Monday, April 30, 2007

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்

எழுதியவர்: - கருணாகரன்.

Monday, 30 April 2007

'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.
அப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும் அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.

"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே" என்று கேட்டேன்.
"அதனாலென்ன " என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.
"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.

"பெயரில் என்ன இருக்கிறது" என்றார் எஸ்போஸ்.

பசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.

வந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.

பத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன் பேசியிருக்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப்பிறகு "ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.

அன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.

எஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும் ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்; பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.

எந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.

அவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.

"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.

அவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார்.

அடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.

எஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.

பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.

அவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன். அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.

எஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள் அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.

தமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒருவகைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.

என்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார். எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.

வாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.

மூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.

அவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில், இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.

எஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர்.

"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே" என்றால்,

"அதை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்" என்பார். "இப்போது இதுதான் என்னுடைய வாதம்" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது.

எதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.

அவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில் வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.

எஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.

மொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.

புதிய கவிதையை நாம் வீரியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.

சொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.

உணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.


அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய கவிதைகள் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.

அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.

இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.

'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது.

அதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம் இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது.

ஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் தான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார்.

அன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது.

விவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார்.

எஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில் அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.

எஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன.

'சிறகுகள், குருதியொழுகும்; சிறகுகள்
ஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் …

எனது அடையாளம்
நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …'

' அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச்
சிலுவையிலறைவதா '

எஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக் குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம்.

அவர் எழுதினார,;
' உன்னை அவர்கள் கொல்வார்கள்
நிச்சயமாக நீயே அதை உணர்வாய்
அப்பரிசு
நிச்சயமற்ற உனது காலத்தில்
எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. '

இதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.

அன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக.

சிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன்.

அந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள்.
)

அப்பால் தமிழ்

Thursday, April 26, 2007

சுயம்

1

என்னைப் பேச விடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.
எனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைகிறது.
வேண்டாம்,
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்
எப்போதும்.
வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன,
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்.
மண்ணிலிருந்து விதைகள் பீறிடுகின்றன
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அநுமதியளியுங்கள்,
அவர்களின் தொண்டைக் குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்

2

எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை


எஸ்.போஸ்

காலச்சுவடு, இதழ் 27, அக்.-டிசம்பர் 99

Wednesday, April 25, 2007

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்டது;
ஈசல்கள் பறக்கின்றன.
நண்பர்களே!
இருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,
இன்னும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்
எமது கண்களை நோக்கி வருகின்றன.
ஈசல்கள்
இறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.
காற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:
தவளைகள் ஏன் ஒலியெழுப்பவில்லை?
ஒளியற்ற இந்த இரவினுள்
சித்திரவதைகளால் எழும் கூக்குரல்கள்
மூழ்கடிக்கப்பட்டுவிட்டன.
தலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்
ஈசல்கள் ஊர்கின்றன.
நாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்
தேவாலயங்களில்
கடவுளின் இரத்தத்தைக் குடித்தோம்;
அவர்தம் சரீரத்தைப் புசித்தோம்,
எவ்வளவு சந்தோசமானது
கடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்!
எனினும் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.
நண்பர்களே!
சிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே
மழைக்காலம் தொடங்கிவிட்டது
கடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்
நாம் என்ன செய்ய!
அவர்களே எம்மைப் பணித்தனர்
இரத்தத்தைக் குடிக்குமாறும்
சரீரத்தைப் புசிக்குமாறும்.
இன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்
சரீரத்தைப் புசித்ததன் பேரிலும்
அள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு
நீங்களே உணர்வீர்கள்,
அவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத
உங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென
முன்வினைச் செயலும்
கடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்
உங்களைக் காப்பாற்றிவிட்டதென.
அதன் நிமித்தம்,
குருதிச் சிதறல்களும்
கைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்
காதல்களையும்
பெற்றோர்களையும்
மனைவியரையும்
பிள்ளைகளையும்
எழுதிய சொற்களால் நிறைந்த
உயர்ந்த மிகப் பழஞ்சுவர்களையுமுடைய
ஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்
நீங்கள் தப்பிவிட்டீர்கள்.
எனினும் நாம் காண்கிறோம்,
இரவை அள்ளிச் செல்லும்
எமது ஓலத்தின் அடியிலிருந்து
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் சரீரத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை.
ஈசல்கள் எமது விழிகளை முறித்து
தமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.
எனினும் நாம் காண்கின்றோம்,
நீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்
அவர்தம் இருதயத்தைப் புசிக்கவும்
ஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.

* * *
எஸ்போஸ்
http://tamil.sify.com/kalachuvadu/may05/fullstory.php?id=13734101

Sunday, April 15, 2007

வாசுதேவனுக்கு ஒரு பதில்

எழுதியவர்: கருணாகரன்

14 April 2007

பரதேசிகளின் பாடல்கள்:
மேலதிக புரிதல்களுக்காக சிலகுறிப்புகள்

பரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம் வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
வாசுதேவன் தவறான கோணத்திலிருந்தே அந்த விமரிசனத்தைப் பார்க்கிறார். புலம்பெயர்வாழ்வு சந்தித்துள்ள நெருக்கடிகளை நான் புரிந்துகொள்ளத் தவறுவதாகவும் அவற்றைப் பொருட்படுத்த நான் விரும்பவில்லை என்றும் குறறம்சாட்ட முனைகிறார். இது எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு.

புலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை வாசுதேவன் அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறிப்பும் எழுதப்படவில்லை.

பதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக் குறித்த அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன.

அந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும் புலம்பெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில் எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற ஆகக்கூடிய பொறுப்புணர்ச்சி மனங்கொள்ளப்பட்டுள்ளது.

சூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக வேறுபட்டிருக்கிறதே என்ற உணர்வு எல்லோருக்கும் வேண்டும். ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

புலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான். புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதேவன் சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டே பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்போனது.

ஆகவே இவற்றுக்கப்பால் அடிப்படையில் எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை. உண்மையில் அதற்கான காரணமென்ன. அந்தக்காரணமோ அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா.

மனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும் சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன.

பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம் அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப் பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே. ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும் வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும் ஆழ்பரப்பையும் நிலைகொள்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன்.

ஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின் பாடல்களும் இருக்கின்றன. அதற்காக இந்த அவலம் சாதாரணமானது என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும் கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும் முறையிலும் உணர்த்தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே. புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக.

பரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவந்திராத புதிய பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.

இப்போது மீண்டும் மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும். ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று. அதற்காக மரணத்துள் வாழும் சூழல் மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும். அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும் இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில் திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து விடும்.

பரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர் இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும் அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம் அப்படியொரு நிலையில்தானே உருவாகியிருக்கவும் முடியும்.

குறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர் குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும் நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில் பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும் அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை.

இதன்படி பரதேசிகள் என்ற வகையில் இந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முதல்தலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே. அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்ல மெல்ல கழன்று விலகிச்செல்கின்றன.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர் பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில் திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக ஊருக்குப்போக விரும்புகிறீர்கள் என்று.

ஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும். அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம். அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்கள் கட்டாயம் பார்ப்பது தேவை என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார்.

ஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம் என்றெல்லாம் அந்த நண்பர் தன்னுடைய பிள்ளைகளுக்கு விளக்கியிருக்கிறார்.

அதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா. நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள் ஜேர்மனிக்குப் போகிறோம் என்று.

அந்தப்பிள்ளைகள் ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள் சிறுவயதுக் கல்வியைப் படித்தார்கள். அதனால் அவர்களுக்கு இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும் ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின் விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும் தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக விரும்புகிறார்கள். இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல.

அடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான் தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக் கடப்பதுதான சவால்.

பரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும் பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை.

பரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும் வெவ்வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை ஒன்றுதான்.

பரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்களை இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம் உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி விடுகிறார்கள்.

இங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும் மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. உள்ளுரில் இடம்பெயர்கிறவர்களுக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்டிலும் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும் சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன. மற்றதில் வேர்கள் பிடுங்கப்படுகின்றன.

தாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம் புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும் சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும். இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது. அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும் வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும் புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம் கொள்ளமுடியாது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது அபத்தமானது.

உண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள் அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும் வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும் பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால் இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும். பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும் ஊருக்கோ போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே.

இந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது. இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன. இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத் துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும்.

இவ்வாறே இருதரப்பும் தங்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று விவாதத்தைக் கிளப்புவது பெரும் மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும்.

வாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர் புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன் விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும் என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.

புலம்பெயரிகளின் பிரச்சினை என்பதும் புலம் பெயராதோரின் பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். தன்மைகளில்தான் வேறுபாடு.

வேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில் தன்னைத்தினமும் இழக்கவேண்டியேற்படும் அவலத்தையும் இரண்டாம் மூன்றாம் நிலை மனிதராக மற்றவர்கள் கருதி நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும் புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து அரசியலாக்க முனைவது வருத்தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.

பரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன் திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின் தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல. தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின் பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில் பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன்.

வாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற அவலங்களும் கொடுமைகளும் உண்மையே.

இவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது.

புலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில் அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம் நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும். போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும் அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை. இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும் குறகிய மன வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன் முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை.

பரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர் நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில் தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே இட்டுச்செல்லும்.

ஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஒருவருடைய துயரத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான் மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின் தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன எனக்குறிப்பிடப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப் படவேண்டும். அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது. தேவையற்ற விதத்ததில் அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது.

இனி என்னுடைய முதற் கட்டுரையிலிருந்து தேவை கருதி சில பகுதிகள் மீளவும் இங்கே இணைக்கப்படுகின்றன. இது மேலதிக புரிதல்களுக்காகவே. வாசகர்கள் இந்தச்சிரமத்துக்கு மன்னிக்கவும்.

நாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே

முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே

முகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன? முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.

இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

தொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.
நாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே.

கவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.

நாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் "சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்".

சில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.

பரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.

'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.

'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது.

நாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.

இவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன

பரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.

எந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது.

பரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.

பரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது. பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும்? அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.

ஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.

நான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.

இருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.
பரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை. பரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா? அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.


நன்றி அப்பால் தமிழ்

Saturday, April 14, 2007

"பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.

எழுதியவர்: க.வாசுதேவன்

March 2007

"பரதேசிகளின் பாடல்கள்" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.

காலமும் சம்பங்களும் கடூரகதியில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் துன்பியலும் அவலங்களும் உலகமயமாதலெனும் அதிபார உருளைக்குள் நசிந்து அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறது.

மனிதர்களும் அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பதை விடவும், கணக்கிடலுக்கு அப்பாலுமாய் அநாமதேயமாகுதல் விரைவுபட்டுக்கொண்டிருக்கிறது. உற்றுநோக்கில் உணரப்படும் இந்த யதார்த்தம் அச்சமூட்டுவதாயும் இருக்கிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றில் நடைபெற்ற மானிட இடப்பெயர்வுகளையும் அலைவுகளையும் அவற்றின் விளைவுகளையும் வசதி கருதிச் சுருக்கிப்பார்த்தால் அச்சம் எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.

அநாமதேயமாகுதல் மானிடத்தைப் பல்வழிகளிலும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கென ஒரு விவாதத்தை முன்னெடுப்பது அர்த்தமற்ற ஒன்று. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் அநாயதேயங்கள் குவிந்து கிடக்கும் புறநகரங்கள் இதற்கான வெளிப்படையான ஆதாரங்கள்.


"பரதேசிகளின் பாடல்கள்" என்ற அநாமதேயக் கவிதைத் தொகுதிக்கு திரு.கருணாகரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் சார்ந்து சில விடயங்களை முன்வைக்கும் நோக்கிலான ஒரு முன்னெடுப்புத்தான் நான் இங்கு கூறியுள்ள விடயம்.
திரு.கருணாகரன் அவர்கள் "பரதேசிகளின் பாடல்கள்" எனும் கவிதைத் தொகுப்பின் தோற்றம், வடிவம், வழங்கல் முறை என்பன பற்றித் தனது கருத்தைத் தெரிவித்துள்ளாரேயன்றி, கவிதையின் உள்ளடக்கத்துள் அவர் நுழையவில்லை எனும் விடயத்தையும் முதலிலேயே கவனித்துக்கொள்வோம்.


"நாடோடிகளின் காலம்" எனக் கருதக்கூடிய காலத்தின் இடப்பெயர்வு வேகமும், இடம்பெயரும் தூரமும் இன்றைய இடப்பெயர்வு வேகத்துடனோ அல்லது தூரத்துடனோ ஒப்பு நோக்கக்கூடிய விடயமல்ல. வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகத் தேவைப்பட்ட காலத்தின் பரிமாணம் இன்றுள்ளது போல் அன்றிருக்கவில்லை. யார் சொன்னார் எவர் சொன்னார் எனும்விடயத்தைப் பற்றிய எதுவித அக்கறையுமின்றிச் சொல்லப்பட்ட வியடம் எனும் வகையில் நமக்கு இன்றுவரையும் வந்துள்ள நாட்டார் பாடல்களாயினும் சரி, பழமொழிகளாயினும் சரி அவற்றின் சாராம்சம் பற்றிய அக்கறையை மட்டுமே எம்மில் வார்க்கின்றன. மரபுவழிக் குட்டிக்கதைகளும் இவ்வகையில் அடக்கம்.


இன்றைய நாட்களின் இடப்பெயர்வுகள் வெறும் இடப்பெயர்வுகளல்ல. எதிர்பாராத கணத்தில் எதிர்பாராத வேகத்தில் முற்றிலும் அந்நியமான சூழ்நிலைக்குள் கண்டத்திலிருந்து கண்டம் தாண்டித் தூக்கிவீசப்படும் கோரங்கள். இருபதாம், இருபத்தொராம் நூற்றாண்டின் பிரத்தியேகமான துன்பியல் நிகழ்வுகள்.

"ஏஜென்சிக்"காரருடன் ஆரம்பித்து பல்லாயிரம் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து - வரும் வழிகளில் பாலியல் வன்முறைகளுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் உட்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏராளம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். இருப்பிட உரிமையைக் கெஞ்சுதல்களின் பின்னர் பெற்றுள்கொள்வதுடன் முடிவடைவதில்லை இச்சோகம். அந்நியர்களாய், அடிப்படை மனித உரிமைகளை உரக்கக் கேட்க மொழியற்றவர்களாக, மௌனிகளாக, இவையெல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனும் தத்துவத்தைத் தமதாக்கி, மாடாய் அடித்து, மற்றவர்களுக்கும் தங்களால் முடிந்ததைச் செய்து இறுதியில் ஒரு நாள் இல்லாமலாகப்போகும் பரதேசிகளின் சோகத்தின் ஒரு துளியை மட்டுமே சுமந்து வந்திருக்கிறது "பரதேசிகளின் பாடல்கள்".

பரதேசிகளின் பாடல்களை நாட்டார் பாடல்களுடனோ பழமொழிகளுடனோ அன்றில் வேறெந்த இலக்கிய வடிவங்களுடனோ ஒப்பீடு செய்தலில் பாரிய தவறுள்ளதாகத் தோன்றுகிறது.
ஆகவேதான் முதலில் இந்நூலின் உள்மையை உள்வாக்கிக் கொள்ளுமுன்னர் பரதேசி என்ற சொல்லுபயோகம் பற்றி ஒரு வரையறையையும் செய்யவேண்டியுள்ளது.


இந்நூலின் தலைப்பில் பரதேசி என்னும் சொல்லுபயோகம் அச்சொல் சார்ந்த அர்த்தப்படுத்தல்களில் முரண்பாடுகளைத் தோற்றியிருப்பது கண்கூடு. திரு.கருணாகரன் அவர்கள் இச்சொல்லிற்கு ஆக்கியிருக்கும் அர்த்தப்படுத்தல் நூலின் ஆத்மாவைச் சிதைத்துள்ளதாகவும் தோன்றுகிறது. இந்நூலை உள்வாங்கி வாசித்த ஒரு பரதேசி எனும் அடிப்படையில் இக்கருத்தை நான் முன்வைக்கிறேன். இங்கு நான் நூல் என்று வசதி கருதிக் கூறுகின்றபோதும் அது "பரதேசிகளின் மனோநிலையை" ச் சுட்டிநிற்கிறது.


"பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட உயிரி" எனும் திரு.கருணாகரனின் கூற்றிலிருந்த சில விடயங்களைக் கூறுதல் இலகுவானதாயிருக்கும் என எண்ணுகிறேன். ஆண்டிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் அல்லது வாழ்வில் 'அடிபட்டுப்' பூரணப்பட்டவர்களாகவும் உள்ள உயிரிகளையே பரதேசிகள் எனக் கட்டுரையாளர் கருதுவதுபோல் தோன்றுகிறது.


பரதேசி எனப்படும் சொல்லிற்கான மாசுபடுத்தப்பட்ட வெகுஜன அர்த்தப்படுத்தலைத்தாண்டி அதன் மொழியியல் ரீதியான அல்லது வரலாற்று ரீதியான அர்த்ப்படுத்தலுக்குச் செல்வது இவ்விடயத்தில் இன்றியமையாதது. யூதர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் பரதேசி என்னும் சொல்லிற்கான சரியான வரலாற்று ரீதியான அர்த்தத்தை வழங்கியுள்ளார்கள் எனத் தோன்றுகிறது.


ஏதாவதொரு இணைவலையத் "தேடுகருவியில்" பரதேசி எனும் சொல்லை உட்படுத்தித் தேடுதலைச் செய்யும் பட்சத்தில், பின்வரும் விளைவு பெறப்படுகிறது.
Paradesi is a word used in several Indian languages, and the literal meaning of the term is "foreigners", applied to the synagogue because it was historically used by "White Jews", a mixture of Jews from Cranganore, the Middle East, and European exiles.
(The Paradesi Jews are part of the Jewish community of Kerala state in India. They originally came mainly from the Middle East and Europe. They are sometimes called White Jews although that usage is generally considered pejorative or descriminatory and refers to relatively recent Jewish immigrants (15th Century onward), predominantly Sephardim and Mizrahim, into Kerala, in southwestern India. They are an important component of the Cochin Jewish community)

பரதேசம்போனவர்கள், நாட்டைவிட்டுப்போனவர்கள், அந்நியர்கள் எனும் அர்த்தப்படுத்தல்களே "பரதேசிகள்" எனும் சொல்லிற்கு இன்றைய நிலையில் பொருத்தமானதாகும். இவ்வர்த்தப்படுத்தலூடாகவே பரதேசிகளின் பாடல்கள் உள்வாங்கப்படல் வேண்டும். அது தவிர்ந்த இன்னொரு அர்த்தப்படுத்தல் அபத்தத்திற்கிட்டுச் செல்லும் பாதையைத் தவிர வோறொன்றுமல்ல.


இன்றை உலகில் காணப்படும் பல்வேறு தரப்பட்ட பரதேசிகளின் நிலையை ஒட்டுமொத்தமாகக் காணும் நிலையைக் கைவிட்டு, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வையும் அதனையடுத்து உருவாகியுள்ள அவர்களின் "பரதேசிமயமாதலைப்" பற்றியும் ஒரு பார்வையைச் செலுத்துவது இவ்விடத்தில் உகந்ததும் இன்றியமையாததுமாகிறது. ஏனெனில் "பரதேசிகளின் பாடல்கள்" முன்னெடுக்கும் விடயமும் அதுவாகத்தான் தென்படுகிறது.


பிரக்ஞை பூர்வமாகவோ அன்றில் எவ்விதப் பிரக்ஞையுமின்றியோ ஈழத்தை விட்டுப்புறப்பட்ட தமிழர்களின் பரதேசிமயமாதல் ஆரம்பமாகிவிட்டது. இதன் பூரணப்படுத்தலின் வேகம் பல்வேறு விடயங்கள் சார்ந்திருக்கிறது. குறிப்பாக ஈழவிடுலைப்போரின் வெற்றி தோல்வியில் தங்கியிருக்கிறது. இங்கு நான் ஈழவிடுதலைப் போரின் வெற்றியென்பது ஒரு இராணுவ வெற்றியைக் குறிப்பதல்ல என்பதை குறித்துக்கொள்ளல் வேண்டும். வழுவழிந்து முழுமை பெற்று உரிமைபெற்று அறிவுபெற்று சுயாழுமையுற்ற குடிமக்களைக் கொண்ட தமிழீழத்தின் வெற்றியை நான் இங்கு குறிப்பிட்டேன். இது சார்ந்து பிறிதொரு முழுமையான ஆய்வையே முன்வைக்கலாம்.


"இரண்டும் கெட்டான்நிலை" க்குள் பலவந்தமாகத் தூக்கியெறியப்படுதலே பரதேசி மயமாதலின் உச்சக்கட்டத் துன்பியல் நிகழ்வு. அனைத்து உளவியற் சமநிலைகளும் ஆட்டங்கண்டு எந்தவொரு அடையாளத்தையும அகச் சமாதானத்துடன் தக்கவைத்துக்கொள்ள முடியாத இரண்டும் கெட்டான் நிலை தனிமனிதத் துன்பியல் என்பதற்கப்பால் அது மனித சமூகங்களின் துன்பியலாகக் கருதப்படவேண்டியது.
இந்த இரண்டும் கெட்டான் நிலையின் வருகைக்குக் கட்டியம் கூறும் பரதேசிகளின் பாடல்களில் சுரந்துகொண்டிருப்பது ஒரு அவலக்குரல். கேட்பதற்குச் சகிக்கமுடியாத ஒரு அவலக்குரல். ஆனால் கேட்போரின் செவிகளைத் தேடி அலையும் குரலது.

