Monday, February 19, 2007

பிள்ளைகள் தேவை


னது பிள்ளையை அவர்கள் கொண்டு போனார்கள்
வீட்டு முற்றங்களிற்கு யுத்தம் வந்த போது - போரிட
பிள்ளைகள் தேவையானார்கள்.
வாகனங்கள் புழுதி கிழப்பிச் சென்ற தெருக்களில்
உனது கடைசிப் பிள்ளையின் வாசம் வந்துகொண்டிருக்க
நெஞ்சடைத்து நீ விழுந்தாய்;
ஆஸ்பத்திரியில் அவனது வரவை
ஒருபோதுமே அறிவிக்காத சுவர்களுக்குள் உயிரை விட்டாய்

உன்னை அவர்கள் எடுத்துச் சென்றபோது
பிள்ளையை நினைத்து நினைத்துப் போன தெருக்கள் துயரத்துடன் அழுதன
கண்ணீர் சிந்திச் சிந்தி தடம் கீறும் கன்னங்களில்
மீசை முளைத்திராத பிஞ்சு முகம்
மோதி மோதி அழுதது

பூவரசம் பூத்திருக்கும் காலமாயிருக்குமா இது...
கொண்டல் பூக்கள் தொங்கும் ஒய்யாரத் தெருக்கள் துயர் கொண்டு அழுதன
கிராமத்துப் பறவைகள் வானில் சிலகணம் அந்தரித்து நின்றன
உனது பருவ மகன் தன் ஆசைகளை அள்ளிப் போட்ட தாய்நிலத்தில்
சலனமின்றி விரைந்த வாகனத்துள்
-எங்கிருந்தோ ஒரு கழுகு நிழலாகத் தொடர -
அவன் அழுதுகொண்டே போனான்,
உதடு பிதுக்கிப் பிதுக்கி,
முலையைக் கொடுத்தால்
இப்போதே குடித்து விடுவான் போன்ற
பால்மறவா முகத்துடன்.

நீ அவனது நினைவுடன் இறந்தாய்.
காசிநாதன்,
அவர்கழழைக்கிற ஓர் புனித தினத்தில்
உள்ளே அவனது சதைத்துண்டு இருப்பதறியாத் துண்டுநிலத்தில்
உன் மனைவி தீபங்களை ஏற்றி வைக்க
இனி நீ அழ வேண்டி வராது;
உனக்கு முன்னால் அவன் போன கனத்தை
உன்னோடு சுமக்க வேண்டியதுமில்லை;
நல்லதொரு சாவு!
யாருக்கும் வாய்க்காது
~





மாசி. 2007

காயா.


0 கருத்துக்கள்: