குருதியால் அமையும் தேசம் வாதைகளால் அழியும் மனிதன்
--அஜீப் பொன்னையா--
நூல் - ம்
ஆசிரியர் - ஷோபா சக்தி
வெளியீடு - கருப்பு பிரதிகள்
மூன்றாம் உலக நாடுகளில் தெடர்ந்து இடம் பெற்றுவரும் போர்கள் அவற்றின் மீள் நிகழ்த்துகைகள் அழிவின் சாத்தியப்பாடுகள் பற்றிய துல்லியமானதும் தவிர்க்கமுடியாதவையுமான எதிர்வு கூறல்களால் இருப்பு அல்லது நிலவுகை சூழப்பட்டிருக்கும் நிலையில் மனித இருத்தல் குறித்து நாமனைவரும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தகைய சிந்தனை கலை இலக்கியத் தளங்களில் நீட்சியடையும் போது உருவாகும் படைப்புகள் போர் புரட்சி என்பவற்றின் பின்னணியில் மனித இருப்பை ஆராயும் தன்மையுடையவையாக வெளிவருகின்றன. ஈழத்துச்சூழலில் இத்தகைய புனைவுகளை உக்கிரத்துடன் புனைந்து வரும் ஷோபா சக்தியின் சமீபத்திய நாவலான ‘ம் பலவகைகளில் கவனிப்புக்குரிய ஒன்று.
போரின் முன் மனித உயிரின் பெறுமதி இழப்பின் அவலம் இடம் புலம் பெயர் வாழ்வின் அவலம் சமகாலத்தேவைப்பாடு என்று நிறையவே பெருங்கதையாடல்கள் நிகழ்ந்து வரும் காலமிது.போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல் ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறவே இல்லை.சமகாலத்தேவைப்பாடு என்ற ஓர் எண்ணக்கருவை தாங்களாகவே ஏற்படுத்தி வைத்துக்கெண்டு பிறரையும் அதன்படி செயற்பட வைப்பதே பெரும்பான்மை இலக்கியவாதிகளது நிலைப்பாடாக இருக்கிறது.ஆதிகார மையங்களது ஃபாஸிசக்கரம் நீளமுடியாத தொலைவில் இருப்போர் கூட சுயதணிக்கையுடனேயே கருத்து வெளியிடுவதை வேதனையுடன் பார்க்க வேண்டியுள்ளது.
தியாகம் அர்ப்பணிப்பு வீரம் போன்ற உணர்வு வயப்பட்ட சொற்களை புனிதப் பீடத்தில் ஏற்றிப் பிரச்சாரம் பண்ணிக்கெண்டிருப்பது மையநீரோட்டம். போரினதும் அதன் இணை நிகழ்வுகளினதும் நீண்டகால விளைவுகள் தனிமனித அவலங்கள் குறித்த கதையாடல்கள் அனைத்துமே மையநீரோட்டப் பார்வையின்படி எதிர்க்கதையாடல்கள் தான்.மேற்கூறிய கதையாடல்களின் உக்கிரமான வெளிப்பாட்டிற்கு எழுதப்படாத அதிகாரத்தின் சொல்லப்படாத தணிக்கை விதிகள் ஒத்துப்பேவதில்லை. அத்துடன் இலங்கையில் இத்தகைய வெளிப்பாட்டிற்கான இயங்குதளமும் அரிதான ஒன்றாகவே தெடர்ந்தும் இருந்து வருவது சகிக்க முடியாத ஒன்று.
ம் மை பிரதியியல் (Textual) ஆய்வுக்கும் சூழல்சார் (Contextual) ஆய்வுக்கும் உட்படுத்தும் ஒருவன் கேள்விகளுக்குள் புதையுண்டு போக வேண்டியவனாகிறான்.ஏனெனில்: மக்களின் பாதுகாப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அரசு மக்களின் விடுதலை சுதந்திரம் என்பவற்றுக்கென கட்டமைந்ததாகக் கூறப்படும் தமிழ்த்தேசியவாத அமைப்பு மற்றும் இவ்விரண்டுக்கும் பின்னாலுள்ள கருத்துருவாக்க மையங்கள் என்பவற்றின் மீதான ஆய்வுக்கு நிகரானதே ஒரு ஈழத்து இலக்கியப் பிரதியை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு. ஆகவே ம்-இனை ஆய்வுக்குட்படுத்தும் செயற்பாடு என்பது பிறிதொரு வகையில் ஈழத்தின் சமகால அரசியலை ஆராய்வதாக அமையும். ‘ம்'மின் விமர்சகன் நாவலின் கதையாக்கத்துக்கும் அமைப்பாக்கத்துக்கும் பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் சமூக அமைப்பை பகுப்பதற்கு மனத்தடையற்றிருக்க வேண்டும்.
கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவுத் தோற்றப்பாடு மற்றும் சமநிலையை ஒரு நவீனத்துவப்பிரதி சிதைத்தே ஆகவேண்டும். அத்தனை சிதைவுகள் ரணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார மையங்கள் போர்த்தி விடும் வெண்ணிறப் போர்வையை ‘ம்' கிழித்தெறிவதால் அது தன்னை ஒர் உக்கிரமான நவீனத்துவப் பிரதியாக முன்னிறுத்துகிறது. ம்மின் சித்தரிப்பும் கதையாடலும் நாவலைக்கடந்து செல்ல முடியாத நிலையை வாசகனிடத்து ஏற்படுத்துவதை உணர முடிவதால் அது தன்னை ஓர் சிறந்த படைப்பாகவும் முன்னிறுத்திக் கொள்கிறது.
தமிழ்த்தேசியத்துக்கான ஒருங்கிணைவு ஏகப்பிரதிநிதித்துவம் காவியத்தலைவன் ஒன்றிணைந்த இலங்கை போன்ற நுண்ணரசியல் மிகு செற்பிரயோகங்கள் மூலம் சமூக அமைப்பின் அடிப்படை அலகான தனி மனித இருப்பு நூதனமாக மறுதலிக்கப்படுகிறது. மறுதலிக்கப்பட்ட இருப்புக்குச் சார்பான எப்பிரதியும் ‘பயங்கரவாதிகளின் பிரச்சாரப்பிரதி' என்றும் ‘துரோகியால் எழுதப்பட்ட பிரதி' என்றும் முத்திரை குத்தி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு மாற்று வெளிகளை இல்லாதொழித்தும் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கியும் ஆதிக்க அமைப்புகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நிலையில் சமூக அமைப்பின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பிரக்ஞைக்குட்படுத்தும் ஒரு செயலே சமநிலையைக் குலைத்தல் என்பதாகிறது. மேற்புறத்தின் தொகுப்பு நிகழ்வான மௌனத்தை மீறி அதன் நிகழ்த்துகைக்கு அடியில் இருக்கும் புதைக்கப்பட்ட கூச்சல்களையும் அலறல்களையும் வெளிக்கெணர்தல் சமகால அரசியல் இலக்கியப் பிரதியொன்றின் கடமையாகிறது. அக் கடமையைத் திறம்படச் செய்யும் ‘ம்' சமகாலத்து புனைவுகளில் முதலிடம் பெறும் தகுதியைக் கெண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
பல விதமான தூண்டல்களை சமூக இருப்பு மீது பிரயோகிப்பதன் மூலம் தனி மனித இருப்பை அர்த்தமற்றதாக்கும் காரியத்தைச் செய்கின்றன நமது அதிகார நிறுவனங்கள். தனி மனித இருப்பின் உடல்வெளி மற்றும் மனவெளி மீது முறையே ஒடுக்குதலையும் கருத்தியல் ஆதிக்கத்தையும் செலுத்திச் செலுத்தியே அந்த இருப்பை செயல்பாடற்றதாகவும் எந்நிலையிலும் ‘ம்' கொட்டக்கூடியவனாகவும் வைத்திருக்கும் உத்தி இன்று நேற்று ஏற்பட்டதல்ல: அதிகாரத்தின் ருசி என்று மனிதனுக்குப் புரிந்ததோ அன்றிலிருந்தே சமூக வெளியினுள் செயற்பட்டவாறே இருக்கிறது இந்த உத்தி. மதம் குடும்பம் சாதி போன்ற அமைப்புகளை இவ்வுத்திக்கான நிகழ்த்துவெளியாகப் பயன்படுத்திக்கொள்கிறது அதிகாரம். கலாச்சார சீர்திருத்தச் சட்டவாக்கங்கள் அறவியல் மதிப்பீடுகள் என்பனவும் இந்த வகையினவே. முன்முடிவுகளினதும் நேர்கோட்டு ஆய்வுகளினதும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இவையனைத்துமே தமது செயற்பாடுகளின் மூலம் தனி மனித இருப்பை மிக மோசமாகச் சிதைக்கின்றன. இவ்வாறு சிதைக்கப்பட்ட தனி மனித இருப்பு வர்க்கம் சாராததாக – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியாக மாறுகிறது.
