Saturday, April 14, 2007

"பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.

எழுதியவர்: க.வாசுதேவன்

March 2007

"பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.













காலமும் சம்பங்களும் கடூரகதியில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் துன்பியலும் அவலங்களும் உலகமயமாதலெனும் அதிபார உருளைக்குள் நசிந்து அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறது.

மனிதர்களும் அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பதை விடவும், கணக்கிடலுக்கு அப்பாலுமாய் அநாமதேயமாகுதல் விரைவுபட்டுக்கொண்டிருக்கிறது. உற்றுநோக்கில் உணரப்படும் இந்த யதார்த்தம் அச்சமூட்டுவதாயும் இருக்கிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றில் நடைபெற்ற மானிட இடப்பெயர்வுகளையும் அலைவுகளையும் அவற்றின் விளைவுகளையும் வசதி கருதிச் சுருக்கிப்பார்த்தால் அச்சம் எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.

அநாமதேயமாகுதல் மானிடத்தைப் பல்வழிகளிலும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கென ஒரு விவாதத்தை முன்னெடுப்பது அர்த்தமற்ற ஒன்று. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் அநாயதேயங்கள் குவிந்து கிடக்கும் புறநகரங்கள் இதற்கான வெளிப்படையான ஆதாரங்கள்.


"பரதேசிகளின் பாடல்கள்" என்ற அநாமதேயக் கவிதைத் தொகுதிக்கு திரு.கருணாகரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் சார்ந்து சில விடயங்களை முன்வைக்கும் நோக்கிலான ஒரு முன்னெடுப்புத்தான் நான் இங்கு கூறியுள்ள விடயம்.
திரு.கருணாகரன் அவர்கள் "பரதேசிகளின் பாடல்கள்" எனும் கவிதைத் தொகுப்பின் தோற்றம், வடிவம், வழங்கல் முறை என்பன பற்றித் தனது கருத்தைத் தெரிவித்துள்ளாரேயன்றி, கவிதையின் உள்ளடக்கத்துள் அவர் நுழையவில்லை எனும் விடயத்தையும் முதலிலேயே கவனித்துக்கொள்வோம்.


"நாடோடிகளின் காலம்" எனக் கருதக்கூடிய காலத்தின் இடப்பெயர்வு வேகமும், இடம்பெயரும் தூரமும் இன்றைய இடப்பெயர்வு வேகத்துடனோ அல்லது தூரத்துடனோ ஒப்பு நோக்கக்கூடிய விடயமல்ல. வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகத் தேவைப்பட்ட காலத்தின் பரிமாணம் இன்றுள்ளது போல் அன்றிருக்கவில்லை. யார் சொன்னார் எவர் சொன்னார் எனும்விடயத்தைப் பற்றிய எதுவித அக்கறையுமின்றிச் சொல்லப்பட்ட வியடம் எனும் வகையில் நமக்கு இன்றுவரையும் வந்துள்ள நாட்டார் பாடல்களாயினும் சரி, பழமொழிகளாயினும் சரி அவற்றின் சாராம்சம் பற்றிய அக்கறையை மட்டுமே எம்மில் வார்க்கின்றன. மரபுவழிக் குட்டிக்கதைகளும் இவ்வகையில் அடக்கம்.


இன்றைய நாட்களின் இடப்பெயர்வுகள் வெறும் இடப்பெயர்வுகளல்ல. எதிர்பாராத கணத்தில் எதிர்பாராத வேகத்தில் முற்றிலும் அந்நியமான சூழ்நிலைக்குள் கண்டத்திலிருந்து கண்டம் தாண்டித் தூக்கிவீசப்படும் கோரங்கள். இருபதாம், இருபத்தொராம் நூற்றாண்டின் பிரத்தியேகமான துன்பியல் நிகழ்வுகள்.

