மழைக்காலம் தொடங்கிவிட்டது;
ஈசல்கள் பறக்கின்றன.
நண்பர்களே!
இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,
இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்
எமது கண்களை நோக்கி வருகின்றன.
ஈசல்கள்
இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.
காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:
தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?
ஒளியற்ற இந்த இரவினுள்
சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்
மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்
ஈசல்கள் ஊர்கின்றன.
நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்
தேவாலயங்களில்
கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;
அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,
எவ்வளவு சந்தோசமானது
கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!
எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.
நண்பர்களே!
சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
மழைக்காலம் தொடங்கிவிட்டது
கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
நாம் என்ன செய்ய!
அவர்களே எம்மைப் பணித்தனர்
இரத்தத்தைக் குடிக்குமாறும்
சரீரத்தைப் புசிக்குமாறும்.
இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்
சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்
அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு
நீங்களே உணர்வீர்கள்,
அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத
உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென
முன்வினைச் செயலும்
கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்
உங்களைக் காப்பாற்றிவிட்டதென.
அதன் நிமித்தம்,
குருதிச் சிதறல்களும்
கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்
காதல்களையும்
பெற்றோர்களையும்
மனைவியரையும்
பிள்ளைகளையும்
எழுதிய சொற்களால் நிறைந்த
உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய
ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்
நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
எனினும் நாம் காண்கிறோம்,
இரவை அள்ளிச் செல்லும்
எமது ஓலத்தின் அடியிலிருந்து
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை.
ஈசல்கள் எமது விழிகளை முறித்து
தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.
எனினும் நாம் காண்கின்றோம்,
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.
* * *
எஸ்போஸ்
http://tamil.sify.com/kalachuva
Wednesday, April 25, 2007
கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 2:10:00 AM
Labels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
வழக்கமான கவிதைதான். ஈர்க்கும்படி ஒன்றுமில்லை.
இருக்கலாம் திவாகர். எஸ்போஸின் கவிதைகள் முழுதையும் அவருக்கென்றேயான தனித்துவ நடையை உடையவை என கூற முடியாதுதான். இது அவரது நினைவாகவே பதிவிடப்படுகிறது. சிறந்த கவிதை என்றரீதியில் அல்ல.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Post a Comment