கருத்துருவாக்க கருத்தியல் ஆதிக்க நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் எந்தவொரு சுயாதீனமான இருப்பும் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாது. நிறுவனங்களின் மதிப்பீடுகளுடன் தன்னை இனங்கண்டு கொள்ள முடியாத தனி மனித இருப்பு இயல்பாகவே பிறழ்கிறது. பிறழ்ந்த இருப்பின் நிலவுகை தடை செய்யப்பட்டு அதன் இருப்புக் குறித்த தடயம் மறைக்கப்படுகிறது. அதிகார மையங்களின் கைக்கு மீறிய இருப்புகள் பல்வேறுவிதமாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. இதன் மூலம் அவற்றின் சமூகப் பெறுமதி இல்லாதொழிக்கப்படுகிறது: அவற்றின் சமூக இயங்கு வெளி குறுக்கப்படுகிறது. இதன் மூலம் தமது ஸ்தாபன அறத்தை நிலைநாட்டிக் கொள்வதாக அதிகார மையங்கள் எண்ணங் கொள்கின்றன. இது தான் இலங்கையின் முக்கிய அதிகார நிறுவனங்கள் இரண்டினதும் பொது இயங்கியல். இவை இரண்டினதும் தணிக்கை விதிகளை மீறி உருவாகும் பிரதி – அதிகாரத்தின் இயங்கியலை ஆராய்வதற்காகவேனும் அந்நியமாதலுக்கு உட்பட்டவனின் கதையாடலை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறது. இந்த அடிப்படையிலேயே ‘ம்'மில் பிறழ்வடைந்த இருப்பு கதையாடலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்தும் வலிமையுடைய கலக மொழி அந்த இருப்புகளிடம் மாத்திரமே உண்டு.
அதிகார மையக் கருத்துருவங்களும் எதிர்க்கலாச்சாரக் கருத்துருவங்களும் வேறுபட்டவையாகவே இருந்தாலும் அவை பிரிதித்தறிய முடியா உள் இணைப்புக்களைக் கொண்டிருப்பதை எளிதில் இனங்காணலாம். அவ்வாறான உள் இணைப்புக்களில் ஒன்றே அதிகாரத்தின் இயங்கியல் மாற்று இயங்கியலை தோற்றுவிக்கும் செயற்பாடு. இக்கருத்தின் அடிப்படையில் வர்க்கம் சாராத – மனிதத்தின் சிதைவுற்ற பகுதியை உருவாக்குவதும் அதிகார நிறுவனமே என்பது புலப்படும். ’ம்'மின் கதை வெளியில் இதற்கான பல உதாரணங்களைக் காண முடியும்.
எதிர்ச்செல்லாடல் என்பதே அபூர்வமான நிகழ்வாகிவிட்ட இச் சூழலில் மனநோயாளிகள் என்று அறியப்படுவோரும் தன்பால்புணர்ச்சியாளர்களும் விபச்சாரிகளும் மறுத்தோடிகள் ஆகி சனாதனக் கருத்துருவங்கள் ஆதிக்க நிலையடைவதை உக்கிரமாகக் கேள்விக்குட்படுத்துகின்றனர். அதிகாரத்தின் அசிங்கமான இயங்கியலை எதிர்க்க நினைத்தால் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட சிதைவுகளை முன்வைப்பது தான் ஒரே வழி. அதிகாரம் முன்வைக்கும் அனைத்துக் கற்பிதங்களையும் நேசகுமாரன் என்ற சிதைவை முன்வைப்பதன் மூலம் தகர்க்கிறது ‘ம்.'
(
நன்றி: முரண்வெளி
0 கருத்துக்கள்:
Post a Comment