Saturday, December 13, 2008

மரங்கள்

கொலை செய்யப்பட்ட
உன்னுடைய ரத்தம்
என் முலைகளில் வடிய
நான் கொலை நடந்த இடத்தை
மறந்து செல்வேன்
ஓர் நாயென
- தாரில் காய்ந்திருக்குமுன் குருதியை -
முகர திரியும் ஆழ் மனத்துடன்

கைகள் நிர்க்கதியில் பிறழ்வினைக் கடக்கிற
வழிகளைத் தேடி அலைய
யன்னலுக்கு வெளியில்
நடந்துபோற தூரத்தே, வீழ்ச்சி

வீடு
தன்னுள் ஒடுங்குதலை பழக்கவும்;
குடும்பம்
பழக்கத்தை நீட்சிப்பதையும் போல்
மரணத்தை பழக்கும் சூழல்;
உணர்ச்சி மரக்குது ஒவ்வொன்றாய்

கண்ணே
தார் நிலத்தில் உனது குருதி
தன் மணத்தினை இழந்தவாறு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நாளும்
பழகிப் போதலை
மனுச மறதியை
அறிவித்தவாறு.

என் ஜோனி அடைத்துக் கொண்டது
அதனுதடுகள்
பிறப்பின் இன்பச் சொற்களை மறந்தன

உணர்ச்சிகள் செத்து
நாங்கள் எழுவோம்,
மரங்களாக
எங்கள் பிள்ளைகளின் பிணங்களின் மேல்
(
(
செப் 2008

Thursday, November 27, 2008

சிறுவம்


பதுங்கு குழிக்குள் (INSIDE the bunker);
வன்னி; ஈழம்..

"சிறைப்பட்டிருத்தல்"

ரவில சின்னச் சத்தங் கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கியிடும். இப்ப இருக்கிற நிலமையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம்.ஆர்கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியா ஏதோ ஒரு கட்டத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சிடுவனோ? ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கம் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக் குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான்! எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப் பட்டுத்தான் சொல்லுவ "எண்பத்தேழாமா ண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்த னாங்கள். அவங்களால எந்தக்கரச்சலுமில்ல. அவங்கள் தங்கடபாடு நாங்க எங்கடபாடு' அம்மா இஞ்சவாணை! அப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது? ஆறுவயதும் முடியேல்ல. சின்னப் பெட்டை. பெரிசாத் தோற்றமில்ல. இப்ப உன்ர பிள்ளைக்கு என்னவயது? இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம்- மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரி இல்ல இப்ப இருக்கிற இவங்கள் - பாக்கிற பார்வையிலயே பிடிச்சுத் திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ர பார்வையில இருந்து தப்பேலுமே?.. 'ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு' எண்டு சொல்லுற மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள்.

இவங்களைக் கடந்து சைக்கிளில போகேக்க நெஞ்சு பக்பக்கெண்டிருக்கும். ஏதாவது காது கூசிற மாதிரி என்ர அவையவங்களைக் குறிச்சுக் கொச்சைத் தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வச்சிருக்கிறாங்கள். நான் செவிடு மாதிரி குனிஞ்சதலை நிமிராமல் போக வேண்டியதுதான். இதைத்தவிர பாதுகாப்பான வேற வழியேதும் இருக்கோ?! அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே? சொன்னாலும் அவையென்ன செய்யிறது? இவங்கட கையில படைக்கலங்கள் இருக்கு எதுகும் செய்வாங்கள். அதால என்னநடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான். கெம்பஸ்பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாச மாத்தான் பாப்பாங்கள், ஏதோ நாங்கள் வெடி பொருட்களை கொண்டு திரியிறம் என்கிற மாதிரி. லெக்சர்சுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டு தனியாப் போறத நினைச்சால்பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூமில இருந்து கூப்பிடு தூரம்தான் இவங்கடை முகாமிருக்கு. எப்பிடியும் அதைத்தாண்டித் தான் போகவேண்டியிருக்கு. உட்பாதையளெண்டு எதுகுமில்ல. நானும் சசியும் சேர்ந்துதான் லெக்ர்சுக்குப் போறம். நாங்கள் போகேக்க அவங்கள் காத்து நிண்டு சீக்காயடிப்பாங்கள். அல்லாட்டி ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுறாங்கள். நாங்கள் குனிஞ்சதலை நிமிராமல்தான் போய்வாறம். சசி றூமில நிக்காத நாள்ள நான் லெக்சர்சுக்குப் போகன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி ரோட்டால சைக்கிள்ள போகேக்க ஒரு மயானத்துக் குள்ளால போற மாதிரிக் கிடக்கு. முந்தியெண்டா ரோட் கலகலப்பாயிருக்கும் எத்தினை வாகனம் போய்வரும். புதிசு புதிசாய் கடையள் திறந்து இரவு பகலாய் ஓயாமல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இப்பபாத்தால் எல்லாக் கடையளும்; அநேகமாப் பூட்டியிருக்கு, ஒண்டுரண்டு சைக்கிள் திருத்திற கடையளத் தவிர. இவங்கட வாகனங்கள் தான் வலுவேகமாய்ப் போய்வருகுது.

இப்ப கொஞ்ச நாளா ஒருவழமை என்னெண்டா இவங்கட வாகனத் தொடரணி போய்வாறதுக்காக ரோட்டில சனங்களை மறிச்சு வைக்கிறது. மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் ரோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில ஒருத்தன் விசில்ஊதுவான். அதுக்குப்பிறகு ஆரும் அசையேலாது நிண்ட இடத்தில நிக்க வேண்டியது தான். சிலநேரம் ஒரு மணித்தியாலத்திற்கு மேல நிற்கவேண்டி வரும். இவங்கட வாகனத்தொடரணி போய் முடிஞ்சாப் போலதான் சனம் போகலாம். இதனால நானும் சசியும் கன லெக்சேர்ஸைத் தவற விட்டிருப்பம். என்ன செய்யிறது? எது நடந்தாலும் பேசாமலிருக்க வேண்டியது தான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்ல. ஏதோ செத்தவீட்டுக்கு துக்கம் விசாரிக்கப்போய்வாற மாதிரியிருக்கு.லெக்சரர்மார் தொடக்கம் பொடியள் பெட்டயள், எண்டு எல்லாரின்ர முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து..... இப்படியே காலங் கழியுது. சிலநேரம் சசி வடமராட்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான் தான் தனியா இருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு லைட்டை நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பாத்து 'பிள்ளை கெதியாலைற் ஓவ் பண்ணிப் போட்டுப் படும். படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியும் நான் படுக்கப் போறன்'எண்டிட்டுப் போகிடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத்தொடங்கியிடும். அன்ரிக்கென்ன கவலை. வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள்
மூண்டும் வெளிநாட்டில. புருஷன்காரன்ர பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ள எங்கட வாடைக்காசும். அவ படுத்தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை? இது நான் தனிய றூமுக்குள்ள முடங்கின படியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள் விழுங்கின அறைக்குள்ள புழுங்கி அவிய கண்ணோடு கண் மூடாமல் பயந்து செத்தொண்டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடமாடுற மாதிரி இருக்கும். நாயள் வலு மோசமாக் குலைக்கும்.

முத்தத்துப் பிலா உதிர்க்கிற சருகுகள் நொருங்கிற மாதிரியும் சத்தம் கேட்கும். இண்டைக்கு நான் துலையப் போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேட்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் தண்ணி இல்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்குப் பாதகமாக நீண்டு கொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலாமரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிய பூனை, ரீய்ய்ய் எண்ட சத்தத்தோட தொடர்ந்திரைய நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொணந்து ஓட்டுக்கு மேல விழுத்தியிட்டு படக் படக் கெண்டு செட்டையடிச்சொண்டு போற வெளவால் - கிடக்கிறதுக்கிதமா முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின் செல்லப் பிராணி 'ரொமி' நாய் - எல்லாம் எளிய மூதேசியள். திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனத்தைக் கூட்டி என்னை வெருட்டி சாக்காட்டிக் கொண்டிருக்குங்கள்.

ஒரு கோழித் தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில் கெட்ட கனாக்களும் வரும். கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரி பிரேத அறைக்குள்ள கிடக்கிற மாதிரி இருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேட்கும். என்ர உடம்பு தன்பாட்டில விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வாகனங்கள் வீட்டை நோக்கி வாறமாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். ஐசியைப்பாத்திட்டு 'நீ வன்னியில இருந்தா வந்தனி? உன்னில எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா!.' என்பாங்கள். போகவேண்டியது தான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில நியூஸ் வரும். என்னைக் காணேல்லையெண்டு.

வரிக்கு வரி கடிதத்தில பிள்ளை கவனம்! பிள்ளைகவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப் போவா!. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ? அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே! சசி!. உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப்போறாள். நடக்கப் போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ரை அம்மாவோட நிம்மதியா உறங்கிக்கொண்டிருக்கிறாய்!. எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு. நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன்.பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்னநடக்குமோ? எண்டு மனந்தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா? எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்த அறிகுறியும் தென்படாமலிருக்கு. ஹர்த்தால், கடையடைப்பு நாள்களில பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்கவேண்டியிருக்கும்.

உடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந்தரையில மல்லாந்து கிடக்க வேண்டியது தான். எதும் நோட்சை எடத்துப் படிக்கிறதும் ஏலாது. மனதில எப்பிடிப்பதியும்? கண்கள் எழுத்துகளில தாவிக் கொண்டிருக்க மனதில பயந்தருகிற காட்சியள் ஓடிக்கொண்டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியால மறைச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிற அவங்கட உருவங்கள் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும், சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பாங்கள். சனங்கள் எல்லாம் அவங்களால் அடிச்சு நொருக்கப் படவும், சட்டுக்கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள். கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியந் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர்செத்திட்டாங்கள். பலாலிறோட்டால வந்த ஒருபஸ்சை மறிச்சு இளந்தாரியள இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபிடிச்ச நாயள்மாதிரி மாறிமாறி அடிச்சுத் துவைச்சுக் கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதல் முதலா அவங்கள் அடிச்சுத் துவைக்கிறதைப் பாத்திருக்கிறன்.

இப்படித்தான் என்னையும்சசியையும் போல பெட்டையள் தனியப் போய் அகப்பட்டால் சட்டையளக் கீலங் கீலமாக் கிழிச்சு வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச்சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஒருமாதிரி தப்பித்தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவுங்கள் எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய் சட்டையளக் கிழிச்செறிஞ்சிட்டு சின்னா பின்னப்படுத்திறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கையில குழறியிட்டன். அடுத்த நாள் 'சசி என்னடி இரவிரவாகக் கத்திக் கொண்டிருந்தாய்' எண்டு விழுந்து விழுந்து சிரிச்சாள். எனக்குஉண்மையில கோபந்தான் வந்தது. 'பேய்ச்சி' இன்னும் நிலமை விளங்காமல் செல்லங்கொட்டுறாள் என்டு.

இவள மாதிரித்தான் இங்கை கனபெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்ல. நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருது. இனிமேல் பெண்ணாப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம்? எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வியொண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்குபோர்க்க எங்கடை மயிரைக்கத் திரிக்கலாம். அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களைக் கொல்லலாம். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையைக் குனிஞ்சுகொண்டு திரிவம். அவ்வளவுதான். நான்அடிக்கடி நினைப்பன் இந்த கம்பஸ் படிப்பைவிட்டுட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகுமூண்டு வருசமாக் கனக்கக் காசுசெலவழிச்சாச்சு. இன்னும் ஒருவருசங் கிடக்கு .பல்கலைக்கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத் தான் வாறன். என்னசெய்யிறது. எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பிளையளுக்குத் தான்ஆபத்து காத்திருக்கும். ஆக்கிரமிக்கிறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிற தெல்லாம் நாங்கள் தான். அவங்கள மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப் போட்டுப் போவாங்கள்.

பேப்பருகளில பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெருவிப்பினம். மருத்துவ அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பாத்திருப்பினம். பாலுறுப்புகளில் நிகக்கீறலும் கடிகாயமும் அவதானிக்கப்பட்டிருக்கிறதா அறிக்கை வெளியாகும். வழக்குப்பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள்பொதுவாக இருக்காது. 'சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும்' எண்டொரு கூற்று வெளியாகும்.கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. பிறகு அவங்கள் பழையபடி தங்கட வேலையளத் தொடங்கியிருப்பாங்கள் காலப்போக்கில அறிக்கை வெளியிட விரும்புகிறசிலர் எழுதுவினம் 'ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில இப்படி நடக்கத்தான் செய்யும்.

கொங்கோவைப் பாருங்கோ, ஈராக்கைப்பாருங்கோ, இதெல்லாம் தவிர்க்கேலாது' எண்டுகனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டுசெம்மறி யாடுகளாகத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான். என்னைப் போல பெட்டையளில அக்கறையுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவிலயெண்டாலும் வரோணும். வந்தால் நான்கேட்கிற வரம் இதுதான். எங்களுக்கு மேல் உண்மையில அக்கறையுள்ள கடவுளா நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கிவிடும். இல்லாட்டில் பால்குடிக்குழந்தையள் ஆக்கிவிடும். உம்மில நாங்கள் விசுவாசமானவர்களாக இருப்பம். இதுகும் முடியாட்டில் எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங் கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்கு செத்துக்கொண்டிருக்கிறது? கடவுளே கருணைகாட்டும்.'

  • கார்த்திகா பாலசுந்தரம் (கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் ) ஞானம் - டிசம்பர் 2006: நவம்பர் 2008, நன்றி: ஊடறு

Thursday, October 2, 2008

அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.

ள்களற்ற நகரத்திலிருந்த
ஒரே ஒரு தொலைபேசியில்
இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய்
கூரை கழற்றப்பட்ட
மண்சுவரிலிருந்த
நாட்காட்டியும் கடிகாரமும்
புதைந்து கிடக்கிறது.

பூவரச மரத்தின் கீழ்
உனது கடைசி நம்பிக்கை
தீர்ந்து கொண்டிருக்கிறது.

எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும்
கைவிடப்பட்ட படலைகளிலும்
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.

உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும்
கேட்க முடியவில்லை
ஐ.நா.வில் ஜனாதிபதியின் தமிழ் உரையில்
உனது மொழி
நசிபட்டுக்கொண்டிருந்தது
அழுகையின் பல ஒலிகளும்
அலைச்சலின் பல நடைபாதைகளும்
சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட
தலைகள் அசைந்து கொண்டிருந்தன.

கைவிட்டுச்சென்ற
கோழியும் குஞ்சுகளும் இறந்து கிடக்க
வெறும் தடிகளில்
தலைகீழாய் தூங்கும் வெளவால்கள்
அழுதபடியிருந்தன.

நேற்றோடு எல்லோரும்
நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

ஐ.நா.வின் உணவு வண்டியை
துரத்திச் சென்ற சிறுவனின் பசி
ஓமந்தை சோதனைச்சாவடியில்
தடுத்து வைக்கப்படுகையில்
குண்டைபதுக்கிய அமெரிக்கன் மாப்பையில்
உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.

வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல
பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்று நள்ளிரவோடு
வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய்
அறிவிக்கப்படுகையில்
மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
_______________________________
01.10.2008இரவு8.00
தீபச்செல்வன்

Monday, September 22, 2008

----- மச்சாங்



போர் நடக்குது.
நீ இப்ப இந்தியாவில.
'இந்திரஞ் சித்தப்பாட மகனுக்கும்
வயசு வந்திற்று. இனி விட மாட்டாங்கள்'
எண்டுறாய்.
'அவங்களுக்கு' வேலை செய்யிறாய்
(எண்டு கேள்வி!)
பெயர்கள சேகரிச்சு
கனடாக்கு ஃபக்ஸ் அடிக்க
அங்க இருந்து
ஃபக்ஸ் 'அவங்களுக்கு'ப் போக
தலைகள் மறைவதாய்
உன்ர தகவல்கள் புண்ணியத்தில்
******* பொலிஸ்காரர் 3 பேரையும்
விசயம் வெளிய தெரிய வராமப் 'போட்ட'தாய்
ஊர்ச்சனம் கதைக்குது.
(இப்பிடிக் கன பெடியள
இதுக்கண்டே பிடிச்சு அனுப்பீருக்கிறாங்களாம்)
"வந்த வேலை முடிஞ்சுது.. வரச் சொல்லுறாங்கள்
இனியென்ன, போக வேண்டியதுதான்"
என்கிறாய்.
முதற்காதலையும் பேரன்பையும்
எதிர்காலமற்ற
என்றென்றைக்குமான பிரியங்களையும்
அள்ளியள்ளிப் பரிசளித்த
பிரத்தியேக மச்சாங்களில் ஒருத்தனில்ல நீ.
நம் பருவங்களைக் கிளர்த்திய பாடல்களை
தணிக்கையற்றும் மின் தடையற்றும்
றேடியோக்கள் அலறிய
அமைதியைப் பிரகடனப்படுத்திய அவ் ஆண்டு
விட்டேத்தியாய்
ஊரில் வந்திறங்கிய என்னை
'மற்றப் பெண்கள் போலில்லாமல் இருப்பதாய்'
முறையிட்டு
'எங்கட ரவுண் சந்தியில நிண்டு பார்
என்ன ஸ்டைலில பெட்டையள் வருவாளள்'
எண்டு ஒப்பிட்டு
உன்னில ஒரு 'ஐடியா' 'போர்ம்' ஆகாத என்ன
நேரங் கிடைக்கேக்க சுத்தி வந்த.
ஊர விட்டுப் போகேக்க
பஸ்ஸில 'ஏறினாப் பிறவு' படிக்கச் சொல்லி
கடிதம் தந்த.
போற இடத்தில 'றேடியோ' கேக்கச் சொல்லி,
அதில சோகப் பாடல் 'கேட்டாலும் கேப்பன்' எண்ட.
அதுக்கடுத்-தடுத்-த வருசம்
வந்த
என்ர சகோதரியைப் பிடிச்சுப் போக
என்னிலும்
ஒரு வயது மூத்தவனான நீ - படவா,
இப்ப என்னை "அக்கா" என்கிறாய்!
இதெல்லாம் விசரக் கிழப்புது தான்;
நீ பிரத்தியேகமான மச்சானில்லை எனிலும்!
அத்தோட,
அறுவானே!
12-13(?) வயதில கையால அடிச்சிற்று
உன்ர விந்துக்கள
அங்கால வந்த இன்னொரு மச்சாளில
விசிறி சிரிச்ச பரதேசிப் பயல் வேற.
போனில லண்டன் மாமா
'அவன பிரான்சுக்கு எடுத்து விடுவமா?'
எனும் போதோ............
"ஐய்யோ.. அது நடந்திரோணும்,
அவன் லூசன் - எண்டாலும்
கடல்லையோ எங்கையோ
காணாமப் போகாம
சந்தோசமா இருக்கோணும்" என்கிறது மனசு.
மச்சாங்,
நீ பிரான்ஸிலையோ எங்கையோ
உயிரோட இருக்கணும்டா..



september 2008
photos: oshan fernando
(மட்டக்களப்பு பேச்சுவழக்கில் எழுதப்பட்ட
சக்கரவர்த்தியின் "எங்க மேனே போயிரிக்காய்"
கவிதையின் மனப்பதிவுகளோடு)

Wednesday, August 20, 2008

துண்டிக்கப்பட்ட சொற்கள்


01

தோல்வியின் வர்ணிப்பு நிரம்பிய
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்குக் கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய்க் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.