"ஏஜென்சிக்"காரருடன் ஆரம்பித்து பல்லாயிரம் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து - வரும் வழிகளில் பாலியல் வன்முறைகளுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் உட்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏராளம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். இருப்பிட உரிமையைக் கெஞ்சுதல்களின் பின்னர் பெற்றுள்கொள்வதுடன் முடிவடைவதில்லை இச்சோகம். அந்நியர்களாய், அடிப்படை மனித உரிமைகளை உரக்கக் கேட்க மொழியற்றவர்களாக, மௌனிகளாக, இவையெல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனும் தத்துவத்தைத் தமதாக்கி, மாடாய் அடித்து, மற்றவர்களுக்கும் தங்களால் முடிந்ததைச் செய்து இறுதியில் ஒரு நாள் இல்லாமலாகப்போகும் பரதேசிகளின் சோகத்தின் ஒரு துளியை மட்டுமே சுமந்து வந்திருக்கிறது "பரதேசிகளின் பாடல்கள்".

பரதேசிகளின் பாடல்களை நாட்டார் பாடல்களுடனோ பழமொழிகளுடனோ அன்றில் வேறெந்த இலக்கிய வடிவங்களுடனோ ஒப்பீடு செய்தலில் பாரிய தவறுள்ளதாகத் தோன்றுகிறது.
ஆகவேதான் முதலில் இந்நூலின் உள்மையை உள்வாக்கிக் கொள்ளுமுன்னர் பரதேசி என்ற சொல்லுபயோகம் பற்றி ஒரு வரையறையையும் செய்யவேண்டியுள்ளது.


இந்நூலின் தலைப்பில் பரதேசி என்னும் சொல்லுபயோகம் அச்சொல் சார்ந்த அர்த்தப்படுத்தல்களில் முரண்பாடுகளைத் தோற்றியிருப்பது கண்கூடு. திரு.கருணாகரன் அவர்கள் இச்சொல்லிற்கு ஆக்கியிருக்கும் அர்த்தப்படுத்தல் நூலின் ஆத்மாவைச் சிதைத்துள்ளதாகவும் தோன்றுகிறது. இந்நூலை உள்வாங்கி வாசித்த ஒரு பரதேசி எனும் அடிப்படையில் இக்கருத்தை நான் முன்வைக்கிறேன். இங்கு நான் நூல் என்று வசதி கருதிக் கூறுகின்றபோதும் அது "பரதேசிகளின் மனோநிலையை" ச் சுட்டிநிற்கிறது.


"பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட உயிரி" எனும் திரு.கருணாகரனின் கூற்றிலிருந்த சில விடயங்களைக் கூறுதல் இலகுவானதாயிருக்கும் என எண்ணுகிறேன். ஆண்டிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் அல்லது வாழ்வில் 'அடிபட்டுப்' பூரணப்பட்டவர்களாகவும் உள்ள உயிரிகளையே பரதேசிகள் எனக் கட்டுரையாளர் கருதுவதுபோல் தோன்றுகிறது.


பரதேசி எனப்படும் சொல்லிற்கான மாசுபடுத்தப்பட்ட வெகுஜன அர்த்தப்படுத்தலைத்தாண்டி அதன் மொழியியல் ரீதியான அல்லது வரலாற்று ரீதியான அர்த்ப்படுத்தலுக்குச் செல்வது இவ்விடயத்தில் இன்றியமையாதது. யூதர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் பரதேசி என்னும் சொல்லிற்கான சரியான வரலாற்று ரீதியான அர்த்தத்தை வழங்கியுள்ளார்கள் எனத் தோன்றுகிறது.


ஏதாவதொரு இணைவலையத் "தேடுகருவியில்" பரதேசி எனும் சொல்லை உட்படுத்தித் தேடுதலைச் செய்யும் பட்சத்தில், பின்வரும் விளைவு பெறப்படுகிறது.
Paradesi is a word used in several Indian languages, and the literal meaning of the term is "foreigners", applied to the synagogue because it was historically used by "White Jews", a mixture of Jews from Cranganore, the Middle East, and European exiles.
(The Paradesi Jews are part of the Jewish community of Kerala state in India. They originally came mainly from the Middle East and Europe. They are sometimes called White Jews although that usage is generally considered pejorative or descriminatory and refers to relatively recent Jewish immigrants (15th Century onward), predominantly Sephardim and Mizrahim, into Kerala, in southwestern India. They are an important component of the Cochin Jewish community)