தனது விமர்சனக் கட்டுரையின் மூன்றாவது பகுதியில் திரு கருணாகரன் "பரதேசிகளின் பாடல்கள் தீராச் சுமையை நம்மீது இறக்கி விட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரிப் பரிமாற இந்தப் பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகப்படுகின்றன. எல்லாவற்றிலிருந்தும் வலி தெரிகிறது. பரதேசி காணாமற்போவது இங்கேதான்." எனக்கூறுகின்றார்.


இக்கூற்றுகளினுள் பொதிந்துள்ள அர்த்தச் சுமைiயின் தாக்கம் அதீதமானது. இதன் உளவியற் பரிமாணங்கள் பாரதூரமானவை. "தீராச் சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன" அல்லது வலியை நம்முகத்தில் அறைகிற மாதிரிப் பரிமாற இந்தப்பரதேசிகள் முனைகின்றனர்" எனுமிரு வாக்கியங்களிலும் உள்ள "முனைகின்றன" அல்லது "முனைகின்றனர்" எனும் வினைச்சொல்லுபயோகம் வெளிப்படுத்தி நிற்கும் விடயங்கள் ஆழமாகப்பார்க்கப்பட வேண்டியவை.

தடைசெய்யப்பட்ட ஒன்றை அல்லது குற்றமாகக் காணப்படக்கூடிய ஒன்றை ஆற்றுவதற்கான முனைப்பை பரதேசிகளின் பாடல்கள் முன்னெடுக்கின்றன எனும் அர்த்ப்பாடு இங்கு துல்லியமாகத் தெளிவடைந்து கிடக்கிறது.
வேறு வகையில் இதைக்கூறுவதனால் தனது இவ்வகையான கூற்றுகளின் மூலம் திரு கருணாகரன் அவர்கள் "கண்டுகொள்ளாதிருப்பதற்கான தனது உரிமையை" யாரும் மீறக்கூடாதெனும் கட்டளையை வெளிப்படையாயகவே கூறியுள்ளார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள மொழியின் தளம் குற்றமயப்படுத்தல்.


போனவர்களின் அவலங்கள், போனவர்களின் சோகங்கள், போனவர்களின் தவிர்க்கமுடியாத சுவடழிதல்கள், போனவர்களின் காணாமற்போதல்கள் என்பவை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் உரியைமைக் கோரிநிற்பவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகிக் கொண்டு செல்வதற்கான அறிகுறிகள் தாராளமாகவே தென்படுகின்றன.
பொங்கியெழும் தமது உணர்வால் போனவர்களைத் திட்டிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், போனவர்களின்றி இருப்பவர்களுக்கு விமோசனம் இல்லையென்பதை தெளிவுணர்ந்த சிலர் சமாதானம் செய்துகொண்ட வரலாற்றையும் இங்கு நினைவிருத்துவது உகந்ததென எண்ணுகிறேன்.


இருப்பவர்கள் சார்பாகப் போனவர்கள் இன்று கூறுவதென்ன?
இருப்பவர்களே, உங்களின் வலிகளை எங்களில் மிகப்பெரும்பான்மையானோர் உள்வாங்கித் துடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் படும் துன்பங்களின் எதிரொலிகள் எங்களைத் தினமும் வருத்திக்கொண்டேயிருக்கின்றன. நாம் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் வருந்துகிறோம். தொலைந்து விடுவதற்கு முன் அதையாவது செய்யக்கூடாதா என்ன? ஆனால் நீங்கள் யாரும் தொலைந்து விடாதென்பதற்காக எங்களில் பலர் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களின் வீதிகளில் ஊர்வலம் போய் உங்களின் நிலைகளை எடுத்துச் சொல்லத் தயங்கமாட்டோம். எங்களின் ஆவேசக் குரல்களை இவர்கள் அலட்சியத்துடனேயே பார்க்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினுமென்ன, அடிமேல் அடியடித்தால் சில வேளை அம்மி நகரும் எனும் நப்பாசை எம்மிடம் இன்னமுமிருக்கிறது. ஆனால்... நீங்கள் ?


எங்களின் அவலங்களைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை உங்களுடையது. ஆனால், தயவு செய்து எங்களை நிரந்தரமாக குற்றவாளிகளாக்காதீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இருத்தலை நிரந்தரமான குற்றமயப்படுத்தலுக்குள் தள்ளிவிடுவதில் உங்களுக்கு ஆதாயம் ஏதும் கிடைக்கப்போவதில்லை. மாறாக எங்கள் பலவீனங்கள் உங்களுக்குத் தீங்கையே விளைவிக்கும்.
யார் எழுதினார்களோ தெரியவல்லை. யார் அவலக்குரல் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பரதேசிகளின் அவலக்குரல்களை ஒரு கணம் இரக்கத்துடன் கேளுங்கள். அது காணாமற்போய்க்கொணடிருப்போரின் இறுதிக்குரலாகவும் இருக்கலாம் என ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.


"1980 ம் ஆண்டுகளிலிருந்து ஈழத்திலிருந்து பல இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடி மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தஞ்சம் புகுந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் தங்களின் சொந்த வேர்களிலிருந்து விலகிச் செல்வது தவிர்க்க முடியாததாய் அமைந்தது. முதலாவது, இரண்டாவது பரம்பரைகள் தமது மொழியை ஓரளவேனும் பாதுகாத்து வந்தபோதும் முன்றாவது பரம்பரை அதை இழந்துவிட்டது. மொழியை இழந்தபோதே அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் தவிர்க்க முடியாதபடி அழிந்துவிட்டது. மிகுதி அடையாளம் பல்வேறு காரணங்களினால் சிதைவுற்றுப் போனது. இருப்பினும் அவர்களின் தோற்ற அடையாளம் அழிக்கமுடியாததது. வெள்ளையர்களின் மேற்கில் வாழ்வோரின் அந்நியத்தோற்றம் யாரையும் அந்நியர்களாகவே பேணிக்கொள்ளும் தகமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதலால், "பரதேசித் தமிழர்கள்" எனும் மேற்கத்தைய நாடுகளின் இனக்குழுமம் உளவியல் ரீதியான சமநிலையைப் பேணிக்கொள்ளும் தன்மையிழந்து காணப்படுகிறது" என 2060 ம் ஆண்டில் ஒரு இன-உளவியல் ஆராச்சியாளன் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்போகிறான்"
இதை வெறும் ஊகம் மட்டுமென்றோ அல்லது எதிர்மறை மனநிலையின் கரும்பார்வையென்றோ மட்டுமே கொள்ளுவது நியாயமானதா ?