______________________________
தீபச்செல்வன்
நன்றி: தீபம்.இணையம்
photo

Monday, July 7, 2008

சமாதானத்தின் முகம்...


Potrait of a girl who looking Up (Monaragala, சிறீலங்கா)

Thursday, June 5, 2008

சுவர்கள். . . . . . .


இடி அல்லது இடிப்போம்..

ஆதவன் தீட்சண்யா


நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’


(புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)

- ஆதவன் தீட்சண்யா (visaiaadhavan@yahoo.co.in)
நன்றி: கீற்று இணையம்

Saturday, May 31, 2008

வாழ்வும் வீழ்வும்










மே 2008...

Wednesday, April 23, 2008

இசையை மட்டும் நிறுத்தாதே.

க.வாசுதேவன்.


1.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்
இன்று இது எம் இறுதி இரவு
சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்
நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்
பயணித்து விடுவேன்.

பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து
விழிக்கும் வரையும்
மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத
இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்

இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்
கதையொன்று சொல்
காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்
சத்தத்தைச் சற்று அதிகமாக்கிவிடு

2.

கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
புறப்பட்டுச் சென்றபின்
கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்
விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்
போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை
விட்டகன்றுவீடு திரும்பினார்கள்.


சமுத்திரங்கள் எங்கும்
போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
போர்த்துககீசப் பெண்கள்
'ஃபதோ' இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.

காதலும் பாசமும் காமமும்
கரைந்து போகும் சோகம் பிறக்கும்
இசையிலேயே அவர்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

இதுதான் அவ்விசை.
லிஸ்பொண் நகரத்துக் கோடைகால
நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி
ஒலித்துக்கொண்டேயிக்கும் 'ஃபதோ'.

மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற
மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.
மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்
மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.

ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருந்தது.
ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருக்கிறது.
காற்றசையா நடுநிசிகளில்
பட்டமரங்களின் கிளைகளில்
படுத்துறங்கிக்கொண்டிருக்கிறது
அந்த ஓலம்.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


3.

உங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்
எங்களிடமும் வந்தார்கள்.
தாயையும் காதலியையும் மனைவியையும்
கதறவிட்டு வந்தவர்கள்
கைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்
எம்மிடமும் வந்தார்கள்.

கொள்ளையிட வந்தார்கள்.
கொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.
கிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.
உங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற
பாதையெங்கும் ஓலமொலிக்கச் சென்றார்கள்.

நம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்
பின்னரும் யார் யாரோ வந்தார்கள்
இருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.
வெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்
அவர்களுடன் கூடவே வந்தன
அடிமைத்தளைக்குள் நாம் அகப்பட்டுச்
சீர் குலைந்தோம்.

அமர்ந்தவர்கள் போனார்கள்
அவரெமக்கிட்ட அடிமை விலங்கையும்
அகற்றாதே போனார்கள்
அதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்

பின்னர் நாம் அலைக்கப்பட்டோம்
பின்னர் நாம் கலைக்கப்பட்டோம
அல்லது தப்பியோடினோம்
எதனிடமிருந்து தப்பியோடியபோதும்
எம்மிடமிருந்து எப்போதும் தப்பியோடமுடியாது
அகப்பட்டுக்கொண்டோம்.

தாயைத் தந்தையை
தன்னவர்களையெலாம் கைவிட்டு
எமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்
எம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து
இன்னமும் எம் எல்லைகளுக்குள்
வந்து கொண்டேயுள்ளார்கள்.
அவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.

எம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்
அமிழ்வதையும் உணராது
உயிர் கொடுத்தும் உயிர் குடிக்க
அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஓலமெங்கும் நிறைகிறது.

ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.
ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

கணவர்களும் மகன்களும் காதலன்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
அழுதிருந்த போர்த்துக்கீசப்பெண்களின்
ஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
காலம் சுமந்து வந்த சோகம் வழியும்
ஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை
மேலும் அதிகமாக்கு

திருமணமாகிய மறுதினமே
கணவன் கடலோடியபின் கரையில் நின்ற
போர்த்துக்கீசப் பெண்ணின் மனம்போல்
கனதியாய் கிடக்கிறது இந்த இரவு.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


விடியும் வரையும்
அந்த இசையை மட்டும் நிறுத்தாதே.


07.12.2007.

ஃபதோ - Fado : போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.

அந்த இசையை கேட்பதற்கு..

நன்றி: அப்பால் தமிழ்

Friday, March 14, 2008

மீளத் தலைதூக்கும் பயங்கரம்:

இலங்கையில் 'காணாமல்போதல்கள்'
மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு


[human rights watch]
சாராம்சம்

லங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே 2006 நடுப்பகுதியிலிருந்து மீண்டும் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்திருக்கும் நிலைமையானது, இலங்கையில் கடந்த காலத்தில் மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் மற்றும் "காணாமல் போதல்கள்" நடந்தேறிய மறக்க முடியாததும் அச்சம் மிகுந்ததுமான சூழ்நிலைமையையே மீளவும் நினைவுக்கு கொண்டு வருகின்றது. 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்ட மோதல் தவிர்ப்பானது ஏற்கனவே உத்தியோகப் பற்றற்ற விதத்தில் முறிவடைந்திருந்த நிலையில், 2008 ஜனவரியில் அது உத்தியோக பூர்வமாக செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலைமையில் எதிர்வரும் காலங்களில் ஆயுத மோதல்கள் மிகவும் மோசமடைவதற்கான வாய்புக்களே அதிகமுண்டு. இதுவரை காணாமற் போய் எந்தவித தகவலும் தெரியாதிருக்கும் நபர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன என்பதைக் கண்டறிவது தொடர்பாகவும் அதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பாகவும் இலங்கை அரசாங்கமானது மிகவும் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காவிட்டால் மீண்டும் 2008ம் ஆண்டிலும் பாரிய அளவிலான "காணாமல் போதல்கள்" நிகழ்வதையே காணக்கூடியதாக இருக்கும்.
பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து நூற்றுக்கணக்கில் நடைபெற்றுள்ளமையானது உலகில் ஆட்கடத்தல் சம்பவங்கள் மிக அதிகளவில் நடைபெறும் நாடுகளின் பெயர்பட்டியலில் இலங்கையையும் இட்டுள்ளது. இத்தகைய "காணமால் போதல்களினால்" முக்கியமாக பாதிக்ககப்பட்டிருப்பவர்கள் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே. இவர்களில் அநேகர் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த மோதல்கள் நிகழும் வடக்கு கிழக்குப் பிரதேசத்திலிருந்து மட்டுமன்றி தலைநகர் கொழும்பிலிருந்தும் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்கள் முறையான சட்ட நடவடிக்கைக் கூடாக கொண்டு செல்லப்படாமல் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்படுவதை நியாயப்படுத்திவிட முடியாது. இவர்களில் அநேகமானோர் இறந்து விட்டதாகவே அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் அதற்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது அதன் மோசமான இயலாமையையே வெளிக்காட்டி இருக்கின்றது. கடத்தப்பட்ட அல்லது "காணாமல் போன" தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தம் கடமையைச் செய்வதில் தவறியுள்ளனர் என்றே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் நேர் காணப்பட்ட பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தவறின் விலை மிக அதிகமானதாகும். இதனை மிகக் கொடூரமாக பறிக்கப்பட்ட உயிர்களினால் மட்டுமன்றி "காணாமல் போன" தமது அன்பிற்குரியவர்களுக்கு நேர்ந்த கதியென்ன? என என்றுமே அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் தவித்தபடி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் மற்றும் மனைவிமார்கள் படும் மன அவலத்தினாலும் கூட அளவிட முடியாததாகும். எந்த விதத்திலும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத வகையில் இத்தகைய கொடூர சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதால், அச்சமும் நிட்சயமற்ற சூழ்நிலைகளுமே இச் சமூகங்களினால் பெரிதும் உணரப்படுகின்றன.
2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. "காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவதுடன், நடைமுறையில் உண்மையான குற்றவாளிகள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு இச்சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் திரட்டும் பணியில் மிக சொற்ப அளவிலேயே அது செயற்படுகிறது. இந்த நிலைமை தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்கள் எவ்வாறு பயனுறுதிமிக்க வகையில் இவ்விடயத்தில் தமது பிரதிபலிப்பைக் காட்ட வேண்டுமென்பது தொடர்பான விசேட பரிந்துரைகளையும் இந்த அறிக்கை அதன் முடிவில் கொண்டுள்ளது. இவ்வறிக்கையின் பின்னிணைப்பு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் ஆவணப்படுத்தப்பட்ட 99 சம்பவங்களின் விரிவான தகவல்களை கொண்டுள்ளது. இலங்கை மனித உரிமை அமைப்புக்களால் ஆவணப்படுத்தப்பட்ட 498 சம்பவங்கள் தொடர்பான தகவல்களை http://hrw.org/reports/2008/srilanka0308/srilanka0308cases.pdf
என்னும் இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளமுடியும்.
0 0 0
சர்வதேச சட்டத்தின் கீழ் அரச சக்திகள் ஒரு நபரை தடுத்து வைத்து சட்டத்தின் பாதுகாப்பு அவருக்கு கிட்டாத வகையில் அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதை அல்லது அவர் எங்குள்ளார் என்பதை ஏற்க மறுக்கும் சூழ்நிலையிலேயே பலவந்தமான முறையில் காணமல் போதல்கள் நடைபெறுகின்றன.
இலங்கையில் "காணாமல் போதல்கள்" என்பது மிக நீண்டகாலமாக ஆயுத மோதல் செயற்பாட்டுடன் இணைந்தே நடைபெற்று வந்துள்ளது. 1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இடதுசாரி சிங்கள தேசியவாத அமைப்பான ஜனதா விமுத்தி பெரமுன மேற்கொண்ட குறுகியகால ஆனால் மிக வன்முறையான எழுச்சியின்போதும், தமிழ் தேசியவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் உள்@ர் யுத்தத்தின் போதும் ஏற்;பட்ட ஆயிரக்கணக்கான "காணாமல் போதல்களுக்கு" அரசாங்கப் படைகளே பொறுப்பு என்று நம்பப்படுகின்றது.
பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பது மோதலின் முக்கியமானதொரு குணாம்சமாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட எண்ணிக்கைகளின்படி 2005 டிசம்பர் மாதத்திற்கும் 2007 டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 1500 பேர்வரை "காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்படுகின்றது. இவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலருக்கு என்ன நடந்தது என்பது அறியப்படாமலேயே இருக்கிறது. இவர்களில் அநேகமானோர் "காணாமல் போயுள்ளனர்" அல்லது கடத்தப்பட்டுள்ளனர் என்பதாகவே சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) "காணாமல் போனவர்கள்" தொடர்பான தனது புள்ளிவிபரங்களை இன்னமும் வெளியிடவில்லை. ஆனால் 2006ம் ஆண்டில் 1000 சம்பவங்களும், 2007ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 300 சம்பவங்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்கு அறியக் கிடைத்துள்ளது.
மோதல்கள் நிகழும் பிரதேசமான வடக்கு கிழக்கிலேயே, குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலேயே "காணாமல் போதல்கள்" மிகக் கூடுதலாக நிகழ்ந்துள்ளன. கொழும்பிலும் பெருமளவிலான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக முறையிடப்பட்டுள்ளன.