பரதேசம்போனவர்கள், நாட்டைவிட்டுப்போனவர்கள், அந்நியர்கள் எனும் அர்த்தப்படுத்தல்களே "பரதேசிகள்" எனும் சொல்லிற்கு இன்றைய நிலையில் பொருத்தமானதாகும். இவ்வர்த்தப்படுத்தலூடாகவே பரதேசிகளின் பாடல்கள் உள்வாங்கப்படல் வேண்டும். அது தவிர்ந்த இன்னொரு அர்த்தப்படுத்தல் அபத்தத்திற்கிட்டுச் செல்லும் பாதையைத் தவிர வோறொன்றுமல்ல.


இன்றை உலகில் காணப்படும் பல்வேறு தரப்பட்ட பரதேசிகளின் நிலையை ஒட்டுமொத்தமாகக் காணும் நிலையைக் கைவிட்டு, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வையும் அதனையடுத்து உருவாகியுள்ள அவர்களின் "பரதேசிமயமாதலைப்" பற்றியும் ஒரு பார்வையைச் செலுத்துவது இவ்விடத்தில் உகந்ததும் இன்றியமையாததுமாகிறது. ஏனெனில் "பரதேசிகளின் பாடல்கள்" முன்னெடுக்கும் விடயமும் அதுவாகத்தான் தென்படுகிறது.


பிரக்ஞை பூர்வமாகவோ அன்றில் எவ்விதப் பிரக்ஞையுமின்றியோ ஈழத்தை விட்டுப்புறப்பட்ட தமிழர்களின் பரதேசிமயமாதல் ஆரம்பமாகிவிட்டது. இதன் பூரணப்படுத்தலின் வேகம் பல்வேறு விடயங்கள் சார்ந்திருக்கிறது. குறிப்பாக ஈழவிடுலைப்போரின் வெற்றி தோல்வியில் தங்கியிருக்கிறது. இங்கு நான் ஈழவிடுதலைப் போரின் வெற்றியென்பது ஒரு இராணுவ வெற்றியைக் குறிப்பதல்ல என்பதை குறித்துக்கொள்ளல் வேண்டும். வழுவழிந்து முழுமை பெற்று உரிமைபெற்று அறிவுபெற்று சுயாழுமையுற்ற குடிமக்களைக் கொண்ட தமிழீழத்தின் வெற்றியை நான் இங்கு குறிப்பிட்டேன். இது சார்ந்து பிறிதொரு முழுமையான ஆய்வையே முன்வைக்கலாம்.


"இரண்டும் கெட்டான்நிலை" க்குள் பலவந்தமாகத் தூக்கியெறியப்படுதலே பரதேசி மயமாதலின் உச்சக்கட்டத் துன்பியல் நிகழ்வு. அனைத்து உளவியற் சமநிலைகளும் ஆட்டங்கண்டு எந்தவொரு அடையாளத்தையும அகச் சமாதானத்துடன் தக்கவைத்துக்கொள்ள முடியாத இரண்டும் கெட்டான் நிலை தனிமனிதத் துன்பியல் என்பதற்கப்பால் அது மனித சமூகங்களின் துன்பியலாகக் கருதப்படவேண்டியது.
இந்த இரண்டும் கெட்டான் நிலையின் வருகைக்குக் கட்டியம் கூறும் பரதேசிகளின் பாடல்களில் சுரந்துகொண்டிருப்பது ஒரு அவலக்குரல். கேட்பதற்குச் சகிக்கமுடியாத ஒரு அவலக்குரல். ஆனால் கேட்போரின் செவிகளைத் தேடி அலையும் குரலது.

தனது விமர்சனக் கட்டுரையின் மூன்றாவது பகுதியில் திரு கருணாகரன் "பரதேசிகளின் பாடல்கள் தீராச் சுமையை நம்மீது இறக்கி விட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரிப் பரிமாற இந்தப் பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகப்படுகின்றன. எல்லாவற்றிலிருந்தும் வலி தெரிகிறது. பரதேசி காணாமற்போவது இங்கேதான்." எனக்கூறுகின்றார்.


