2:10:00 AM 2 கருத்துக்கள்
Labels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், கவிதை
Sunday, April 15, 2007
வாசுதேவனுக்கு ஒரு பதில்
எழுதியவர்: கருணாகரன் | |
| |
14 April 2007 பரதேசிகளின் பாடல்கள்: பரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம் வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். புலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை வாசுதேவன் அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறிப்பும் எழுதப்படவில்லை. பதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக் குறித்த அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன. அந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும் புலம்பெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில் எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற ஆகக்கூடிய பொறுப்புணர்ச்சி மனங்கொள்ளப்பட்டுள்ளது. சூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக வேறுபட்டிருக்கிறதே என்ற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே கவனிக்கவேண்டும். புலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான். புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதேவன் சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டே பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்போனது. ஆகவே இவற்றுக்கப்பால் அடிப்படையில் எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை. உண்மையில் அதற்கான காரணமென்ன. அந்தக்காரணமோ அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா. மனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும் சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம் அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப் பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே. ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும் வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும் ஆழ்பரப்பையும் நிலைகொள்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன். ஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின் பாடல்களும் இருக்கின்றன. அதற்காக இந்த அவலம் சாதாரணமானது என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும் கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும் முறையிலும் உணர்த்தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே. புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக. பரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவந்திராத புதிய பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி. இப்போது மீண்டும் மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும். ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று. அதற்காக மரணத்துள் வாழும் சூழல் மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும். அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும் இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில் திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து விடும். பரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர் இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும் அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம் அப்படியொரு நிலையில்தானே உருவாகியிருக்கவும் முடியும். குறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர் குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும் நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில் பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும் அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை. இதன்படி பரதேசிகள் என்ற வகையில் இந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முதல்தலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே. அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்ல மெல்ல கழன்று விலகிச்செல்கின்றன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர் பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில் திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக ஊருக்குப்போக விரும்புகிறீர்கள் என்று. ஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும். அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம். அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்கள் கட்டாயம் பார்ப்பது தேவை என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார். ஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம் என்றெல்லாம் அந்த நண்பர் தன்னுடைய பிள்ளைகளுக்கு விளக்கியிருக்கிறார். அதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா. நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள் ஜேர்மனிக்குப் போகிறோம் என்று. அந்தப்பிள்ளைகள் ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள் சிறுவயதுக் கல்வியைப் படித்தார்கள். அதனால் அவர்களுக்கு இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும் ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின் விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும் தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக விரும்புகிறார்கள். இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல. அடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான் தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக் கடப்பதுதான சவால். பரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும் பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை. பரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும் வெவ்வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை ஒன்றுதான். பரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்களை இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம் உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி விடுகிறார்கள். இங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும் மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. உள்ளுரில் இடம்பெயர்கிறவர்களுக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்டிலும் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும் சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன. மற்றதில் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. தாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம் புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும் சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும். இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது. அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும் வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும் புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம் கொள்ளமுடியாது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது அபத்தமானது. உண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள் அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும் வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும் பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால் இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும். பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும் ஊருக்கோ போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே. இந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது. இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன. இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத் துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும். இவ்வாறே இருதரப்பும் தங்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று விவாதத்தைக் கிளப்புவது பெரும் மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும். வாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர் புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன் விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும் என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும். புலம்பெயரிகளின் பிரச்சினை என்பதும் புலம் பெயராதோரின் பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். தன்மைகளில்தான் வேறுபாடு. வேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில் தன்னைத்தினமும் இழக்கவேண்டியேற்படும் அவலத்தையும் இரண்டாம் மூன்றாம் நிலை மனிதராக மற்றவர்கள் கருதி நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும் புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து அரசியலாக்க முனைவது வருத்தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும். பரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன் திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின் தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல. தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின் பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது புரிந்து கொள்ளலாம். இந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில் பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன். வாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற அவலங்களும் கொடுமைகளும் உண்மையே. இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது. புலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில் அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம் நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும். போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும் அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை. இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும் குறகிய மன வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன் முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை. பரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர் நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில் தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே இட்டுச்செல்லும். ஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஒருவருடைய துயரத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான் மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின் தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன எனக்குறிப்பிடப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப் படவேண்டும். அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது. தேவையற்ற விதத்ததில் அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது. |
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:03:00 PM 0 கருத்துக்கள்
Labels: வாசிக்க...
Saturday, April 14, 2007
"பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.
எழுதியவர்: க.வாசுதேவன் | |
| |
March 2007 "பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.