யார் பொறுப்பு?

இலங்கையில் உள்ள அமைப்புக்களினாலும் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்களில் பெருந்தொகையானவற்றில் அரசாங்க பாதுகாப்பு படைகளான இராணுவம், கடற்படை அல்லது பொலீசாருக்கே தொடர்புகள் இருப்பதாக சாட்சியங்கள் காண்பிக்கின்றன. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை நாட்டில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் அவர்களின் கரங்களை பலப்படுத்தியிருப்பதோடு, நீண்டகாலமாகவே ஜே.வி.பி. மற்றும் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளின்போது சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகளான காணமல் போதல்கள் மற்றும் மொத்தமாகப் படுகொலை செய்வது போன்றவற்றிலுமே இராணுவம் தங்கியிருக்கின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஆவணப்படுத்திய பல சம்பவங்களில், "காணாமல் போன" தமது உறவினர்கள் எந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள், எந்த இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என அக்குடும்பத்தினர் மிகச் சரியாகவே அறிந்திருந்தார்கள். சில வேளைகளில் அவர்களை கூட்டிச் சென்ற இராணுவ வாகனங்களின் இலக்கத் தகடுகளைக்கூட குடும்பத்தினர் அறிந்திருந்தார்கள்.
ஏனைய பல சம்பவங்களில், ஆயுதம் தரித்த பத்துப் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினர் அவர்களது வீடுகளுக்கு அருகிலுள்ள இராணுவ காவலரண்களில் இருந்தும் இராணுவ வீதிச் சோதனைச் சாவடியிலிருந்தும் அல்லது வேறு இராணுவ முகாம்களிலிருந்தும் வந்தே நபர்களைக் கூட்டிச் சென்றுள்ளனர். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இக்குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சிகளால் அடையாளம் காண முடியாவிட்டாலும் பெருந் தொகையான ஆயுததாரிகள் இராணுவத்தினருக்குத் தெரியாமல் ஊரடங்குச் சட்ட நேரங்களில் இப்படி சுதந்திரமாக உலாவ முடியாது என்பதால் இக்கடத்தல்களில் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருக்கின்றது என்றே அவர்கள் நம்புகின்றனர்.
நபர்கள் காணாமல் போவதற்கு முன்பாக சீருடை தரித்த பொலீசார், அதிலும் குறிப்பாக குற்றவியல் விசாரணைப் பிரிவைச் (CID) சேர்ந்தவர்களே தமது உறவினர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றே அநேகமான சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அந்த நபர்களை விசாரணைக்கு உட்படுத்தவே தாம் கொண்டு சென்றதாக பொலீசார் கூறுகின்றனர். ஆனால் அவர்களை எங்கே கொண்டு சென்றார்கள் என்பதையோ அல்லது கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்வதற்கு தேவையான ‘ரசீதையோ’ அவர்கள் கொடுப்பதில்லை. இந்த கைதுகளின் பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய எந்த விபரங்களையும் உறவினர்களால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை.
பாதுகாப்பு படையினர் இத்தகைய “காணாமல் போதல்” சம்பவங்களில் ஈடுபடுவதற்கு இலங்கையின் அவசரகாலச் சட்டமானது மிகவும் வாய்பாக இருப்பதோடு அவர்களுக்கு ஒட்டுமொத்தமான அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவதிலிருந்து தப்புவதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்குகின்றது. தற்போது அமுலில் இருக்கும் இரண்டு அவசரகாலச் சட்டங்களினதும் பல பிரிவுகள் ‘காணாமல் போதல்களுக்கு” மிகவும் ஊக்கமளிப்பனவாக அமைந்துள்ளன. ஒரு உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டின் பேரில்கூட ஒருவர் பிடியாணை (Arrest Warrant) இல்லாமல் கைது செய்யப்பட்டு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படலாம். உத்தியோகபூர்வமாக நபர்களைத் தடுத்து வைக்கும் இடங்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களின் உடல்களை எந்தவித மரண விசாரணையோ அதன் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படாமலோ பாதுகாப்புப் படையினரே அழித்து விடலாம். இத்தகைய விடயங்கள் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடைபெறுவதை தடை செய்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அரசாங்கப் பாதுகாப்பு படையினருடன் இணைந்தோ அல்லது தனியாகவோ இந்த கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்களில்” ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா குழுவினர் பிரதானமாக கிழக்கிலும், கொழும்பிலும் இயங்கி வருவதாகவே “காணாமல் போனவர்களின்” உறவினர்கள் பெரும்பாலும் தெரிவிக்கின்றனர். கண்ணால் கண்ட சாட்சிகளின்படி யாழ்ப்பாணத்தில் நடந்த பல கடத்தல்களில், நீண்டகாலமாக புலிகள் இயக்கத்தால் இலக்கு வைக்கப்பட்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) அங்கத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்விரண்டு குழுக்களும் இலங்கை அரசாங்கப் படையினருக்கு மிக நெருக்கமாக ஒத்தாசை வழங்கி வருகின்றன. புலிகள் இயக்கத்தினரின் ஆதரவாளாகள் என சந்தேகிக்கப்படுபவர்களை இனம் காணுவதற்கும் சிலவேளைகளில் கைது செய்வதற்கும் இலங்கை இராணுவத்தினரும் பொலீசாரும் அநேகமான சந்தர்பங்களில் தமிழ் பேசும் நபர்களையே பயன்படுத்துகின்றனர். அநேகமாக கருணா குழுவின் அல்லது ஈ.பி.டி.பி. யின் அங்கத்தவர்கள் பாவிக்கப்படுவதாகவே குற்றம் சாட்டப்படுகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிடம் முறையிடப்பட்டுள்ள பல சம்பவங்களின்போது, முதலில் இராணுவத்தினர் தமது வீடுகளுக்கு வந்து விசாரணைகளை நடத்திவிட்டுச் செல்லுகின்றனர். அதன் பின் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் தமிழ் பேசும் ஆயுததாரிகள் தமது வீடுகளுக்கு வந்து தமது உறவினர்களைக் கொண்டு சென்றதாகவே கூறப்பட்டுள்ளன. ஏனைய பல சந்தர்ப்பங்களில் கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் புலிகள் இயக்கத்துடன் பழி தீர்க்கும் பாணியில் தாமே சுதந்திரமாக செயற்படுவதுடன், பணம் பறிப்பதற்காக நபர்களைக் கடத்துவதிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவை தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பாராமுகமாகவே இருக்கின்றனர்.
புலிகள் இயக்கத்தினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடத்தல்களில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக மனித உரிமை குழுக்களிடமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைச் சபையிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் எண்ணிக்கையானது ஒப்பீட்டளவில் குறைவானதாகும். ஆனால் இது புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும் ஏனைய அமைப்புக்களும் வெளியிட்ட அறிக்கைகளுடன் ஒப்பிட்டு திருப்திப்படக்கூடிய நிலைமையல்ல. குறிப்பாக புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தும் குண்டுத் தாக்குதல்கள், பெருமளவிலான படுகொலைகள், சித்திரவதைகள், அரசியல் படுகொலைகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் திட்டமிட்ட அடிப்படையில் நடத்தப்படும் அடிப்படை சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறை மற்றும் ஏனைய மோசமான அத்துமீறல்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். புலிகளினால் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் அது அவர்களின் பிரதான உத்தியாக இல்லாதிருப்பதே. அவர்கள் தமக்கு எதிரானவர்களை பகிரங்கமாகக் கொல்லுவதையே விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் அது மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனாலாகும். அது மட்டுமன்றி புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல்கள் பற்றி முறையிடுவதனால் தமக்கு புலிகளினால் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பதாலும், கண்ணால் கண்ட சாட்சிகள் முறையிடுவதற்கு அஞ்சுவதாலும் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் பற்றி மிகக் குறைவாகவே அறிக்கையிடப்படுகின்றன.