பரதேசிகளின் பாடல்களில் இந்த அவலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது கண்கூடு. ஆகவேதான் இப்பாடல்களை நாடோடிப்பாடல்களுடனோ அல்லது பழமொழிகளுடனோ ஒப்பிடுதல் ஆகாத ஒன்று எனக் கருதுகிறேன்.
அநாமதேயமாகுதலின் முதற்படியில் நிற்கும் பரதேசிகளின் பாடல்களின் உரிமையாளர்கள் யார் எனும் கேள்விக்கு பதிலில்லாதிருப்பது அந்தரிப்பை அளிப்பது உண்மைதான். ஆனால், சுவடுகள் அழிந்து கொண்டிருக்கும் பரதேசிகளின் அநாமதேய அலறல்களின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வதில் யாருக்கு நன்மையுண்டு. ஆயிரமாயிரம் ஈழத்துப்பரதேசிகளின் கூட்டுத்துயரை யாரோ சில பரதேசிகள் பதிந்திருக்கிறார்கள் என்று மட்டும் ஏன் கண்டுகொள்ள முடியாதிருக்கிறது ?
பதிந்தவர்கள் யாராகவிருந்தாலென்ன? அவர்கள் உயிருடனிருந்தாலென்ன? இறந்துவிட்டிருந்தாலென்ன? நான் ஒரு ஈழத்தமிழன் என்று கூறுவதைவிட நாம் ஈழத்தமிழர் என்று கூறுவதில்தானே கூட்டுணர்வுண்டு. அவ்வாறெனில், தன் முகமென்பது இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் முகங்களின் ஒரு சிறிய பிரதிபலிப்பேயென எண்ணும் ஈழத்துப்பரதேசி தன் முகத்தையும் தன்நாமத்தையும் மட்டும் ஏன் இழக்காது பாதுகாத்து அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்? தன் மண்ணுக்காக அநாமதேயமாக உயிரீயும் விடுதலைப்போராளியின் மனோ நிலையை இலக்கியப்படைப்பாளி தனக்காக உள்வாக்கிக் கொண்டு ஏதோ ஒரு வகையில் தன்னை அழித்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் தன்னையொத்தவர்களின் துயரைமட்டும் பதிந்துவிட்டுச் செல்பவனாக இருப்பதில் என்ன குற்றமிருக்கிறது ?


"பரதேசிகளின் பாடல்களை" வாசித்தவன் என்ற வகையில் ஒன்றைத் தெளிவாக என்னால் சொல்ல முடியும். அப்பாடல்களில் எல்லாம் என்ணுணர்வுகள் பதிந்து கிடக்கிறது. அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக நானே எழுதியிருக்க முடியும். இப்பாடல்களை வாசிக்கும் புலம்பெயர்ந்த, தன்நிலையுணர்ந்த, பிரக்ஞையுள்ள எந்தப் பரதேசிக்கும் என்போன்ற உணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமேதுமில்லை.
அவ்வாறெனில், எதற்காக வேண்டும் ஒரு அல்லது பல படைப்பாளியின் நாம விபரங்கள்? கூட்டுத்துயரின் வெளிப்பாட்டில், அவல ஓலத்தில் குரலுக்குச் சொந்தமானவர்களைத் தேடுவதில் என்ன பயனிருக்கிறது ?


தனது கட்டுரையில் "பரதேசிகள் பாடல்கள் கவிதைத் தொகுப்பில் இருபது பாடல்கள் இருக்கின்றன. எழுதியவரகளின் பெயர்கள் என பரதேசிகளுக்குக் கிடையாது. இதனால் இவை எத்தனை பேருடைய கவிதைகள் என்றும் தெரியாது. அப்படிப்பார்க்கும் போது மனம் அந்தரிக்கிறது." என திரு.கருணாகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.


கட்டுரையாளரின் இந்த அந்தரிப்புக்கான காரணத்தை தேடிப்புறப்பட்டால் பல விடயங்களைக் கண்டுணரமுடியும் என்பது எனது நம்பிக்கை. இந்த உளவியற்பகுப்பை நடத்துவதல்ல என்நோக்கம். இருப்பினும் இந்த அந்தரிப்புத்தான் பரதேசிகளின் பாடல்களின் வெற்றி. யார் எழுதினார்கள் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவற்றைப் பார்க்கும் ஒருவித அடிமைத்தனம் எம்மில் குடிகொண்டுவிட்டது. இவ்வடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்கேனும் பரதேசிகளின் பாடல்கள் உதவியளிக்கும் என்பது எனது நம்பிக்கை.


ஆகமொத்தத்தில் பின்வரும் விடயங்களுக்கு இவ்வெதிர்வினை வாயிலாக அழுத்தம் கொடுக்க முயன்றேன்.
அ) பரதேசி எனும் சொல்லிற்கு திரு.கருணாகரன் கொடுத்திருக்கும் அர்த்தம் அச்சொல்லின் வரலாற்று ரீதியான அல்லது மொழியியல் ரீதியான அர்த்தத்திற்கு ஒவ்வாதது.
ஆ) நாடோடிப்பாடல்களோ அல்லது பழமொழிகளோ "பரதேசிகளின் பாடல்களுடன்" ஒப்பிடமுடியாதவை. காரணம், அநாமதேயமான அவை தீர்மானமொன்றின் அடிப்படையில் அநாமதேயமாகப் படைக்கப்பட்டனவா அல்லது காலவழக்கில் படைப்பாளிகள் பற்றிய தகவல்கள் இழக்கப்பட்டனவா எனும் விடயம் யாருக்கும்தெரியாது. ஆனால், "பரதேசிகளின் பாடல்களின்" படைப்பாளிகள் தீர்மானமாகவே தம் அடையாளத்தை மறைத்திருக்கிறார்கள் அல்லது அழித்திருக்கிறார்கள். (பரிஸில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டில் தொகுப்பாசிரியர் கி.பி. அரவிந்தன் இதைக்குறிப்பிட்டார்).
இ) இடப்பெயர்வின் கால-தூர-வேகப் பரிமாணங்களை கருத்திலெடுக்குமிடத்து ஊரோடிகள், நாடோடிகள் அல்லது பயணிகள் என நாம் அரைநூற்றாண்டுக்கு முன் கருதியவர்கள் அல்ல இன்று நாம் கருதும் பரதேசிகள். தன்மையிலும் எண்ணிக்கையிலும் வித்தியாசமான இவர்களின் இடப்பெயர்விற்கான காரணங்களும் சூழ்நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவை.
(இவ்வகையில்தான் தற்போது மேற்குலகில் "றோம்", "ற்சிஹான்", "ஜித்தான்", "மனுஷ்", "ஜிப்சி" என பல்வேறு வகையில் அழைக்கப்படும் "பயணிக்கும் சமுக" மக்களையும் அவர்களின் அடையாளம் அல்லது அடையாளமின்மையையும் நவீன கால அகதிகளின் இடம்பெயர்வுத் துயர்வுடன் முற்றுமுழுதாக ஒப்பிடுவதும் அபத்தமாகிறது)
ஈ) ஈழத்தைப் பொறுத்தவரையிலும், "இருப்பவர்களின்" உடனடித்துயர்கள் "போனவர்களில்" பெரும்பான்மையோரால் உடனடியாகவே உள்வாங்கப்படுகிறது. ஆனால், "போனவர்களின்" நீண்டகால அடிப்படையிலான இல்லாமற்போகும் கூட்டுத்துயர் "இருப்பவர்களின்" கவனத்தை ஈர்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக "போனவர்கள்" மீது நிரந்தரமான குற்றவலைகள் "இருப்பவர்களினால்" அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இது பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு "மொழிகளிலும்" மேற்கொள்ளப்படுகிறது. திரு கருணாகரன் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் போனவர்கள் தம் துயர்பற்றிப் பேசவே கூடாதென்று அவர் கூறுகிறார் போல் தோன்றுகிறது. (இவ்விடயம் பற்றிய முழுமையான தயக்கங்களற்ற ஒரு விரிவான விவாதத்திற்கு இது தருணம் அல்ல என்பதும் எனது கருத்தாகும். காரணம் "இருப்பவர்களுக்கும்", "போனவர்களுக்குமான" ஒரு உரசலையோ அல்லது விரிசலையோ உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. இருப்பினும் இது சம்பந்தமான விவாதம் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாததென்பதே என் கருத்தாகும்)
உ) புகலிட இலக்கியம் என்பது வெறும் "புலம்பல் இலக்கியம்" மட்டும்தானா எனத்தொடங்கி பல்வேறு தரப்பட்ட விவாதங்கள் புகலிட இலக்கியம் மீது ஆற்றப்பட்டுவிட்டன. இது சார்ந்த செய்திகள் ஏதும் திரு.கருணாகரனுக்கு எட்டவில்லைப் போல் தோன்றுகிறது. புகலிட இலக்கியம் உருவாகவேயில்லையென்போர் ஒருபுறமும், புகலிட இலக்கியம் உருவாகவேபோவதில்லை என்போர் இன்னொருபுறமும், இன்னும் வேறு வேறு கருத்துக்களுடன் புகலிட இலக்கியம் பற்றிய விவாதம் சற்றுச் சலிப்படைந்து விட்டது. புகலிட வாழ்வின் கொடூரம் போகாதிருப்போரின் வாழ்வியற் துன்பியலுடன் ஒப்பிடும்போது எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. புகலிட இலக்கியம் அழுகிறது, சலிப்பூட்டுகிறது அல்லது மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே கூறி ஒலமிடுகிறது என்பவர்கள் அதனூடாகப் புகலிட வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் தமது "கண்டுகொள்ளாதிருப்பதற்கான" உரிமையை உரத்துக் கூறுகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.
இவைபற்றிய விவாதங்களோ, தீர்மானங்களோ எவையும் முற்றுப்பெறவில்லை. ஏனெனில் இவைபற்றிய ஆழமானதும் விரிவானதுமான ஒரு ஆய்வு இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பது என் கருத்தாகும்.
12.03.2007.
பரிஸ்.

