அவர்கள் ஒரு தேசத்துள் நுழைவார்கள்
யன்னலூடே பார்த்தேன், களைப்புற்று.
வருடா வருடம் இதுவேதான் நடக்கிறது:
ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்
குறிகளை வெட்டும் அனுமதியுடன்
தவிரவும் சித்ரவதைக் கூடங்களிற்கான திறப்புகளுடன்;
துப்பறியும் பொலிஸ்காரர் கட்டை அவிழ்த்து
சாவை முகர்ந்துவர விடப் படும்
நாயினது துரிதத்துடன்
பார், பார் நகரின் அரசியல் தலைவர் அனுப்பிய
குண்டர் கொட்டாந் தடியுடன்
எதற்கும் தயாராக! ஜீப் ஜீப்பாய் தொங்கிக் கொண்டு--
கடைகளை காருகளை, உள்ளிருக்கும்
-அவர்கள் முன் மிகச் சிறிய மனிதர்களை-
எரித்துக் கருக்கி
மகிழுமாறு - அவர்களது விசைகள் அமத்தப்பட்டுள்ளன.
(பயப்படாதீர்கள்: எல்லாவற்றையும் ஐ.நா. கண்காணிக்கிறது)
*அமெரிக்க இராணுவம், படையெடுத்த நாட்டின்
பெண்களை என்ன செய்யும் என்று
சீ.என்.என் சொல்லத் தேவையில்லை
(இந்திய இராணுவம் சொல்லித் தந்தது)
**தேச நலனிற்காய் பிற தேசத்தாரை ஆள
அனுப்பப்பட்டு,
கம்பத்தில் கயிற்றாற் கட்டி
இடுப்பு சராயைக் கழட்டி
அதுள் இருந்த ஆயுதத்தால் அடித்தால்--
அப்போது தரப்படுவது
"யாரையோ" அழிப்பதற்கான குரோதம்
(***அதில் குளிர்காய்பவர் யாரென்ற விமர்சனம்
திரும்பி விடும் கவனம்)
அப்படித்தான் அது என்றால் இப்படித்தான் இது
ஒரு கணித சமன்பாடு
இவ்வாறே இருந்தாக வேண்டும்
சகலத்தையும் கணக்கெடுக்கும் ஐ.நா. கண்டிக்க
செய்ய வேண்டியதெல்லாம்:
அழிப்பு... அழிப்பு...
தொடரும்: அறிக்கை அளிப்பு அளிப்பு
~
*(தணிக்கையின்றி:
அமெரிக்க இராணுவமே,நீ படையெடுத்த நாட்டின்
பெண்களை என்ன செய்வாய் என்றெமக்கு
உன் சீ.என்.என் சொல்லத் தேவையில்லை
**(தணிக்கையின்றி:
உன் தேச நலனிற்காய் நீ பிற இனத்தவரை
அனுப்பப்பட்டிருக்கிறாய்
***(தணிக்கையின்றி:
அதில் குளிர்காய்பவர் யாரென்ற விமர்சனம்
உன்னிடமே திரும்பி விடும் கவனம்!
(
பெப். 2007
0 கருத்துக்கள்:
Post a Comment