குறி வைக்கப்படுபவர்கள் யார்?

இந்த “காணாமல் போதல்களுக்கு” யார் காரணமாயிருந்தாலும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் கூட குறி வைக்கப்பட்டனர். பெரும்பாலும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக, குறிப்பாக புலிகள் இயக்கத்தில் அங்கத்துவம் வகித்தோ அல்லது அதனுடன் தொடர்பு வைத்தோ இருக்கும் தனி நபர்களையே பாதுகாப்புப் படையினர் பிரதானமாக குறிவைக்கின்றனர். கணிசமான அளவு உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும்; பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட தமிழ் இளைஞர்களே பெரும்பாலும் குறிவைக்கப்படுகின்றனர். ஏனைய “காணாமல் போதல்” சம்பவங்களில் மதகுருமார்கள், ஆசிரியர்கள், மனிதநேய உதவிப் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்போர் கடத்தப்படுவதென்பது அவர்களை சாதாரண வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவது மட்டுமன்றி சமூகத்தில் ஏனையவர்களுக்கும் இதுவொரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது நடத்தப்பட்ட கைதுகளே பின்னர் பெரும்பாலான “காணாமல் போதல்களுக்கு” வழிவகுத்துள்ளன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளின்போது, ஒன்றில் இராணுவத்தினர் நபர்களைத் தடுத்துவைக்கின்றனர் அல்லது அவரது அடையாள ஆவணங்களைப் பறிமுதல் செய்து பின்னர் அவற்றை மீளப்பெறுவதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரும்படி கூறுகின்றனர். இந்த இரண்டு விதமான நிலைமைகளிலும் சில நபர்கள் திரும்பி வருதில்லை. அவ்வாறானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவர்களின் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றவையாகவே இருந்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இராணுவ சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னர் அல்லது சிலசமயம் ஒரு கிளைமோர் கண்ணி வெடித் தாக்குதல் அல்லது அது போன்ற பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பான வேறொரு சம்பவத்திற்குப் பின்னர் நபர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளின் போதான பல சந்தர்ப்பங்களிலேயே தனி நபர்கள் “காணாமல் போயுள்ளனர்”. யாழ்ப்பாணத்தில் நடந்த பல சம்பவங்களில், இக் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் தமிழ் உரையாடல், அவர்களின் தோற்றம், மற்றும் அவர்களின் வாகனங்கள் ஈ.பி.டி.பி முகாமிருக்கும் திசையை நோக்கிச் சென்றமை என்பவற்றை வைத்து ஈ.பி.டி.பி அங்கத்தவர்களே தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குடும்பத்தினர் நம்புகின்றனர்.
2006ம் ஆண்டு பிற்பகுதியிலும் 2007 முற்பகுதியிலும் கடும் மோதல்கள் காரணமாக புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு பெருந்தொகையான மக்கள் வெளியேறியபோது நடந்த “காணாமல் போதல்கள்”; தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிச் சேவையாளர்கள் ஆகியோரிடமிருந்து மிக நம்பத்தகுந்த அறிக்கைகள் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக்குக் கிடைத்துள்ளன. புலிகள் இயக்க அங்கத்தவர்கள் என சந்தேகிப்போரை இனங் காணுவதற்காக இடம்பெயர்ந்து வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுளையும் ஒவ்வொருவரையும், இராணுவத்தினரும் கருணா குழுவினரும் கடுமையாக பரிசோதனை செய்தே அனுமதித்தார்கள். அவ்வாறான பரிசோதனையின் போது தடுத்து வைக்கப்பட்ட பல தமிழ் இளைஞர்கள் பின்னர் “காணாமல் போன” பல சம்பவங்கள் நடந்துள்ளன.
தண்டனைகளில் இருந்து தப்பக் கூடியதாக இருக்கும் வாய்ப்பான சூழ்நிலையைத் தமக்கு சாதமாகப் பயன்படுத்தி பல குழுக்களும் பணயமாக பணம் பறிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதன் காரணமாக, 2006 பிற்பகுதியிலிருந்து பணயமாகப் பணம் பறிப்பதற்கான கடத்தல்களுக்கும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் ‘காணாமல் போதல்களுக்கும்”; இடையேயான வேறுபாடானது மிக அருகி வந்ததையே காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக கொழும்பு, மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை. திருகோணமலை மாவட்டங்களில் இந்த நிலைமையை காணக்கூடியதாக இருந்தது. சில கிரிமினல் குழுக்களும் இக் கடத்தல்கள் சிலவற்றின் பின்னால் இருப்பது தெரிய வந்தாலும், பொலீசார் பாராமுகமாக இருக்கையில், கருணா குழுவினரும் ஈ.பி.டி.பி யினரும் தமது இயக்கத்துக்கு பணம் சேர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமைக்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கின்றன.
தமது படையணிக்கு ஆள் சேர்ப்பதற்கென்று சிறார்கள் உட்பட பலரை கருணா குழுவினர் கடத்தியமை தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு முன்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அவ்வாறான சம்பவங்கள் பலவற்றின் போதும் தமது கணவன்மார்கள் அல்லது பிள்ளைகள் படையில் சேர்க்கப்படுவதற்காகத்தான் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதை குடும்பத்தினர் தெரிந்திருந்தும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுக்கு நேர்ந்த கதியென்ன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை.
தண்டிக்கப்படாத குற்றச் செயல்கள்

பாதிக்கப்பட்ட நபர் எங்கிருக்கிறார் அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்று அறியப்படும்வரை, “பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள்” என்னும் குற்றச் செயலானது தொடர்ந்து நடைபெறுகிறதென்றே கருதப்படல் வேண்டும். தமது அன்பிற்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, அல்லது இறந்து போனார்களா என்பது பற்றி அறிய முடியாமல் மாதக் கணக்கில், சிலவேளை வருடக் கணக்கில்கூட குடும்பத்தினர்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையானது இக்குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. “காணாமல் போனவர்களில்” சிலர் சித்திரவதை செய்யப்பட்டு அல்லது படுகொலை செய்யப்பட்ட அடையாளங்களுடன் பிணமாகக் மீளக் கண்டெடுக்கப்படுகின்றனர். இன்னும் சிலர் பொலீஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள் அல்லது வேறு வகையான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேறு சிலரோ எப்போதுமே காணாமல் போகாதவர்கள் போல் திரும்பி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு காலமும் திரும்பி வராமலே இருப்பதோடு அவர்கள் அனைவரும் நீதிக்கு புறம்பான வகையில் கொல்லப்பட்டு விட்டதாக அல்லது பாதுகாப்பில் இருக்கையில் வேறு வகைகளில் இறந்து விட்டதாகவே கருதப்படுகின்றனர்.
இலங்கையில் இத்தகைய “காணாமல் போதல்களுக்கு” பேருதவியாக இருக்கும் மிக முக்கியமான காரணியாதெனில், பாதுகாப்புப் படையினரும் அரசாங்க ஆதரவு ஆயுதக் குழுக்களும், அவர்கள் செய்யும் குற்றச் செயல்களுக்காக தண்டனை பெறுவதிலிருந்து தப்புவதற்கு திட்டமிட்ட வகையில் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புக்களாகும்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக பொலீசார் சரியான விசாரணைகளை இன்னமும் மேற்கொள்ளாதிருப்பதோடு அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் பற்றி குடும்பத்தினருக்கு தொடர்ச்சியாக அறியத் தருவதுமில்லை. கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உகந்த சரியான தகவல்கள் தமக்கு கிடைக்காமல் இருப்பதே இதற்குக் காரணமென பொலீசார் கூறுகின்றனர். ஆனால் இந்த அறிக்கையில் விபரமாக கூறப்பட்டிருப்பதைப்போல, சில வேளைகளில் தாங்கள் தகவல்களை பொலீசாருக்கு வழங்கும் போது ஆகக் குறைந்தது விசாரணைகளை அதிலிருந்தாவது அவர்கள் ஆரம்பிக்கலாம். குறிப்பாக கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குடும்பங்களினால் நம்பப்படும் வாகனங்களின் இலக்கத் தகட்டு விபரங்கள், கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்கள், இராணுவப் பிரிவின் விபரங்கள் என்பவற்றை அவர்கள் கொடுத்தாலும் பொலீசார் அவற்றிலிருந்து விசாரணைகளை ஆரம்பிப்பதில்லை.

நடந்த சம்பவங்களுக்கு பொறுப்புச் சொல்லுவது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலுள்ள எண்ணிக்கையைப் பார்க்கையில், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் எவ்வளவு குறைவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரிகின்றது. 2007 அக்டோபரில் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிற்கு வழங்கிய அறிக்கையில் 2005 – 2006ல் நிகழ்ததாகக் கூறப்படும், சரியாக சுட்டிக் காட்டப்படாத மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு வழக்குள் மாத்திரமே இன்னமும் பூர்த்தியாகாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் 2007ல் வவுனியாவில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்படாத எண்ணிக்கையான இராணுவத்தினருக்கு எதிராக அண்மையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 2006ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பாகவோ அல்லது கடத்தல்கள், “சட்டவிரோத தடுத்து வைப்புக்கள்” தொடர்பாகவோ வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகைகள் பற்றிய விபரங்கள் எதுவுமே அவ்வறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அண்மையில் நடந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 2007ம் யூன் மாதத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரி நிஷாந்த கஜநாயக்காவும் இன்னும் இரு பொலீசாரும் கைது செய்யப்பட்டது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இக்கைதுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகப் பரவலாக பிரச்சாரம் செய்ததோடு கடத்தல்கள் பற்றி தாம் சரியான நடவடிக்கை எடுப்பதாக நிரூபிக்க முனைந்ததுடன், கடத்தல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் உறுதியளித்தது. ஆனால் 2008 பெப்ரவரி மாதத்தில் இச்சந்தேக நபர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளனவா என்பது தெளிவற்றதாக உள்ளது.