நன்றி அப்பால் தமிழ்

முகமற்ற கவிஞர்களின் கவிதைகள்.எழுதியவர்: - கருணாகரன்
Wednesday, 07 February 2007

பரதேசிகளின் பாடல்கள்.
வெளியீடு :- அப்பால் தமிழ், பிரான்ஸ்.

01.
பழமொழிகளுக்கு யாரும் உரிமைகோருவதில்லை பழமொழிகளை யார் தந்தார்கள்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவற்றின் பொருளும், அழகும் கவிதைக்கு நிகரானது. இதேபோல, நாடோடிப்பாடல்களுக்கு உரித்தாளர்கள் என்று எந்த தனி அடையாளமும் கிடையாது. ஆனால், அவற்றின் கவித்துவம் அசாதாரணமானது. வாழ்வை அதன் மெய்யான அனுபவத்தளத்தில் வைத்து அவை வெளிப்படுத்துகின்றன. அதனால், அவை மண்ணினதும், மக்களினதும் அடையாளமாக இனங்காணப்படுகின்றன. இன்றைய சமூகவியல் ஆய்வுகளில் பழமொழிகளுக்கும், நாடோடிப்பாடல்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் பெரியது.

நாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே.

ஜிப்சிகள் இதற்கு நல்ல உதாரணம். ஜிப்சிகளின் வரலாறு நீண்டது. முகமற்று போனவர்களுக்கும் வரலாறு உண்டா? அவர்களுக்கு எப்படி வரலாறும் சுவடும் இருக்க முடியும்? சுவடுகள் உள்ள மனிதர்கள் எப்படி முகமற்றுபோனவர்கள் என்று சொல்ல முடியும். என்ற கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் நியாயமானவை. ஆனால் அவர்களுக்கு எந்த சுவடுகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அவர்களின் எச்சங்கள் மட்டுமே எமக்கு கிடைக்கின்றன. இந்த எச்சங்களை நாம் சேர்த்துப் பார்க்கும்போதும், தொகுத்து பார்க்கும்போதும் அதற்குள் ஒரு தொடர் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்த தொடர் ஓட்டம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல ஆனால் அனுபவ வாழ்வின் சாரத்தை அதன் மெய்த்தளத்தில் - அனுபவ தளத்தில் பதிவு செய்தவை என்பதால் அவற்றுக்கு வரலாற்று அடையாளம் கிடைத்துவிடுகின்றது. இங்கே துயரம் என்னவெனில் இந்த வரலாற்றில் அவர்களுடைய மனம் இருக்கும். ஆனால், முகம் இருக்காது.

முகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன? முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.

மேற்கில் ஜிப்சிகளின் படைப்புலகம் துலக்கமாக நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தவகைப்படைப்புக்கள் ஆபிரிக்கச் சமூகங்களிலும் நிறையவுண்டு. ஜப்பானில் இன்னும் இது அதிகம். முகத்தை தீர்மானமாக இழக்கும் வாழ்முறையைக் கொண்டிருக்கும் கவிதைகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும். தமிழில் நாடோடிப்பாடல்கள் நிறையவுண்டு. அவற்றுக்குச் செழுமையான மரபொன்றுமுண்டு.

இப்போது இந்த நாடோடி மரபின் தொடர்ச்சியாக 'பரதேசிகளின் பாடல்கள்' என்றொரு நவீன கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. அப்பால் தமிழ் என்ற வெளியீட்டகம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்பில் இருபது கவிதைகள் இருக்கின்றன. எழுதியவர்களின் பெயர்கள் என பரதேசிகளுக்கு கிடையாது. இதனால் இவை எத்தனைபேருடைய கவிதைகள் என்று தெரியாது. அப்படிப்பார்க்கும் போது நமது மனம் அந்தரிக்கின்றது.

நாடோடிப்பாடல்கள் அல்லது ஜிப்சிகளின் பாடல்கள் எல்லாம் அவர்கள் இல்லாத காலத்தில் பின்னர் வேறு யாரோவால் தொகுக்கப்பட்டன. அல்லது சமூகம் தொடர்ந்து அவற்றை வாய்மொழியாக பராமரித்துவந்து பின்னர் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

தொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.

நாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே. ஆனால், இந்த முயற்சி தமிழில் புதியது. மாறுதலானது. முயற்சியின் பெறுபேறும் அதிகமானது. அதே வேளையில் இந்தக் கவிதைகளின் பொருள் குறித்து நாடோடி மரபுசார்ந்த கேள்விகள் இல்லை. இவை மெய்யாகவே நாடோடிக்கவிதைகள் தான். அதேவேளை அதற்கு எதிர்மாறானவையும்கூட.

கவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.

02.

நாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் "சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்".

பயணிகளான நாடோடிகள் தங்களின் பயணநூல்களிலும், குறிப்புக்களிலும் வரலாற்றை ஆழமாகக்பதிவு செய்துள்ளார்கள். அல்லது அவர்களுடைய குறிப்புகளில் இருந்து பின்னர் வரலாறு ஆதாராபூர்வமாக்கப்படுகிறது. சீன, அரேபிய வணிகர்களும், யாத்திரீகர்களும்கூட ஒருவகையான நாடோடிகள் தான். அவர்கள் நாடோடிகளாகவும் அதுசார்ந்த பயணிகளாகவும் இருந்துள்ளனர். இலங்கை, இந்திய வரலாற்றில் இத்தகைய நாடோடிகளின் அல்லது பயணிகளின் குறிப்புகள் வரலாற்றியலில் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.

