-ஜிப்சி-
"தீய"வரிடமிருந்து விலகி நிற்கக் கேட்கிறான்;
'அவனிடமிருந்து' விலகி வந்தால் "வேசை நாயே
நீ கட்டையிலதானடி போவ" என்கிறான்
(எல்லாரும் போறதுதானே?)
பிறழ்வுற்றோர் வாய்களைப் பொத்த ஓதி
மண்டைக்குள்ள பேய்-ய்க் கத்தல் -
"எதிரிகள் பாவிக்கிறார்கள்
எதிரிகள் பாவிக்கிறார்கள்"
யாரிந்த எதிரிகள் சர்வேசா?
'விடிஞ்சா பொழுதுபட்டா'
நீ கூப்பிட்டண்டே விழிக்கின்ற
இந்த எதிரியர் யார்
சிறு எறும்பு
நானா?
ஒரு துரும்பு
நீயா?
தம் இயல்பில் காற்றில் அலையுண்டும்
இம் மரங்களோ?
ஊழியுள்
உற்றவளை உற்றவனை
மென் மேலும்
எதைஎதையோ இழந்தவர்கள்
"கடவுளுக்கு"
நன்றியாக இருத்தல் ஒன்றே
சாத்தியம் என்கிறாயா?
{கவனி! கடவுள் = கடவுள் மட்டுமே}
*ஒரு எல்லைக் கிராமத்துள் நுழைந்து
திட்டமிட்டு 'அவர்கள்' ஆற்றும் வீரச்செயல்களை விஞ்சி
அச்சம் பாவிய எளிய சனங்களை வேட்டையாடி
எஞ்சியதோர் சின்னக் குழந்தையை
தென்னையில் அடித்த்-து-க் கொன்ற போதில் -
அதுதான் 'எதிரி'யானதோ?
{அச்சப் படாதே, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்:
இதை செய்தது 'உன்னவர்கள்' அல்ல}
**வழிபாட்டுத் தலங்களில் தஞ்சமடைந்தவரை
தேடிக் குறி வைத்து கவ்வ விரையும் கழுகுகளென
வானிருந்து குண்டுகள் எறிந்து சூறையாடும்
- அந்தப் பேரரக்கனுடன் போட்டியிட்டு
பாங்கொலி கதற
வெட்டிச் சாய்த்த சகோதர இனமென்ன எதிரியா?
{அச்சங் கொள்ளாதே, இதனை "உன்னவர்கள்" இன்னும்
உரிமை கோரவில்லை!}
...
நான் இன்னும் உரையாடவே ஆரம்பிக்கவில்லை
மனப்பிராந்தியில் அரற்றலாகி மூச்சுவாங்க
உன் பிரசுரங்களைத் திணிக்கிறாய் .
"எதிரியள் பாவிச்சிருவாங்கள்
எதிரியள் பாவிக்க விடக் கூடாது.. ஸ்ஸ
பயந்த மாதிரியே நடந்திற்று
எதிரியள் பாவிக்கிறாங்கள்"
"எதிரிகள்...." - அவர்கள் உன்னை
பாடாய்த்த்தான் படுத்துகிறார்கள்!
குரலினில் ஏனிந்த அச்சம் சர்வேசா?
எங்களை 'அவங்கள்' பாவிக்குமாப்போல
இடையில் 'உண்மை' இருந்தேன் அச்சுறுத்துகிறது?
கேவலம் அது எதிரியர் பாவிப்பதாய் உள்ள
காலக் கொடுமையைப் பார்த்தாயா?
கேட்டால்:
உன் பேரச்சத்தின் பேரில் என்
மண்டையைப் பிளந்து
மூளையை எடுத்து அதுள்
உன் பயங்களை அடைய முனைகிறாய்;
உன்னிடமிருந்து விலகி வந்தால்,
நடுக்கத்தை மறைக்க குரலை உயர்த்தி
எதை எதை எழுத வேண்டுமென
கொடி பிடிக்கிறாய்
(நாளை எப்படி ஓ
விளக்கப் பிடிப்பாயோ)
அ...
நேற்று என் மகள் ஜிப்சி
ஓடியும் திரும்பியும் ஒரு விளையாட்டி-னிடையே
'புறுக்' என சிரித்து
உலகத்தை நாறடிக்கும்
தன் பெருமைக்குரிய குசுவை
உன் எதிரிகள் பாவிப்பரா என
/ உன்னைக்
கேட்டுச் சொல்லச் சொன்னாள்
அட..
இன்றே இவளைப் 4'போட்டால்' என்ன?!
~~
குறிப்புகள்:
ஜிப்சி - 1983இன் இனப்படுகொலைகாலத்தை வாழ்ந்த பெற்றோர் வளர்த்த ஒரே பிள்ளையாதலால் அவளுக்கு நாடோடிகளின் பெயர் சூட்டப்பட்டது.
*சிங்கள எல்லைக் கிராமமொன்றில் உரிமை கோரப்படாத தமிழ்த்தேசியப் படுகொலையின் பிறகு நடந்த சம்பவம் ஒன்றில்
**சிங்களப் பேரினவாத அரசினால் தேவாலயங்களில் பிற பள்ளிகளில் தஞ்சமடைகிற தமிழர்கள் வான்தாக்குதலில் கொலைசெய்யப்படுவர்; சகோதர இனம்: முஸ்லிம்களை அவ்வாறே தமிழர்கள் "எழுத்தில்" அழைத்து வந்தார்கள்.
4போடுதல் = கொலை செய்தல்
~~
மார்ச் 07
0 கருத்துக்கள்:
Post a Comment