அரசாங்கத்தின் பிரதிபலிப்பு

பலவந்தமான முறையில் “காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடும் முயற்சிகளை மேற்கொள்ளுவதை விடுத்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது தொடர்ச்சியாக பிரச்சினையின் தாற்பரியத்தை மிக குறைவாகவே மதிப்பிட்டு செயற்படுகின்றது. அது வெளியிட்ட பல அறிக்கைள், “காணாமல் போதல்”; என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும் அல்லது அவ்வாறு ஓரிரண்டு நடந்திருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பாளிகள் புலிகள் இயக்கப் போராளிகள் அல்லது சாதாரண கிரிமினல்கள் என்றே கூறுகின்றன. கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” தொடர்பான பிரச்சினையைக் கையாளுவதற்கென அரசாங்கம் பல செயலணிகளை ஆரம்பித்திருந்தாலும், அவை இச்சம்பவங்கள் தொடர்பாக பயனுறுதிமிக்க விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவசியமான சுதந்திரம், அதிகாரம், வளங்கள் ஆகிய திறன்களின்றியே காணப்படுகின்றன.
“காணாமல் போதல்கள்”; தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள செயலணிகளை அமைத்தல் மற்றும் அவை முறையாக செயற்படாமலிருத்தல் என்னும் விடயத்தில் இலங்கைக்கு நீண்டதொரு வரலாறு உண்டு. 1980 களிலும் 1990களிலும் நடந்த ஆயுத மோதல்களின்போது காணாமல் போனதாக நிரூபிக்கப்பட்ட 20,000 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கென 1990களில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கமானது நான்கு உத்தியோகபூர்வ ஆணைக்குழுக்களை அமைத்தது. மனித உரிமை அமைப்புக்களின் கணிப்பின்படி காணாமல் போனவர்களின் உண்மையான தொகை இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்காகும். இவ்வாணைக் குழுக்களின் விசாரணைகள் மூலம் 2000க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பான குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் அவர்களில் மிகச் சிலரே குற்றம் சாட்டப்பட்டனர். அதிலும் மிகச் சில கீழ் மட்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் மாத்திரமே தண்டிக்கப்பட்டனர். எதிர்காலத்தில் “காணாமல் போதல்கள்”; நிகழாமல் தடுக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டியவை எனக் கருதி இவ்வாணைக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட சட்ட ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான மீள்சீரமைப்புக்கள் எதுவுமே தொடர்ச்சியாக பதவிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கத்தாலும் அர்த்தபுஷ்டியுடன் அமுல் நடத்தப்படவில்லை.
2006 நடுப்பகுதியிலிருந்து அதிகரிக்கத் தொடங்கிய “காணாமல் போதல்கள்”; தொடர்பாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் அனைத்தும் கீழ் காணப்படும் பாணியிலேயே அமைந்திருந்தன. முதலாவதாக, ஏற்கனவே இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலீஸ் கமிஷன் என்பவற்றின் சுயாதீனத் தன்மை பற்றியது. இவற்றுக்கு ஆணையாளர்களை நியமிப்பது தொடர்பாக இருக்கும் அரசியலமைப்பு ரீதியிலான ஒழுங்குகளை மீறுகின்ற வகையில் ஜனாதிபதி அவற்றிற்கு நபர்களை நியமிப்பதற்கு தீர்மானித்ததன் மூலம் அவ்வாணைக்குழுக்களின் தராதரம் கணிசமானளவு கீழ்மைப்படுத்தப்பட்டது.
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கணக்கான “காணாமல் போதல்கள”; நிகழ்ந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கையில், அது இதுவரை காலமும் எந்தவொரு பகிரங்க அறிக்கையையும் வெளியிடாதது மாத்திரமல்ல, தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புள்ளிவிபரங்களைக் கூட வழங்க மறுத்ததுடன் பிரச்சினையின் தாற்பரியத்தையும் மிகக் குறைவாகவே கருதி வந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் இடையூறு செய்யும் நடத்தைகள், அரசாங்கம் போதிய ஒத்தாசை வழங்காமை என்பன நிலைமைகளைக் கண்காணித்து அவற்றைப் புலன் விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இருந்த அதிகாரங்களைக் கூட மிக மோசமாக செயலிழக்கச் செய்துவிட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டுத் திறனின்மையும் அதற்குள் அரசாங்கத்தின் தலையீடு அதிகரித்தமை காரணமாகவும், மனித உரிமை ஆணைக்குழுக்கள் மீது கட்டுப்படுத்தல்களைக் கொண்டுள்ள சர்வதேச அமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வெறும் “அவதானிப்பாளர்;” என்ற நிலைக்கு கீழ் நோக்கித் தரப்படுத்தியது.
இரண்டாவதாக, “காணாமல் போதல்கள்” மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக செயற்படுவதற்கு அரசாங்கம் ஒன்பது செயலணிகளை அமைத்திருந்தாலும், அவை அனைத்தையும் பற்றி தனது அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தாலும், இதுவரை காத்திரமான பெறுபேறுகள் எதையுமே அவை வழங்கவில்லை.
இச்செயலணிகள் அமைக்கப்பட்டமை தொடர்பாக அவ்வப்போது அரசாங்கம் அறிவிப்புக்களைச் செய்ததேயன்றி, அச்செயலணிகள் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆணைகள் என்ன, அவை நடத்திய விசாரணைகளின் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் எதையுமே வெளியிடவில்லை. தற்போதுள்ள செயலணிகளில் இருக்கும் குறைபாடுகளை நீக்குவது பற்றியோ அல்லது அவை இப்பிரச்சினையைக் கையாள தகுதியற்றவை என்பதால் தொடர்ந்து புதிய செயலணிகளை உருவாக்கப் போகின்றதா என்பது பற்றியோ அரசாங்கம் இதுவரை எதுவுமே கூறவில்லை.
பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் “காணாமல் போதல்கள்” தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் உரிய அதிகாரிகள் மிகவும் உதாசீனமாக நடந்து கொள்கையில், இச்சம்பவங்கள் தொடர்பாக தாங்கள் மிக அக்கறையுடன் இருப்பதாக காண்பிப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான பல செயலணிகளை உருவாக்கும் வேலையைச் செய்வதாக பல அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தின் தொடர்ச்சியான மந்தமான செயற்பாடே அரசாங்கம் பற்றிய இத்தகைய கருத்துக்கள் நிலவுவதற்கு வழிவகுத்துள்ளன.
புதிதாக எந்த விதமான “காணாமல் போதல்களும்” நிகழவில்லை எனவும் அத்தகைய அத்துமீறல்களில் பாதுகாப்புப் படையினரின் பங்கு சிறிதளவுகூட இல்லையெனவும் அரசாங்கத்தின் அதியுயர் மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருவதை பார்க்கும்போது, இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஏன் எந்த விதமான முன்னேற்றங்களுமின்றி தோல்வியடைந்துள்ளன என்பது பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காணாமல் போனவர்களில் அநேகமானோர் திரும்பி வந்து விட்டாhகள் என்றும், பெரும்பாலான காணாமல் போதல்கள் “தனிப்பட்ட கோபதாபங்களின் அடிப்படையில் நிகழுபவை” என்றும் நீதிபதி மஹாநாம திலகரத்தின வெளியட்ட கருத்தை மேற்சொன்ன விடயத்திற்கு மிகப் பொருத்தமானதாக காண்பிக்கலாம். ஆனால் இந்தக் கூற்றுக்களை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை.
“காணாமல் போதல்கள்;” என்று ஒரு பிரச்சினை இல்லையென்றும், அது அரசாங்கத்தின் நற்பெயருக்கு சேறு பூசுவதற்காக புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரமே என்றும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசாங்க அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் செயலகம் ((SCOPP) என்பன தொடர்ச்சியாக கூறிவருகின்றன. இவர்களின் கருத்துப்படி காணாமல் போன அநேகமானோர் ஒன்றில் மீளத் திரும்பி வந்துவிட்டனர், நாட்டை விட்டுச் சென்றுவிட்டனர், தம் மீது குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என அஞ்சி தலைமறைவாகி விட்டனர் அல்லது வெறுமனே தமது வீடுகளை விட்டுச் சென்றுவிட்டு, தாங்கள் எங்கிருக்கிறோமென தமது குடும்பங்களோடு தொடர்புகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் தமது இந்த வாதத்தை நியாயப்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆதாரங்களையும் இவர்கள் இதுவரை முன்வைக்கவில்லை.
ஆனால் இலங்கையில் சட்டத்தை நிலை நாட்டும் அதிகாரிகளான பொலீஸ் மா அதிபரும் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஊடகங்களும் மற்றும் பல மட்டுப்படுத்தல்களுடன் கூடியதாக அரசாங்க கமிஷன்கள் வெளியிட்ட பல அறிக்கைகளும் மேற்சொன்ன வாதங்களுடன் முரண்படுகின்றன. உண்மையில் “காணாமல் போதல்” என்று ஒரு பிரச்சினை இல்லாவிட்டால், அரசாங்கம் ஏன் இத்தனை விதமான செயலணிகளை நியமித்தது? என்கின்ற கேள்வியும் மேற்சொன்ன வாதத்திலிருந்து எழுகின்றது. “காணாமல் போதல்கள்” தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்திலிருந்து வரும் இத்தகைய மறுப்புக்களின் மூலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயத்தில் பாகாப்புப் படையினருக்கு எதிராக வரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பாரதூரமாக எடுத்துக் கொள்ளாது என்னும் சமிக்ஞையையே பாதுகாப்பு படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.