மேற்கே நாடுகாண் பயணங்களுக்கு முன்னும் நாடுகாண் பயணங்களின் போதும் பின்னும் இது நிகழ்ந்திருக்கின்றது. இங்கே ஆக்கிரமிப்புவாதிகளையும், கொலனியாதிக்கவாதிகளையும் குறிக்கவில்லை. சில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.

தமிழில் நாடோடி என்ற சொல் எப்படி வந்ததென்றும் எப்படி பொருள்கொள்ளப்பட்டு வந்ததென்றும் புரியவில்லை. தமிழர்கள் அநேகமாக மிகப்பிந்தியே நாடோடி என்ற விதத்தில் வெவ்வேறு நாடுகளுக்கான பெயர்வைக்கொண்டிருக்கிறார்கள். மற்றும்படி உள்நாட்டில் ஊரோடிகளாகவே இருந்தனர். ஊரோடிகளின் பாடல்கள் நாடோடிகளின் பாடல்களாக எவ்விதம் கொள்ளப்பட்டு வந்தன என்று தெரியவில்லை.

பாடல்களின் பொருளில் நாட்டுக்கு நாடுமாறியதன் அடையாளங்களைக் காணமுடியவில்லை. ஊரோடிய சுவடுகளே பாடல்களில் தெரிகின்றன. ஆனால், அவை பரதேசிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.

பரதேசி சமூகவாழ்வில் மிகத்தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் பாத்திரம். விளிம்பு நிலைமனிதர்களின் நிழல் பரதேசிகளில், அல்லது பரதேசிகளின் நிழல் விளிம்புநிலை மனிதர்களில் படிகின்றது.

பரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.

'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.

தமிழல்கூட 'பாலியலை' இயல்போடும், வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல், நாடோடிப்பாடல்கள் சொல்கின்றன. காதல் மற்றும், பால்விவகாரங்களை பேசுவதற்கு தமிழ்ப்பண்பாட்டுச் சூழல் அதிகளவு வெளியை ஒருபோதும் தருவதில்லை. அதனால், அது மொழியில்கூட அதற்கமைவான புலனையும், முறைமையையும் உருவாக்கியுள்ளது.

நவீன படைப்புத்தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களும், விலகல்களும் இங்கே கவனிக்கப்படுகின்றன. ஆனால், அவை மிகப்பிந்திய வரவுகள்.

03.

'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது. தொடரும் அவமானமாகவும், குருட்டுத்தனத்தின் சாபமாகவும் நீடிக்கின்றது.

'தறி' என்ற கவிதையின் பரிமாற்றம் இந்தவலியைப் பகிர்வதாகவே உள்ளது. ஊரைப்பிரிதலே இந்தக்கவிதைகளின் ஆகப்பெரிய அம்சம். ஊரில் வேர்விட்ட விருட்சங்கள் (இப்படித்தான் பல கவிதைகளின் குரல்கள் தொனிக்கின்றன) பிடுங்கி எறியப்பட்ட வெவ்வேறு திசைகளில் பெயர்க்கப்பட்டுவிட்டன. அந்நியம், அந்தரிப்பு என தீராத்தவிப்பின் நிழலாகவும், நிஜமாகவும் அச்சமூட்டுகிற வகையில் பொங்குகின்றது.

நாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.

இவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன. இந்தக்கவிதைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கவேண்டியுள்ளது. அது இங்கே அவசியமானது. அதற்கு முன்பு தனியாக ஒரு சிறு குறிப்பு இங்கே எழுதியாக வேண்டியுள்ளது.

04.

இடைக்குறிப்பு:-
அப்பால் தமிழ் வெளியீட்டகத்தின் முயற்சியில் 'பரதேசிகளின் பாடல்கள்' (கவிதைத் தொகுப்பு) வெளிவந்திருக்கிறது. இதற்குமுன் 'பாரீஸ் கதைகள்'. அது இரண்டு பதிப்புக்களைக் கண்டுள்ளது. ஒன்று இலங்கையிலும், மற்றது தமிழகத்திலுமாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் பதிக்கப்பட்டுள்ளன. எல்லாமே 'பாரிஸ்' நகரத்தை மையமாகக் கொண்டவை. மற்றத்தொகுப்பு 'பரதேசிகளின் பாடல்கள்' இதில் இருபது கவிதைகள் உண்டு. சிறிய ஆனால் அழகான புத்தகம். எளிமையும் அழகும் ததும்பும் விதத்தில் வடிவமைக்கமாகக்ப்பட்டுள்ளது. பூமி பிளந்துள்ளது போல ஒரு வலிமையான ஓவியத்தை சேர்த்திருக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள கவிதைகளையும்விட இந்தக்கோடு - ஓவியம் கூடுதலான வலிமையுடையது. மிகச் சாதாரண கோடாக யாருக்கும் தோன்றமுடியாது. நமது இதயம் இங்கே பிளந்துகிடக்கிறது.

குருதி வழியமுடியாத அளவுக்கு நமது இதயம் காய்ந்துவிட்டதாகவும் பாலையாகிவிட்ட இதயம் பிளந்திருப்பதாகவும் படுகிறது. தி . அ. றெபேட் படவமைப்புச் செய்திருக்கிறார் மிக நேர்த்தி. ஒரு முன்மாதிரி. 48 பக்கங்கள். சிறிய புத்தகம்.

05.

பரதேசிகள் எனப்படுவோரின் இந்தக்கவிதைகள் குறித்து சிந்திக்கும் போது புலம்பெயர் இலக்கியம் குறித்து நமது பதிவுகள் மீள்நிலையடைகின்றன. அந்த மீள்நிலை சில கேள்விகளை உருவாக்குகின்றன. அதிகபட்சம் ஒருசில கேள்விகள்.
புலம்பெயர் இலக்கியம் இன்னும் ஊர்நினைவில்தான் வரப்போகிறதா?.
கடந்தகாலத்தின் நிழலை உருமாற்றம் செய்யாமலே தொடர்ந்தும் அந்த நிழலைப் பிரதிபண்ணும் எத்தனிப்பிலேயே அது இனியும் கழியப் போகின்றதா?
புலம்பெயர் தளத்தின் - வாழ்களத்தின் அனுபவங்களை அது சாட்சிபூர்வமாக்க இன்னும் தயங்குவதேன்.?
யதார்த்தத்தில் சமரசங்களும் அடங்குதல்களும் கொந்தளிப்புகளும் நிகழ்கின்றது. அவற்றை கூச்சமின்றி அது திறக்காதா?
மனவெளியில் நிகழ்கின்ற இரசாயனமாற்றங்களை பிரதிபலிக்கும் விதமான பிரதிகளை எதிர்பார்ப்பதன் அடிப்படையாகவே இச்சில நோக்கப்படுகின்றன.
புலம்பெயர் இலக்கியம் இன்று பழகிவிட்டது என்பதற்கும் அப்பால் அது சூத்திரத்தனத்தின் சலிப்பையூட்டவும் தொடங்கிவிட்டது.
இது ஒரு பக்கம் நியாயமான வேதனைகளின் பரப்பாக இருக்கலாம். ஆனால், அதற்குமப்பால் நமக்குத் தேவையானது; நிகழ்வாழ்வின் உள்ளமைவுகள் தொடர்பான ஊற்றும் பெருக்குமென்ன? என்பதே.
வேரற்ற வாழ்களத்தில் எதிர்நோக்குகின்ற சவால்களும், அனுபவமும் உருவாக்குகின்ற மனிதநிலை என்ன?
இவ்வாறு எழுகின்ற கேள்விகள் புலம்பெயர் இலயக்கியத்தின் புதிய குணத்தை எதிர்பார்க்க விரும்பிய ஆவலின்பாற்பட்டதே.