இக்கூற்றுகளினுள் பொதிந்துள்ள அர்த்தச் சுமைiயின் தாக்கம் அதீதமானது. இதன் உளவியற் பரிமாணங்கள் பாரதூரமானவை. "தீராச் சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன" அல்லது வலியை நம்முகத்தில் அறைகிற மாதிரிப் பரிமாற இந்தப்பரதேசிகள் முனைகின்றனர்" எனுமிரு வாக்கியங்களிலும் உள்ள "முனைகின்றன" அல்லது "முனைகின்றனர்" எனும் வினைச்சொல்லுபயோகம் வெளிப்படுத்தி நிற்கும் விடயங்கள் ஆழமாகப்பார்க்கப்பட வேண்டியவை.

தடைசெய்யப்பட்ட ஒன்றை அல்லது குற்றமாகக் காணப்படக்கூடிய ஒன்றை ஆற்றுவதற்கான முனைப்பை பரதேசிகளின் பாடல்கள் முன்னெடுக்கின்றன எனும் அர்த்ப்பாடு இங்கு துல்லியமாகத் தெளிவடைந்து கிடக்கிறது.
வேறு வகையில் இதைக்கூறுவதனால் தனது இவ்வகையான கூற்றுகளின் மூலம் திரு கருணாகரன் அவர்கள் "கண்டுகொள்ளாதிருப்பதற்கான தனது உரிமையை" யாரும் மீறக்கூடாதெனும் கட்டளையை வெளிப்படையாயகவே கூறியுள்ளார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள மொழியின் தளம் குற்றமயப்படுத்தல்.


போனவர்களின் அவலங்கள், போனவர்களின் சோகங்கள், போனவர்களின் தவிர்க்கமுடியாத சுவடழிதல்கள், போனவர்களின் காணாமற்போதல்கள் என்பவை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் உரியைமைக் கோரிநிற்பவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகிக் கொண்டு செல்வதற்கான அறிகுறிகள் தாராளமாகவே தென்படுகின்றன.
பொங்கியெழும் தமது உணர்வால் போனவர்களைத் திட்டிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், போனவர்களின்றி இருப்பவர்களுக்கு விமோசனம் இல்லையென்பதை தெளிவுணர்ந்த சிலர் சமாதானம் செய்துகொண்ட வரலாற்றையும் இங்கு நினைவிருத்துவது உகந்ததென எண்ணுகிறேன்.


இருப்பவர்கள் சார்பாகப் போனவர்கள் இன்று கூறுவதென்ன?
இருப்பவர்களே, உங்களின் வலிகளை எங்களில் மிகப்பெரும்பான்மையானோர் உள்வாங்கித் துடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் படும் துன்பங்களின் எதிரொலிகள் எங்களைத் தினமும் வருத்திக்கொண்டேயிருக்கின்றன. நாம் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் வருந்துகிறோம். தொலைந்து விடுவதற்கு முன் அதையாவது செய்யக்கூடாதா என்ன? ஆனால் நீங்கள் யாரும் தொலைந்து விடாதென்பதற்காக எங்களில் பலர் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களின் வீதிகளில் ஊர்வலம் போய் உங்களின் நிலைகளை எடுத்துச் சொல்லத் தயங்கமாட்டோம். எங்களின் ஆவேசக் குரல்களை இவர்கள் அலட்சியத்துடனேயே பார்க்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினுமென்ன, அடிமேல் அடியடித்தால் சில வேளை அம்மி நகரும் எனும் நப்பாசை எம்மிடம் இன்னமுமிருக்கிறது. ஆனால்... நீங்கள் ?


எங்களின் அவலங்களைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை உங்களுடையது. ஆனால், தயவு செய்து எங்களை நிரந்தரமாக குற்றவாளிகளாக்காதீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இருத்தலை நிரந்தரமான குற்றமயப்படுத்தலுக்குள் தள்ளிவிடுவதில் உங்களுக்கு ஆதாயம் ஏதும் கிடைக்கப்போவதில்லை. மாறாக எங்கள் பலவீனங்கள் உங்களுக்குத் தீங்கையே விளைவிக்கும்.
யார் எழுதினார்களோ தெரியவல்லை. யார் அவலக்குரல் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பரதேசிகளின் அவலக்குரல்களை ஒரு கணம் இரக்கத்துடன் கேளுங்கள். அது காணாமற்போய்க்கொணடிருப்போரின் இறுதிக்குரலாகவும் இருக்கலாம் என ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.