சர்வதேச பிரதிபலிப்புகள்

2006 நடுப்பகுதியிலிருந்தே, பலவந்தமான முறையில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழ்வதாக இலங்கை அரசாங்கத்தின பல முக்கிய சர்வதேச பங்காளர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் பல செயலணிகளும் தமது அக்கறையை வெளியிட்டிருந்தன. இலங்கைக்கு தமது விஜயங்களை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளான, மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், ஆயுத மோதல்களில் அகப்பட்டுள்ள சிறார்கள் நலன் தொடர்பான விசேட பிரதிநிதி மற்றும் சட்டவிரோதப் படுகொலைகள், கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான விசேட பிரிதிநிதி போன்ற அனைவருமே, இலங்கையில் தண்டனை வழங்கப்படாத விதத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவது பற்றியும், சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்த வேண்டிய அமைப்புக்களும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயலணிகள் என்பன தமது கடமையில் தவறியுள்ள நிலைமைகள் நிலவுவது தொடர்பாகவும் எச்சரித்திருந்தன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களும் இந்நிலைமை தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக்களைத் தெரிவித்திருந்தன.
படிப்படியாக அதிகரித்து வந்த சர்வதேச அக்கறை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிபலிப்பானது இரண்டு வகையாக அமைந்திருந்தது. ஒருபுறம், தாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடனும் மனித உரிமை வல்லுனர்களுடனும் ஒத்துழைப்பதற்கான தமது விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை முன்னேற்றுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தமது பங்காளர்களிடம் கடும் பரப்புரைகளில் ஈடுபட்டது. ஆனால் மறுபுறமாக, ஐ.நா. அதிகாரிகள் உட்பட தம்மை விமர்சிப்பவர்கள் மீது அரசாங்கம் கடும் தாக்குதலையும் மேற்கொண்டது.; அவர்கள் நாட்டின் நிலைமை தொடர்பாக அக்கறையின்றி இருப்பதாகவும் அவர்கள் புலிகளின் அனுதாபிகள் எனவும் மோசமாக தனது தாக்குதலை மேற்கொண்டது.
மனித உரிமை மீறல்கள் பரவலாக நிகழும் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கமானது தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் நிலைமையானது, நாடு முழுவதும் பரந்தளவில் அரசாங்கப் படைகளினாலும் புலிகள் இயக்கத்தினாலும் நடத்தப்பட்டுவரும் மோசமான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக ஐ.நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு செயலணியொன்றை நிறுவுவதற்கான சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றை அமைக்கும்படி ஐரோப்பிய யூனியன் மற்றும் மிக அண்மையில் அமெரிக்கா அரசாங்கம் என்பன உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. அவ்வாறான ஒரு செயலணி ஒன்றை நிறுவுவது தொடர்பாக தமது காரியாலயமானது இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்றத் தயாராக இருப்பதற்கான விருப்பத்தை ஐ.நா.வின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) 2007 டிசம்பரில் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது தெரிவித்திருந்தார்.

சர்வதேச கண்காணிப்பு செயலணிகள் அமைக்கும் சகல விதமான முன்மொழிதல்களையும் இலங்கை அரசாங்கமானது முற்றுமுழுதாக நிராகரித்து விட்டது. அதன் இத்தகைய பிரதிபலிப்பானது, சகல குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குகின்ற வகையில் தாம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக வெளியிட்ட அதன் கூற்றையே பொய்யாக்குகின்றது.

முக்கியமான பரிந்துரைகள்

  • நாட்டில் நடந்துகொண்டிருக்கும் “காணாமல் போதல்” சம்பவங்களின் அளவையும் அவற்றில் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினருக்கு இருக்கும் பங்கையும் இலங்கை அரசாங்கமானது பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.
“காணாமல் போதல்கள்” தொடர்பான நிலைமையை அரசாங்கம் அக்கறையுடன் கவனத்தில் எடுப்பது மட்டுமன்றி அதன் அக்கறையை தெளிவாக வெளிக்காட்டும்வரை, இத்தகைய செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை முன்னேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் செய்துவிட முடியாது. எவ்வாறாயினும் அரசாங்கம் எத்தனை விதமான செயலணிகளை நியமித்தாலும், சிரேஷ்ட அதிகாரிகள் இத்தகைய பாரதூரமான சம்பவங்கள் எதுவுமே நடக்கவில்லையென நிராகரிக்கும் வரை அச்செயலணிகளின் பணிகள் வெற்றியளிக்கப் போவதில்லை. பாதுகாப்புப் படையினரும், அரசாங்கத்துக்கு சார்பான ஆயுதக் குழுக்களும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன என்பதையும், இத்தகைய பிரச்சினையொன்று உண்மையிலே இருக்கின்றது என்பதையும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி ஏற்றுக்கொள்வதே இதனைத் தீர்ப்பதற்கு மிக அவசியமான ஆரம்பப் புள்ளியாகும்.
  • இலங்கை அரசாங்கமானது நபர்களைத் தடுத்து வைக்கும் தமது நடைமுறைகளை மீள்சீராக்கம் செய்வதுடன், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதுடன், சர்வதேச செயல்முறை தராதரங்களுக்கேற்ப ஒழுகி நடந்து கொள்ளல் வேண்டும்.
தொடர்ந்தும் புதிதாக பரவலான “காணாமல் போதல்கள்” நடைபெறுவதைத் தடுப்பதற்காக, கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்து வைக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனிநபர்கள் தமது குடும்பத்தினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்குவதோடு எந்தவித இடையூறுமின்றி தமது சட்டதரணியைச் சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டுவரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன்வைக்கப்படல் வேண்டும்.

  • “காணாமல் போதல்கள்” பொறுப்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கமானது தீவிரமாக விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைத்தல் எனனும் நடைமுறை மிகக் குறைவாக இருக்கும் சூழ்நிலையும் “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினை அதிகரிக்க வழிசமைக்கும் ஒரு பிரதான காரணியாகும். இந்த அறிக்கையில் ஆவணப் படுத்தப்பட்டிருப்பவை உட்பட சகல சட்டவிரோத கைதுகள் மற்றும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் என்பவை தொடர்பாக, ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாகவும் பகிரங்கமாகவும் உறுதிப்படுத்தப்படும்வரை அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். “காணாமல் போதல்” சம்பவங்களுக்கு பொறுப்பான பாதுகாப்புப் படை அதிகாரிகளோ அல்லது அரசோடு தொடர்பில்லாத ஆயுதக் குழுக்களோ, எவராயிருப்பினும் அவர்கள் மீது தகுந்த வகையில் சட்ட நடவடிக்கை அல்லது ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
  • மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்படும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அனைத்தையும் கண்காணித்து அறிக்கையிடுவதற்காக, சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயத்தில் அரசாங்கமும் புலிகள் இயக்கமும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் காரியாலயத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அனுபவமுள்ள சர்வதேச ரீதியான கண்காணிப்பு குழுவொன்றை நியமிப்பதன் மூலம் உயிர்கள் பாதுகாக்கப்படுவது மற்றும் உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படுவது என்பதுடன் பொறுப்புக் கூறும் நடைமுறையையும் முன்னேற்ற முடியும். இந்தப் பொறுப்பானது தனியே இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகள் இயக்கத்தின் மீதும் மாத்திரமன்றி இது தொடர்பாக அக்கறை கொண்ட சர்வதேச செயற்பாட்டாளர்களிடமும் தங்கி இருக்கின்றது. இத்தகைய கண்காணிப்பு குழுவொன்றை நிறுவுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுக்கும் நிலைப்பாடானது தொடர்ச்சியாக நிகழும் பிரச்சினைக்கு பொய்யாக அல்லாமல் உண்மையாகவே நடவடிக்கை எடுப்பதற்கான அதன் விருப்பத்தையும், மனித உரிமைகள் தொடர்பாக அதன் அக்கறையையுமே எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சோதனையாக அமையும் என்பதை இச்சர்வதேச செயற்பாட்டாளர்கள் தெளிவாக அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தல் வேண்டும். சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது உட்பட, “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பும் நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம் என்னும் நிபந்தனையின் அடிப்படையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பக்காளிகள், குறிப்பாக இந்தியாவும் ஜப்பானும் தமது இராணுவ மற்றும் மனிதாபிமான நோக்கல்லாத (non-humanitarian) உதவிகளைச் தொடர்ந்து செய்வதற்கு முன்வருதல் வேண்டும்.

பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” என்னும் பிரச்சினையைக் கையாளுகின்ற விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு என்பது குறிப்பாக பயனுறுதிமிக்கதாக இருந்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. போதிய வளங்களும் தகுந்த ஆணையும் வழங்கப்பட்டால், அரசாங்கமும் ஏனைய பல்வேறு தேசிய செயலணிகளும் நிறைவேற்றத் தவறிய பணியை சர்வதேச கண்காணிப்பு செயலணியால் நிறைவேற்ற முடியும். எந்தவித இடையூறுமின்றி தடுப்புக் காவல் நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களை உறுதிப்படுத்தல், குறிப்பான ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பான விபரங்களையும் மோதலில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரிடமிருந்தும் கோருதல், சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் உதவியாக இருக்கும் வகையில் தேசிய ரீதியிலான மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புக்களுக்கு உதவுதல், முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த ஆவணப்படுத்தலை மேற்கொள்ளல்; என்பன அப்பணிகளில் சிலவாம்.