இங்கே இந்தத்தொகுதியில் பரதேசி என்பது என்ன அர்த்தத்தில் விளக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலில் பரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.

எந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது. ஒரு தூசியளவுகூட இல்லை என்போமல்லவா. அந்த அளவுக்கு. தூசி என்பது ; சாதாரணமானதல்ல. தூசி கண்ணில் விழும்போது அதுவே நமக்கு கண்ணுக்குள் மலை விழுந்தது போலாகிவிடுகிறது. மலை ஒரு போதும் கண்ணுக்குள் விழமுடியாது. ஆனால், தூசியோ கண்ணுக்குள் மலை போலாகிவிடுகிறது. ஏதொன்றும், அதன் இடம்பொறுத்தும், காலம்பொறுத்தும் முக்கியமாகிவிடுகின்றன. ஆனால், பரதேசிக்கு எதுவும் முக்கியமானதல்ல.

பரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.

பரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இது இன்னொரு விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது.

பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும்? அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.

ஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.

நான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.


இருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.

பரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை.

பரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா? அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.

(

நன்றி: அப்பால் தமிழ்
{அழுத்தம் மற்றவர்களுடையது)

Tuesday, April 3, 2007

எனது மகள் கேள்வி கேட்பவள்

-ஜிப்சி-தெ
ருவில் போற வாறவர்களிடம்
கடவுளின் பிரசுரங்களை திணித்து
"தீய"வரிடமிருந்து விலகி நிற்கக் கேட்கிறான்;
'அவனிடமிருந்து' விலகி வந்தால் "வேசை நாயே
நீ கட்டையிலதானடி போவ" என்கிறான்
(எல்லாரும் போறதுதானே?)
பிறழ்வுற்றோர் வாய்களைப் பொத்த ஓதி
மண்டைக்குள்ள பேய்-ய்க் கத்தல் -
"எதிரிகள் பாவிக்கிறார்கள்
எதிரிகள் பாவிக்கிறார்கள்"

யாரிந்த எதிரிகள் சர்வேசா?
'விடிஞ்சா பொழுதுபட்டா'
நீ கூப்பிட்டண்டே விழிக்கின்ற
இந்த எதிரியர் யார்

சிறு எறும்பு
நானா?
ஒரு துரும்பு
நீயா?
தம் இயல்பில் காற்றில் அலையுண்டும்
இம் மரங்களோ?

ஊழியுள்
உற்றவளை உற்றவனை
மென் மேலும்
எதைஎதையோ இழந்தவர்கள்
"கடவுளுக்கு"
நன்றியாக இருத்தல் ஒன்றே
சாத்தியம் என்கிறாயா?
{கவனி! கடவுள் = கடவுள் மட்டுமே}

*ஒரு எல்லைக் கிராமத்துள் நுழைந்து
திட்டமிட்டு 'அவர்கள்' ஆற்றும் வீரச்செயல்களை விஞ்சி
அச்சம் பாவிய எளிய சனங்களை வேட்டையாடி
எஞ்சியதோர் சின்னக் குழந்தையை
தென்னையில் அடித்த்-து-க் கொன்ற போதில் -
அதுதான் 'எதிரி'யானதோ?
{அச்சப் படாதே, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்:
இதை செய்தது 'உன்னவர்கள்' அல்ல}
**வழிபாட்டுத் தலங்களில் தஞ்சமடைந்தவரை
தேடிக் குறி வைத்து கவ்வ விரையும் கழுகுகளென
வானிருந்து குண்டுகள் எறிந்து சூறையாடும்
- அந்தப் பேரரக்கனுடன் போட்டியிட்டு
பாங்கொலி கதற
வெட்டிச் சாய்த்த சகோதர இனமென்ன எதிரியா?
{அச்சங் கொள்ளாதே, இதனை "உன்னவர்கள்" இன்னும்
உரிமை கோரவில்லை!}
...
நான் இன்னும் உரையாடவே ஆரம்பிக்கவில்லை
மனப்பிராந்தியில் அரற்றலாகி மூச்சுவாங்க
உன் பிரசுரங்களைத் திணிக்கிறாய் .
"
எதிரியள் பாவிச்சிருவாங்கள்
எதிரியள் பாவிக்க விடக் கூடாது.. ஸ்ஸ
பயந்த மாதிரியே நடந்திற்று
எதிரியள் பாவிக்கிறாங்கள்"
"எதிரிகள்...." - அவர்கள் உன்னை
பாடாய்த்த்தான் படுத்துகிறார்கள்!

குரலினில் ஏனிந்த அச்சம் சர்வேசா?
எங்களை 'அவங்கள்' பாவிக்குமாப்போல
இடையில் 'உண்மை' இருந்தேன் அச்சுறுத்துகிறது?
கேவலம் அது எதிரியர் பாவிப்பதாய் உள்ள
காலக் கொடுமையைப் பார்த்தாயா?

கேட்டால்:
உன் பேரச்சத்தின் பேரில் என்
மண்டையைப் பிளந்து
மூளையை எடுத்து அதுள்
உன் பயங்களை அடைய முனைகிறாய்;
உன்னிடமிருந்து விலகி
வந்தால்,
நடுக்கத்தை மறைக்க குரலை உயர்த்தி
எதை எதை எழுத வேண்டுமென
கொடி பிடிக்கிறாய்
(நாளை எப்படி ஓ வேண்டுமென்றும்
விளக்கப் பிடிப்பாயோ)

அ...
நேற்று என் மகள் ஜிப்சி
ஓடியும் திரும்பியும் ஒரு விளையாட்டி-னிடையே
'புறுக்' என சிரித்து
உலகத்தை நாறடிக்கும்
தன் பெருமைக்குரிய குசுவை
உன் எதிரிகள் பாவிப்பரா என
/ உன்னைக்

கேட்டு
ச் சொல்லச் சொன்னாள்
அட..
இன்றே இவளைப்
4'போட்டால்' என்ன?!
~~


குறிப்புகள்:
ஜிப்சி - 1983இன் இனப்படுகொலைகாலத்தை வாழ்ந்த பெற்றோர் வளர்த்த ஒரே பிள்ளையாதலால் அவளுக்கு நாடோடிகளின் பெயர் சூட்டப்பட்டது.
*சிங்கள எல்லைக் கிராமமொன்றில்
உரிமை கோரப்படாத தமிழ்த்தேசியப் படுகொலையின் பிறகு நடந்த சம்பவம் ஒன்றில்
**சிங்களப் பேரினவாத அரசினால் தேவாலயங்களில் பிற பள்ளிகளில் தஞ்சமடைகிற தமிழர்கள் வான்தாக்குதலில் கொலைசெய்யப்படுவர்; சகோதர இனம்: முஸ்லிம்களை அவ்வாறே தமிழர்கள் "எழுத்தில்" அழைத்து வந்தார்கள்.
4போடுதல் = கொலை செய்தல்
~~
மார்ச் 07