"1980 ம் ஆண்டுகளிலிருந்து ஈழத்திலிருந்து பல இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடி மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தஞ்சம் புகுந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் தங்களின் சொந்த வேர்களிலிருந்து விலகிச் செல்வது தவிர்க்க முடியாததாய் அமைந்தது. முதலாவது, இரண்டாவது பரம்பரைகள் தமது மொழியை ஓரளவேனும் பாதுகாத்து வந்தபோதும் முன்றாவது பரம்பரை அதை இழந்துவிட்டது. மொழியை இழந்தபோதே அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் தவிர்க்க முடியாதபடி அழிந்துவிட்டது. மிகுதி அடையாளம் பல்வேறு காரணங்களினால் சிதைவுற்றுப் போனது. இருப்பினும் அவர்களின் தோற்ற அடையாளம் அழிக்கமுடியாததது. வெள்ளையர்களின் மேற்கில் வாழ்வோரின் அந்நியத்தோற்றம் யாரையும் அந்நியர்களாகவே பேணிக்கொள்ளும் தகமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதலால், "பரதேசித் தமிழர்கள்" எனும் மேற்கத்தைய நாடுகளின் இனக்குழுமம் உளவியல் ரீதியான சமநிலையைப் பேணிக்கொள்ளும் தன்மையிழந்து காணப்படுகிறது" என 2060 ம் ஆண்டில் ஒரு இன-உளவியல் ஆராச்சியாளன் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்போகிறான்"
இதை வெறும் ஊகம் மட்டுமென்றோ அல்லது எதிர்மறை மனநிலையின் கரும்பார்வையென்றோ மட்டுமே கொள்ளுவது நியாயமானதா ?


பரதேசிகளின் பாடல்களில் இந்த அவலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது கண்கூடு. ஆகவேதான் இப்பாடல்களை நாடோடிப்பாடல்களுடனோ அல்லது பழமொழிகளுடனோ ஒப்பிடுதல் ஆகாத ஒன்று எனக் கருதுகிறேன்.
அநாமதேயமாகுதலின் முதற்படியில் நிற்கும் பரதேசிகளின் பாடல்களின் உரிமையாளர்கள் யார் எனும் கேள்விக்கு பதிலில்லாதிருப்பது அந்தரிப்பை அளிப்பது உண்மைதான். ஆனால், சுவடுகள் அழிந்து கொண்டிருக்கும் பரதேசிகளின் அநாமதேய அலறல்களின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வதில் யாருக்கு நன்மையுண்டு. ஆயிரமாயிரம் ஈழத்துப்பரதேசிகளின் கூட்டுத்துயரை யாரோ சில பரதேசிகள் பதிந்திருக்கிறார்கள் என்று மட்டும் ஏன் கண்டுகொள்ள முடியாதிருக்கிறது ?
பதிந்தவர்கள் யாராகவிருந்தாலென்ன? அவர்கள் உயிருடனிருந்தாலென்ன? இறந்துவிட்டிருந்தாலென்ன? நான் ஒரு ஈழத்தமிழன் என்று கூறுவதைவிட நாம் ஈழத்தமிழர் என்று கூறுவதில்தானே கூட்டுணர்வுண்டு. அவ்வாறெனில், தன் முகமென்பது இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் முகங்களின் ஒரு சிறிய பிரதிபலிப்பேயென எண்ணும் ஈழத்துப்பரதேசி தன் முகத்தையும் தன்நாமத்தையும் மட்டும் ஏன் இழக்காது பாதுகாத்து அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்? தன் மண்ணுக்காக அநாமதேயமாக உயிரீயும் விடுதலைப்போராளியின் மனோ நிலையை இலக்கியப்படைப்பாளி தனக்காக உள்வாக்கிக் கொண்டு ஏதோ ஒரு வகையில் தன்னை அழித்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் தன்னையொத்தவர்களின் துயரைமட்டும் பதிந்துவிட்டுச் செல்பவனாக இருப்பதில் என்ன குற்றமிருக்கிறது ?