காலமும் சம்பங்களும் கடூரகதியில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் துன்பியலும் அவலங்களும் உலகமயமாதலெனும் அதிபார உருளைக்குள் நசிந்து அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பதை விடவும், கணக்கிடலுக்கு அப்பாலுமாய் அநாமதேயமாகுதல் விரைவுபட்டுக்கொண்டிருக்கிறது. உற்றுநோக்கில் உணரப்படும் இந்த யதார்த்தம் அச்சமூட்டுவதாயும் இருக்கிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றில் நடைபெற்ற மானிட இடப்பெயர்வுகளையும் அலைவுகளையும் அவற்றின் விளைவுகளையும் வசதி கருதிச் சுருக்கிப்பார்த்தால் அச்சம் எழுவது தவிர்க்கமுடியாததாகிறது. அநாமதேயமாகுதல் மானிடத்தைப் பல்வழிகளிலும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கென ஒரு விவாதத்தை முன்னெடுப்பது அர்த்தமற்ற ஒன்று. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் அநாயதேயங்கள் குவிந்து கிடக்கும் புறநகரங்கள் இதற்கான வெளிப்படையான ஆதாரங்கள்.
"ஏஜென்சிக்"காரருடன் ஆரம்பித்து பல்லாயிரம் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து - வரும் வழிகளில் பாலியல் வன்முறைகளுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் உட்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏராளம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். இருப்பிட உரிமையைக் கெஞ்சுதல்களின் பின்னர் பெற்றுள்கொள்வதுடன் முடிவடைவதில்லை இச்சோகம். அந்நியர்களாய், அடிப்படை மனித உரிமைகளை உரக்கக் கேட்க மொழியற்றவர்களாக, மௌனிகளாக, இவையெல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனும் தத்துவத்தைத் தமதாக்கி, மாடாய் அடித்து, மற்றவர்களுக்கும் தங்களால் முடிந்ததைச் செய்து இறுதியில் ஒரு நாள் இல்லாமலாகப்போகும் பரதேசிகளின் சோகத்தின் ஒரு துளியை மட்டுமே சுமந்து வந்திருக்கிறது "பரதேசிகளின் பாடல்கள்". பரதேசிகளின் பாடல்களை நாட்டார் பாடல்களுடனோ பழமொழிகளுடனோ அன்றில் வேறெந்த இலக்கிய வடிவங்களுடனோ ஒப்பீடு செய்தலில் பாரிய தவறுள்ளதாகத் தோன்றுகிறது.
பரதேசம்போனவர்கள், நாட்டைவிட்டுப்போனவர்கள், அந்நியர்கள் எனும் அர்த்தப்படுத்தல்களே "பரதேசிகள்" எனும் சொல்லிற்கு இன்றைய நிலையில் பொருத்தமானதாகும். இவ்வர்த்தப்படுத்தலூடாகவே பரதேசிகளின் பாடல்கள் உள்வாங்கப்படல் வேண்டும். அது தவிர்ந்த இன்னொரு அர்த்தப்படுத்தல் அபத்தத்திற்கிட்டுச் செல்லும் பாதையைத் தவிர வோறொன்றுமல்ல.
தனது விமர்சனக் கட்டுரையின் மூன்றாவது பகுதியில் திரு கருணாகரன் "பரதேசிகளின் பாடல்கள் தீராச் சுமையை நம்மீது இறக்கி விட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரிப் பரிமாற இந்தப் பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகப்படுகின்றன. எல்லாவற்றிலிருந்தும் வலி தெரிகிறது. பரதேசி காணாமற்போவது இங்கேதான்." எனக்கூறுகின்றார்.
தடைசெய்யப்பட்ட ஒன்றை அல்லது குற்றமாகக் காணப்படக்கூடிய ஒன்றை ஆற்றுவதற்கான முனைப்பை பரதேசிகளின் பாடல்கள் முன்னெடுக்கின்றன எனும் அர்த்ப்பாடு இங்கு துல்லியமாகத் தெளிவடைந்து கிடக்கிறது.
|
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 10:31:00 PM 0 கருத்துக்கள்
Labels: வாசிக்க...
முகமற்ற கவிஞர்களின் கவிதைகள்.
| |
எழுதியவர்: - கருணாகரன் | |
Wednesday, 07 February 2007 பரதேசிகளின் பாடல்கள். ( நன்றி: அப்பால் தமிழ் |
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 10:14:00 PM 0 கருத்துக்கள்
Labels: வாசிக்க...
Tuesday, April 3, 2007
எனது மகள் கேள்வி கேட்பவள்
-ஜிப்சி-
"தீய"வரிடமிருந்து விலகி நிற்கக் கேட்கிறான்;
'அவனிடமிருந்து' விலகி வந்தால் "வேசை நாயே
நீ கட்டையிலதானடி போவ" என்கிறான்
(எல்லாரும் போறதுதானே?)
பிறழ்வுற்றோர் வாய்களைப் பொத்த ஓதி
மண்டைக்குள்ள பேய்-ய்க் கத்தல் -
"எதிரிகள் பாவிக்கிறார்கள்
எதிரிகள் பாவிக்கிறார்கள்"
யாரிந்த எதிரிகள் சர்வேசா?
'விடிஞ்சா பொழுதுபட்டா'
நீ கூப்பிட்டண்டே விழிக்கின்ற
இந்த எதிரியர் யார்
சிறு எறும்பு
நானா?
ஒரு துரும்பு
நீயா?
தம் இயல்பில் காற்றில் அலையுண்டும்
இம் மரங்களோ?
ஊழியுள்
உற்றவளை உற்றவனை
மென் மேலும்
எதைஎதையோ இழந்தவர்கள்
"கடவுளுக்கு"
நன்றியாக இருத்தல் ஒன்றே
சாத்தியம் என்கிறாயா?
{கவனி! கடவுள் = கடவுள் மட்டுமே}
*ஒரு எல்லைக் கிராமத்துள் நுழைந்து
திட்டமிட்டு 'அவர்கள்' ஆற்றும் வீரச்செயல்களை விஞ்சி
அச்சம் பாவிய எளிய சனங்களை வேட்டையாடி
எஞ்சியதோர் சின்னக் குழந்தையை
தென்னையில் அடித்த்-து-க் கொன்ற போதில் -
அதுதான் 'எதிரி'யானதோ?
{அச்சப் படாதே, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்:
இதை செய்தது 'உன்னவர்கள்' அல்ல}
**வழிபாட்டுத் தலங்களில் தஞ்சமடைந்தவரை
தேடிக் குறி வைத்து கவ்வ விரையும் கழுகுகளென
வானிருந்து குண்டுகள் எறிந்து சூறையாடும்
- அந்தப் பேரரக்கனுடன் போட்டியிட்டு
பாங்கொலி கதற
வெட்டிச் சாய்த்த சகோதர இனமென்ன எதிரியா?
{அச்சங் கொள்ளாதே, இதனை "உன்னவர்கள்" இன்னும்
உரிமை கோரவில்லை!}
...
நான் இன்னும் உரையாடவே ஆரம்பிக்கவில்லை
மனப்பிராந்தியில் அரற்றலாகி மூச்சுவாங்க
உன் பிரசுரங்களைத் திணிக்கிறாய் .
"எதிரியள் பாவிச்சிருவாங்கள்
எதிரியள் பாவிக்க விடக் கூடாது.. ஸ்ஸ
பயந்த மாதிரியே நடந்திற்று
எதிரியள் பாவிக்கிறாங்கள்"
"எதிரிகள்...." - அவர்கள் உன்னை
பாடாய்த்த்தான் படுத்துகிறார்கள்!
குரலினில் ஏனிந்த அச்சம் சர்வேசா?
எங்களை 'அவங்கள்' பாவிக்குமாப்போல
இடையில் 'உண்மை' இருந்தேன் அச்சுறுத்துகிறது?
கேவலம் அது எதிரியர் பாவிப்பதாய் உள்ள
காலக் கொடுமையைப் பார்த்தாயா?
கேட்டால்:
உன் பேரச்சத்தின் பேரில் என்
மண்டையைப் பிளந்து
மூளையை எடுத்து அதுள்
உன் பயங்களை அடைய முனைகிறாய்;
உன்னிடமிருந்து விலகி வந்தால்,
நடுக்கத்தை மறைக்க குரலை உயர்த்தி
எதை எதை எழுத வேண்டுமென
கொடி பிடிக்கிறாய்
(நாளை எப்படி ஓ
விளக்கப் பிடிப்பாயோ)
அ...
நேற்று என் மகள் ஜிப்சி
ஓடியும் திரும்பியும் ஒரு விளையாட்டி-னிடையே
'புறுக்' என சிரித்து
உலகத்தை நாறடிக்கும்
தன் பெருமைக்குரிய குசுவை
உன் எதிரிகள் பாவிப்பரா என
/ உன்னைக்
கேட்டுச் சொல்லச் சொன்னாள்
அட..
இன்றே இவளைப் 4'போட்டால்' என்ன?!
~~
குறிப்புகள்:
ஜிப்சி - 1983இன் இனப்படுகொலைகாலத்தை வாழ்ந்த பெற்றோர் வளர்த்த ஒரே பிள்ளையாதலால் அவளுக்கு நாடோடிகளின் பெயர் சூட்டப்பட்டது.
*சிங்கள எல்லைக் கிராமமொன்றில் உரிமை கோரப்படாத தமிழ்த்தேசியப் படுகொலையின் பிறகு நடந்த சம்பவம் ஒன்றில்
**சிங்களப் பேரினவாத அரசினால் தேவாலயங்களில் பிற பள்ளிகளில் தஞ்சமடைகிற தமிழர்கள் வான்தாக்குதலில் கொலைசெய்யப்படுவர்; சகோதர இனம்: முஸ்லிம்களை அவ்வாறே தமிழர்கள் "எழுத்தில்" அழைத்து வந்தார்கள்.
4போடுதல் = கொலை செய்தல்
~~
மார்ச் 07
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 8:54:00 PM 0 கருத்துக்கள்
Labels: KAYA / க.யசோதர, அரசியல் அங்கதம்