பரிந்துரைகள்
இலங்கை அரசாங்கத்திற்கு:

  1. பெருந்தொகையான “காணாமல் போதல்கள்” நடந்துள்ளமை தொடர்பாக அரசென்ற வகையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு அதனை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும். இராணுவத்தினரும் பொலீசாரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்டங்களுக்கு அமைவாக முழுமையாக ஒழுகி நடந்து கொள்வதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
  2. மனித உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளை சிறுமைப்படுத்துகின்ற வகையிலான சட்டங்களை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.
  3. நிட்சயமற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுகளை மேற்கொள்ள வகை செய்கின்றதும், குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்புப் படையினர் தண்டனையின்றி தப்புவதற்கு வகை செய்வதும், மரண விசாரணைகளின் விபரங்கள் அறிவிக்கப்படாமலும், பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தாமலும் இறந்தவர்களின் உடல்களை அழிப்பதற்கு வகை செய்வதுமான அவசரகால சட்ட விதிகளை இரத்துச் செய்தல் வேண்டும், அல்லது மீள்சீராக்கம் செய்தல் வேண்டும்.
  4. தடுத்து வைத்தல் தொடர்பாக வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்:
    • பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுவோர் அனைவரும் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் மாத்திரம் தடுத்துவைக்கப்படல் வேண்டும். அதேவேளை கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தம்மை சரியாக அடையாளம் காண்பிப்பதோடு, உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை காண்பிக்கவும் வேண்டும்.
    • • தடுத்துவைக்கப்படும் இடங்கள் அனைத்திலும், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகல நபர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் இருப்பதற்கு வகை செய்தல் வேண்டும். கைது செய்யப்பட்ட திகதி, நேரம், கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயர், கைதுக்கான காரணம் மற்றும் அவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு பொறுப்பான பாதுகாப்புப் படை பிரிவு போன்ற விபரங்கள் அவ்வாவணங்களில் இருப்பதற்கு வகை செய்தல் வேண்;டும். தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் குடும்பத்தினர், சட்டதரணி மற்றும் அந்நபர் தொடர்பாக சட்ட ரீதியாக அக்கறை கொண்ட நபர்கள் அனைவரும் அவ்வாவணங்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும். தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படும்போது அவ்விபரங்கள் அனைத்தும் அவ்வாவணங்களில் பதியப்பட்டிருத்தல் வேண்டும்.
    • • தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக ஒரு நீதிபதிக்கு முன்னால் கொண்டு வரப்பட்டு அவரது கைதுக்கான காரணங்கள் முன் வைக்கப்படுவதோடு அவர் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதும் முன்வைக்கப்படல் வேண்டும். கைது செய்யப்பட்டவுடன் அவரது கைதுக்கான காரணமும் அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான விபரங்களும் அவரது குடும்பத்தினருக்கு அறியத் தரப்படல் வேண்டும். தடுத்து வைக்கப்படும் எந்தவொரு நபரும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கும் அவரது சட்டதரணியை எவ்வித இடையூறுமின்றி சந்திப்பதற்கும் வகை செய்யப்படல் வேண்டும்.
    5. ஐ.நா.வின் ஆதரவுடன் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு செயலணியொன்றின் வருகையை ஏற்றுக் கொள்வதோடு அதனுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஏற்றுக்கொள்ளல் வெண்டும்
    6. சட்டவிரோதமான கைதுகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தியவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொள்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதொடு அது தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைப்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
    • “காணாமல் போதல்கள்” என்பது ஒரு குற்றவியல் குற்றச் செயலாகும் என அறிவிப்பதோடு அக்குற்றச் செயலின் தாற்பரியத்திற்கேற்ப பொருத்தமான வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.
    • இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சம்வங்கள் உட்பட, சகலவிதமான சட்விரோத கைதுகள் தொடர்பாகவும் பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும். ஒவ்வொரு சம்பவத்திலும் அந்த நபர் எங்கிருக்கிறார், அல்லது அவருக்கு நேர்ந்த கதியென்ன என்பது அறியப்பட்டு, அவை தெளிவாக பகிரங்கப்படுத்தப்படும் வரையில் விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பொருத்தமான வகையில் சர்வதேச நடைமுறை தராதரங்களுக்கேற்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் அல்லது ஒழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
  • இராணுவ உயர்மட்ட அதிகாரிகளோ அல்லது சிவில் உயர் அதிகாரிகளோ எவராயிருந்தாலும், அவர்கள், தமது ஆணையின் கீழ் உள்ள படையணிகள் அல்லது சக்திகள் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் அல்லது ஈடுபட்டிருக்கக் கூடும் எனத் தெரிந்திருந்தும் அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காதிருந்தமை தொடர்பாக அவர்களை பொறுப்புக் கூற வைத்தல் வேண்டும்.
  • கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” என்பவற்றுக்கு பொறுப்பான அரச தரப்பல்லாத கருணா குழுவினரையும் ஈ.பி.டி.பி அமைப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதோடு, பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு உடந்தையாக இருந்திருப்பின் அது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

7. கடத்தல்கள் மற்றும் “காணாமல் போதல்கள்” பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயனுறுதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட தேசிய ரீதியான செயலணிகளை வலுப்படுத்துதல் வேண்டும்.
  • கடத்தல்கள், கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தல் வேண்டும்;. (திலகரத்ன கமிஷன் அறிக்கை)
  • இலங்கை அரசியலமைப்பின்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு சுயாதீனத்தை மீள நிலை நிறுத்துதல் வேண்டும். பொலீஸ், இராணுவம் உட்பட சகல அரச நிறுவனங்களும், விசாரணைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவதோடு, அதனுடன் ஒத்துழைக்காவிடின் அதற்கு பொறுப்புக்;கூற வைத்தலையும் உறுதி செய்தல் வேண்டும்.
8. பலவந்தமான முறையில் மற்றும் தன்னிச்சையின்றிய காணாமல் போதல்கள் தொடர்பாக ஐ.நா. செயலணியொன்றின் வருகைக்காக தாமாகவே முன்வந்து அழைப்பு விடுப்பதுடன் அதற்கான கால அட்டவனையையும் நியமித்தல் வேண்டும்.
9. பலவந்தமான முறையில் காணாமல் போதல்களில் இருந்து சகல நபர்களும்; பாதுகாக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சர்வதேச சட்டத்தை ஏற்று சட்டவலு அளிப்பதுடன் அதற்கு வலுச் சேர்க்கின்ற வகையில் உள்ளுர் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டு வருதல் வேண்டும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ((LTTE):
1. கடத்தல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் அனைத்தையும் நிறுத்துதல் வேண்டும். சிறார்களையும் வயது வந்தவர்களையும் பலவந்தமாகக் கடத்தி படையில் சேர்த்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற அங்கத்தவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
2. தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எனக் கண்டறிவதற்கும், சிறார்களை படையணிகளில் இருந்து விடுவிப்பதற்குமாக, யுனிசெப் உட்பட சர்வதேச அமைப்புக்களை புலிகள் இயக்கத்தின் முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
3. ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை நிறுவுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நிதியுதவி செய்யும் அரசாங்கங்களுக்கு:
1. இலங்கையில் “காணாமல் போதல்கள்” என்னும் விடயம் தொடர்பாக ஒருங்கிணைக்கப்பட்ட கடுமையான பிரதிபலிப்பொன்றை காட்டுவதை உறுதிப்படுத்தல் வேண்டும். மோதல்களில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினராலும் செய்யப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பகிரங்க கண்டனங்களைத் தொடர்சியாக தெரிவிக்க வேண்டும்.
2. பரந்த அளவில் நிகழும் “காணாமல் போதல்கள்” என்னும் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும்படியும், விசாரிக்கப்படாமல் இருக்கும் சம்பவங்களை தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தும்படியும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கையோ அல்லது ஒழுக்க நடவடிக்கையோ எடுக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறத்த வேண்டும்.
3. இதுவரை இதனை வலியுறுத்தாத நாடுகள், குறிப்பாக இந்தியா, இலங்கையில் மிகவும் சீரழிந்து வரும் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக தமது அக்கறையை வெளியிடுவதுடன் அப்பிரச்சினையைக் கையாளுகின்ற சர்வதேச முயற்சியுடன் இணைந்து கொள்ளல் வேண்டும்.
4. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் செயலணியொன்றை ஏற்றுக் கொண்டு, “காணாமல் போதல்கள்” தொடர்பாக நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரிலேயே இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குகின்ற நாடுகள் தமது மேலதிக உதவிகளை வழங்க முன்வருதல்; வேண்டும்.
5. ஐ.நா. சபையின் ஆதரவின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பொன்றை உருவாக்குவதற்கான பூரணமான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும். அத்தகைய அமைப்பொன்றின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தையும் வலியுறுத்தல் வேண்டும்.
''''''''''''''''''''''''''''''''''''
pdf கோப்பில் பார்க்க
HRW - வீடியோ விபரணம்
புகைப்படம்

Friday, February 15, 2008

வெள்ளைப் பூக்கள்


"பூக்களுடன் சிங்களச் சிறுவன்"/ October 1988
Courtesy Paige W. Thompson
இணையத்தளம்: country-data

நீத்தவர் நிலம்

மாவீரர் துயிலும் இல்லம், யாழ்ப்பாணம்








"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது."
-வே.பிரபாகரன்



நன்றி: முத்தமிழ் மன்றம்
புகைப்படப்பிடிப்பாளர்: தெரியவில்லை.