"பரதேசிகளின் பாடல்களை" வாசித்தவன் என்ற வகையில் ஒன்றைத் தெளிவாக என்னால் சொல்ல முடியும். அப்பாடல்களில் எல்லாம் என்ணுணர்வுகள் பதிந்து கிடக்கிறது. அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக நானே எழுதியிருக்க முடியும். இப்பாடல்களை வாசிக்கும் புலம்பெயர்ந்த, தன்நிலையுணர்ந்த, பிரக்ஞையுள்ள எந்தப் பரதேசிக்கும் என்போன்ற உணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
அவ்வாறெனில், எதற்காக வேண்டும் ஒரு அல்லது பல படைப்பாளியின் நாம விபரங்கள்? கூட்டுத்துயரின் வெளிப்பாட்டில், அவல ஓலத்தில் குரலுக்குச் சொந்தமானவர்களைத் தேடுவதில் என்ன பயனிருக்கிறது ?


தனது கட்டுரையில் "பரதேசிகள் பாடல்கள் கவிதைத் தொகுப்பில் இருபது பாடல்கள் இருக்கின்றன. எழுதியவரகளின் பெயர்கள் என பரதேசிகளுக்குக் கிடையாது. இதனால் இவை எத்தனை பேருடைய கவிதைகள் என்றும் தெரியாது. அப்படிப்பார்க்கும் போது மனம் அந்தரிக்கிறது." என திரு.கருணாகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


கட்டுரையாளரின் இந்த அந்தரிப்புக்கான காரணத்தை தேடிப்புறப்பட்டால் பல விடயங்களைக் கண்டுணரமுடியும் என்பது எனது நம்பிக்கை. இந்த உளவியற்பகுப்பை நடத்துவதல்ல என்நோக்கம். இருப்பினும் இந்த அந்தரிப்புத்தான் பரதேசிகளின் பாடல்களின் வெற்றி. யார் எழுதினார்கள் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவற்றைப் பார்க்கும் ஒருவித அடிமைத்தனம் எம்மில் குடிகொண்டுவிட்டது. இவ்வடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்கேனும் பரதேசிகளின் பாடல்கள் உதவியளிக்கும் என்பது எனது நம்பிக்கை.


ஆகமொத்தத்தில் பின்வரும் விடயங்களுக்கு இவ்வெதிர்வினை வாயிலாக அழுத்தம் கொடுக்க முயன்றேன்.
அ) பரதேசி எனும் சொல்லிற்கு திரு.கருணாகரன் கொடுத்திருக்கும் அர்த்தம் அச்சொல்லின் வரலாற்று ரீதியான அல்லது மொழியியல் ரீதியான அர்த்தத்திற்கு ஒவ்வாதது.
ஆ) நாடோடிப்பாடல்களோ அல்லது பழமொழிகளோ "பரதேசிகளின் பாடல்களுடன்" ஒப்பிடமுடியாதவை. காரணம், அநாமதேயமான அவை தீர்மானமொன்றின் அடிப்படையில் அநாமதேயமாகப் படைக்கப்பட்டனவா அல்லது காலவழக்கில் படைப்பாளிகள் பற்றிய தகவல்கள் இழக்கப்பட்டனவா எனும் விடயம் யாருக்கும்தெரியாது. ஆனால், "பரதேசிகளின் பாடல்களின்" படைப்பாளிகள் தீர்மானமாகவே தம் அடையாளத்தை மறைத்திருக்கிறார்கள் அல்லது அழித்திருக்கிறார்கள். (பரிஸில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டில் தொகுப்பாசிரியர் கி.பி. அரவிந்தன் இதைக்குறிப்பிட்டார்).
இ) இடப்பெயர்வின் கால-தூர-வேகப் பரிமாணங்களை கருத்திலெடுக்குமிடத்து ஊரோடிகள், நாடோடிகள் அல்லது பயணிகள் என நாம் அரைநூற்றாண்டுக்கு முன் கருதியவர்கள் அல்ல இன்று நாம் கருதும் பரதேசிகள். தன்மையிலும் எண்ணிக்கையிலும் வித்தியாசமான இவர்களின் இடப்பெயர்விற்கான காரணங்களும் சூழ்நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவை.
(இவ்வகையில்தான் தற்போது மேற்குலகில் "றோம்", "ற்சிஹான்", "ஜித்தான்", "மனுஷ்", "ஜிப்சி" என பல்வேறு வகையில் அழைக்கப்படும் "பயணிக்கும் சமுக" மக்களையும் அவர்களின் அடையாளம் அல்லது அடையாளமின்மையையும் நவீன கால அகதிகளின் இடம்பெயர்வுத் துயர்வுடன் முற்றுமுழுதாக ஒப்பிடுவதும் அபத்தமாகிறது)
ஈ) ஈழத்தைப் பொறுத்தவரையிலும், "இருப்பவர்களின்" உடனடித்துயர்கள் "போனவர்களில்" பெரும்பான்மையோரால் உடனடியாகவே உள்வாங்கப்படுகிறது. ஆனால், "போனவர்களின்" நீண்டகால அடிப்படையிலான இல்லாமற்போகும் கூட்டுத்துயர் "இருப்பவர்களின்" கவனத்தை ஈர்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக "போனவர்கள்" மீது நிரந்தரமான குற்றவலைகள் "இருப்பவர்களினால்" அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இது பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு "மொழிகளிலும்" மேற்கொள்ளப்படுகிறது. திரு கருணாகரன் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் போனவர்கள் தம் துயர்பற்றிப் பேசவே கூடாதென்று அவர் கூறுகிறார் போல் தோன்றுகிறது. (இவ்விடயம் பற்றிய முழுமையான தயக்கங்களற்ற ஒரு விரிவான விவாதத்திற்கு இது தருணம் அல்ல என்பதும் எனது கருத்தாகும். காரணம் "இருப்பவர்களுக்கும்", "போனவர்களுக்குமான" ஒரு உரசலையோ அல்லது விரிசலையோ உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. இருப்பினும் இது சம்பந்தமான விவாதம் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாததென்பதே என் கருத்தாகும்)
உ) புகலிட இலக்கியம் என்பது வெறும் "புலம்பல் இலக்கியம்" மட்டும்தானா எனத்தொடங்கி பல்வேறு தரப்பட்ட விவாதங்கள் புகலிட இலக்கியம் மீது ஆற்றப்பட்டுவிட்டன. இது சார்ந்த செய்திகள் ஏதும் திரு.கருணாகரனுக்கு எட்டவில்லைப் போல் தோன்றுகிறது. புகலிட இலக்கியம் உருவாகவேயில்லையென்போர் ஒருபுறமும், புகலிட இலக்கியம் உருவாகவேபோவதில்லை என்போர் இன்னொருபுறமும், இன்னும் வேறு வேறு கருத்துக்களுடன் புகலிட இலக்கியம் பற்றிய விவாதம் சற்றுச் சலிப்படைந்து விட்டது. புகலிட வாழ்வின் கொடூரம் போகாதிருப்போரின் வாழ்வியற் துன்பியலுடன் ஒப்பிடும்போது எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. புகலிட இலக்கியம் அழுகிறது, சலிப்பூட்டுகிறது அல்லது மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே கூறி ஒலமிடுகிறது என்பவர்கள் அதனூடாகப் புகலிட வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் தமது "கண்டுகொள்ளாதிருப்பதற்கான" உரிமையை உரத்துக் கூறுகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.
இவைபற்றிய விவாதங்களோ, தீர்மானங்களோ எவையும் முற்றுப்பெறவில்லை. ஏனெனில் இவைபற்றிய ஆழமானதும் விரிவானதுமான ஒரு ஆய்வு இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பது என் கருத்தாகும்.
12.03.2007.
பரிஸ்.

நன்றி அப்பால் தமிழ்

0 கருத்துக்கள்: