தப்பிச் செல்கிற மக்களுடன்
கள்ளத் தோணிகள் செல்கின்றன
"வரவேற்பு பலமாய்" இருக்கிற
அந்த நிலப் பிரதேசம் நோக்கி.
என் மக்களே
ஒரு படகின் படபடப்புகள்
உங்கள் இருதயத் துடிப்பினை விடவும், அதுவோ
எம் பால்யத்தின் ஓலைவீடு மழைக் காற்றில்
அடிஅடிப்பதை விடவும்,
மயிரிழையில் ஆடும் நம்பிக்கையில்
அச்சங்களிற்கு அப்பால்
எதை நோக்கிச் செல்கிறீர்கள்?
கோணமலையிருந்து புறப்பட்ட குடும்பமொன்று
இடைவழியில்
படகு மூழ்கி
தன் பிள்ளையைப் பறிகொடுத்த
தகப்பனின் கதறலோ
கரைகளை அடையவில்லை
கொந்தளித்த அலைகளுள் சிறு குரலோ எழும்பவில்லை
நட்சத்திரங்கள் கொட்டியில்லாத கரைகளில்
பாதங்கள் படிகிற போதினில்
(என் அன்பே, நண்பனே)
உமைத் தோய்ந்திருந்த குருதி
கழுவுப்பட்டு இருப்பதாக,
குரல்வளையைப் பிடித்திருந்த கொடும் கரங்கள்
இங்கும் நீட்டப்படா திருப்பதாக,
கிராமத்து தேவாலயங்களில் தஞ்சமடைந்த
பிள்ளைகளை
"அவர்கள்" கொன்று போட்ட குருதி
வற்றிப் போக முன்னார,
அரசியலேதுமற்ற ஓர் அப்பாவிக் குடிமகனும்
"போகுது சவம்" என
''தட்டப்படும்" உயிர் குறித்த கரிசனைகளுள்,
அவனும் இவனும் போவ வர சுட்டுச் சுட்டுப்
போனவர்கள் விட்டுச் சென்ற கண்ணீர்
காய்ந்து போவ முன்னார,
பெரும் அலைகளிற்கேற்ப
எழுந்து எழுந்து தாழும் தோணிகள்
எம் மேய்ப்பர்களைத் தாண்டி
எல்லைகள் கடந்து - கரை சேருமாக;
படபடத்த மழைவீட்டின் கிடுகோலை
வீட்டைப் பிளந்து
காற்றில் பறந்ததாக இல்லாது,
சேதமின்றித் தப்பிக் கரை சேருமாக, அக்
கரை சேருமாக.
(
மார்கழி 2006
புகைப்படம்:http://declicautourdumonde.free.fr
Friday, February 23, 2007
கள்ளத் தோணிகள்
எழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 9:58:00 PM
Labels: KAYA / க.யசோதர
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
உண்மை.
சுடுகிறது.
வருகைக்கு நன்றி பொறுக்கி...
Post a Comment